பிரதமர் அலுவலகம்

கோவிட் -10 நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பிரதமரின் நிறைவுரை

Posted On: 15 MAR 2020 6:44PM by PIB Chennai

மேதகைமை மிக்கவர்களே,

உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கும், சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நாம் மிகவும் ஆக்கபூர்வமான கலந்தாடல்களை நடத்தியிருக்கிறோம்.

இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள, பொதுவான ஓர் அணுகுமுறை தேவை என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம்.

கூட்டுறவு முறையில் தீர்வுகளைக் காண, நமது அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், திறன்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், சாத்தியமான சமயங்களில் ஆதாரவளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.

சில நாடுகள் குறிப்பிட்ட சில கோரிக்கைகளை, மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தன. இதுகுறித்து எனது குழுவினர் கவனமாக குறிப்புகள் எடுத்துக் கொண்டுள்ளனர். அருகில் உள்ள நாடுகளுக்கு எங்களால் முடிந்த வரையில் உதவிகள் அளிப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

பங்கேற்பு நிலையிலான செயல்பாடு, கூட்டான செயல்பாடு ஆகியவற்றில் பொதுவான அணுகுமுறையை உருவாக்க எங்கள் அதிகாரிகள் நெருக்கமான தொடர்புகளைப் பராமரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நம் ஒவ்வொரு நாட்டிலும் முன்னோடி நிபுணர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், நாம் இன்று நடத்திய கலந்தாடல்களின் பின்தொடர்ச்சிகள் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் இதேபோன்ற வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேதகைமை மிக்கவர்களே,

இந்தப் போரில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், ஒன்றாகச் சேர்ந்து நாம் வெற்றி பெற வேண்டும்.

பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உலகின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

நம் நாடுகளின் அனைத்து குடிமக்களுக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கவும், நமது பிராந்தியத்தில் இந்தத் தொற்று நோயை சமாளிப்பதில் நம்முடைய ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவும் வாழ்த்து கூறி நான் நிறைவு செய்கிறேன்.

நன்றி.

மிக்க நன்றி.


(Release ID: 1607045) Visitor Counter : 179