பிரதமர் அலுவலகம்
புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பெருமிதம்
நாடு முழுக்க 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை (எப்.பி.ஓ.-க்கள்) பிரதமர் தொடங்கி வைத்தார்
Posted On:
29 FEB 2020 6:30PM by PIB Chennai
2018 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தட பகுதியில் வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், 296 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு சித்ரகூட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (29.02.2020) அடிக்கல் நாட்டினார். ரூ.14,849 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த விரைவு நெடுஞ்சாலை சித்ரகூட், பாண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலாவுன், அரேயா, எட்டாவா மாவட்டங்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளும் தொடங்கி வைக்கப்பட்டன. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்குவதன் முழுமையாக்கல் முயற்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நாட்டில் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு. மோடி, புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை அல்லது திட்டமிடப்பட்டுள்ள கங்கா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதுடன் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பெரிய நகரங்களில் உள்ள வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறினார்.
பாதுகாப்புத் துறையில், தரையில் பயன்படுத்தும் சாதனங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் முதல் போர் விமானங்கள் வரையிலான விஷயங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள், உணர்பொறிகள் போன்றவை பெருமளவில் தேவைப்படுவதைப் பட்டியலிட்ட பிரதமர், உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடத்திற்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தெரிவித்தார். புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் உத்தரப்பிரதேச பாதுகாப்புத் துறை தொழில் வழித்தட திட்டத்துக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்கி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு, 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இதுவரை உற்பத்தியாளராக மட்டுமே இருந்த விவசாயிகள், இனிமேல் இந்த மையங்கள் மூலம் வணிகமும் செய்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். விவசாயிகளுக்காக இந்த அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளைப் பட்டியலிட்ட பிரதமர், குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், மண்வள அட்டை, 100 சதவீதம் வேம்பு தடவிய யூரியா, பல தசாப்த காலங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திட்டங்களை பூர்த்தி செய்தல் என விவசாயிகள் தொடர்பான எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் இந்த அரசு முனைப்புக் காட்டி வருகிறது என்று தெரிவித்தார்.
விவசாயிகள் உற்பத்தியாளர் மையங்கள் மூலமாக, விவசாய உற்பத்திப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இன்னும் நல்ல விலைக்கு விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே வகையில், நாட்டில் `உயர் வளர்ச்சி நோக்கம் தேவைப்படும் மாவட்டங்கள்' என்ற வகையில் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், குறைந்தபட்சம் ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் சித்ரகூட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 கோடி விவசாயக் குடும்பங்கள், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசின் உதவிகளைப் பெறும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், இந்த உதவிகள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் பெயரில், புந்தேல்கண்ட் பெயரில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், விவசாயிகளின் கைகளுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையுடன் இப்போதைய நிலையை அவர் ஒப்பீடு செய்தார். பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீடு மற்றும் பிரதமரின் ஜீவன் சுரக்சா காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். ``நெருக்கடியான காலங்களில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைப்பதை இத்திட்டங்கள் உறுதி செய்யும்'' என்று பிரதமர் கூறினார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு 16 அம்சத் திட்டம் உருவாக்கப் பட்டிருப்பதாக பிரதமர் திரு. மோடி அறிவித்தார். தனது விளைநிலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவுக்குள் கிராமப்புற சந்தை (Haat) வசதி கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார். இதன் மூலம் நாட்டில் எந்தவொரு சந்தையுடனும் விவசாயி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் வேளாண் பொருளாதாரத்தில் கிராமப்புற சந்தைகள் புதிய மையங்களாக உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.
*****
(Release ID: 1604899)
Visitor Counter : 252