பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் 2.0’, 9-ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் – 23.02.2020
Posted On:
23 FEB 2020 11:37AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, கட்ச் தொடங்கி கோஹிமா வரை, கஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமரி வரை, நாட்டில் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள மனதின் குரல் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்திருப்பதை நான் என் பேறாகக் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நமது நாட்டின் விசாலத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை நினைவில் இருத்துவது, அதனைப் போற்றுவது ஆகியன அனைத்து இந்தியர்களுக்குக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பன்முகத்தன்மையை அனுபவிப்பது எனும் சந்தர்ப்பம் இருக்கிறதே, அது சிலிர்ப்பை ஏற்படுத்துவது, மனதில் ஆனந்தத்தை நிரப்புவது, ஒருவகையில் உத்வேகம் அளிப்பது. சில நாட்கள் முன்பாக, கைவினைக் கலைஞர்களுக்கான சந்தையான தில்லியின் ஹுனர் ஹாட்டில் ஒரு சின்ன இடத்தில், நமது நாட்டின் விசாலத்தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், உணவுப்பழக்கங்கள், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் காண முடிந்தது. பாரம்பரியமான ஆடைகள், கைவினைப் பொருட்கள், தரைவிரிப்பு, பாத்திரங்கள், பிரம்பு, பித்தளைப் பொருள்கள், பஞ்சாபின் பூத்தையல், ஆந்திரத்தின் அருமையான தோல் பொருட்கள், தமிழ்நாட்டின் அழகான ஓவியங்கள், உத்திர பிரதேசத்தின் பித்தளைப் பொருட்கள், பதோஹீயின் தரை விரிப்புகள், கட்சின் செம்புப் பொருட்கள், பலவகையான வாத்தியக்கருவிகள், எண்ணிலடங்கா விஷயங்கள், ஒட்டுமொத்த பாரதநாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடு, உண்மையிலேயே அற்புதமானதாக இருந்தது; இவற்றின் பின்னணியில், கலைஞர்களின் அயரா உழைப்பும், ஈடுபாடும், தங்கள் திறன்பால் அவர்களுக்கு இருக்கும் நேசம் ஆகியன பற்றிய விஷயங்கள் மிகவும் கருத்தூக்கம் அளிப்பனவாக இருக்கின்றன. ஹுனர் ஹாட்டில் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் கூறியவற்றைக் கேட்ட போது மிகவும் நிறைவாக இருந்தது. முதலில் தான் நடைபாதையில் தனது ஓவியங்களை விற்பனை செய்து வந்ததாகவும், ஹுனர் ஹாட்டுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவரது வாழ்க்கையே மாறிப் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவர் தற்சார்பு உடையவராக இருப்பதோடு, தனக்கென ஒரு வீட்டையும் வாங்கி இருக்கிறார். ஹுனர் ஹாட்டில் பல கலைஞர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஹுனர் ஹாட்டில் பங்கெடுத்துவரும் கலைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஹுனர் ஹாட் வாயிலாக, சுமார் மூன்று இலட்சம் கைவினைஞர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹுனர் ஹாட் என்பது கலையை வெளிப்படுத்த ஒரு மேடையாக இருப்பது என்னவோ சரிதான், அதோடு கூடவே இது, மக்களின் கனவுச் சிறகையும் விரிக்கிறது. இந்த இடத்தில் நாட்டின் பன்முகத்தன்மையைக் கண்டும் காணாமல் இருப்பது இயலாத காரியம். சிற்பக்கலை தவிர, நமது உணவுகளில் இருக்கும் வகைகள் நாவுக்கு விருந்து படைக்கின்றன. ஒரே வரிசையில் இட்லி தோசை, சோலே படூரே, தால் பாடீ, கமன் காண்ட்வீ என ஏராளமான உணவுப் பதார்த்த வகைகள். நானேகூட அங்கே பிஹாரின் சில சுவையான லிட்டீ சோகேவைச் சுவைத்துப் பார்த்து ரசித்தேன், அனுபவித்தேன். நாட்டின் ஒவ்வொரு பாகத்திலும் இத்தகைய மேளாக்கள், கண்காட்சிகள் ஆகியன நடைபெற்று வருகின்றன. இந்தியாவைத் தெரிந்து கொள்ள, இந்தியா பற்றிய அனுபவத்தைப் பெற, எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சென்று பாருங்கள். ஒரே பாரதம் உன்னத பாரதத்தை முழுக்க முழுக்க வாழ்ந்து பார்க்க இது பொன்னான வாய்ப்பாக மலர்கிறது. நீங்கள் தேசத்தின் கலை-கலாச்சாரத்தோடு இணைவீர்கள், கடுமையாக உழைக்கும் கைவினைஞர்கள், குறிப்பாக பெண்களின் தன்னிறைவுக்கு உங்கள் பங்களிப்பையும் அளிப்பீர்கள். அவசியம் போய் வாருங்கள்!!
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது நாட்டில் மகத்தான பாரம்பரியங்கள் பல உண்டு. நமது முன்னோர்கள் இவற்றை நமது சொத்தாக நமக்கு அளித்திருக்கிறார்கள், கற்றல் கற்பித்தல் வாயிலாக இவை நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதில் ஜீவராசிகளிடத்தில் தயையை வெளிப்படுத்துவது, இயற்கையின்பால் நேசம், போன்றவை நமது கலாச்சாரப் பாரம்பரியக் கொடை. நமது தாய்த்திருநாட்டின் இத்தகைய விருந்தோம்பல் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலவகையான புள்ளினங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருகை தருகின்றன. பாரதம் ஆண்டு முழுவதிலும் பல புலம்பெயர் பறவை இனங்களுக்குப் புகலிடமாக விளங்குகிறது. இப்படி வரும் 500க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பற்பல வகையானவை, பற்பல இடங்களிலிருந்து வருபவை எனத் தெரிவிக்கிறார்கள். கடந்த நாட்களில், காந்திநகரில் COP – 13 மாநாடு நடைபெற்றது; இதில் பறவை இனங்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது, ஆய்வு செய்யப்பட்டது, கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன, இந்தியாவின் முயற்சிகள் பாராட்டப்பட்டன. நண்பர்களே, நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், புலம்பெயர் பறவை இனங்கள் குறித்து நடைபெறவிருக்கும் COP மாநாட்டுக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் வரை பாரதம் தலைமை வகிக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாக நீங்கள் உங்கள் ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்.
COP மாநாடு மீது நடைபெற்று வரும் விவாதங்களுக்கு இடையில், என்னுடைய கவனம் மேகாலயத்தோடு தொடர்புடைய ஒரு முக்கியமான தகவல்பால் சென்றது. தற்போது தான் உயிரியலாளர்கள், ஒரு புதிய வகை மீன் இனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், இது மேகாலயத்தின் குகைகளுக்குள்ளே மட்டுமே காணப்படுகிறது. நிலத்துக்கு அடியில் குகைகளுக்கு உள்ளே வசிக்கும் நீர்வாழ் உயிரினங்களிலேயே மிகப் பெரியதாக இந்த மீன் கருதப்படுகிறது. ஒளி புகமுடியாத இடங்களிலும்கூட, இருள்நிறைந்த, ஆழமான நிலத்தடிக் குகைகளுக்கு உள்ளே இந்த மீன் வாழ்கிறது. விஞ்ஞானிகளுக்கும் இந்தத் தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதாவது இத்தனை பெரிய மீனால், இத்தனை ஆழமான குகைகளுக்கு உள்ளே எப்படி உயிர் வாழ முடிகிறது?? நமது பாரதநாடு, குறிப்பாக மேகாலயம் இத்தகைய அரியவகை இனத்துக்கான வாழ்விடமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். பாரதநாட்டின் உயிரினப் பன்முகத்தன்மைக்கான ஒரு புதிய பரிமாணமாகத் திகழ்கிறது. நம்க்கருகே இப்படிப்பட்ட அநேக அற்புதங்கள் இன்னமும்கூட கண்டுபிடிக்கப்படாதவையாக இருக்கின்றன. இந்த அற்புதங்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு தணியாத ஆர்வம் அவசியமாகிறது.
மகத்துவம் வாய்ந்த பெண்புலவரான ஔவையார் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.
நமது நாட்டின் பன்முகத்தன்மை விஷயத்திலும் இதுதான் உண்மை, அது பற்றி நாம் அறிந்திருப்பது மிகக் குறைவே. நமது பல்லுயிர்த்தன்மையும் மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான பொக்கிஷம்; இதை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
என் நெஞ்சம்நிறை இளைய நண்பர்களே, இப்போதெல்லாம் நமது நாட்டின் குழந்தைகளிடம் அறிவியல்-தொழில்நுட்பத்தின் பால் ஆர்வம் தொடர்ந்து கூடி வருகிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் சாதனைகள், புதிய திட்டங்கள் ஆகியன ஒவ்வொரு இந்தியருக்குமே பெருமிதம் அளிக்கக்கூடியவையாக இருக்கிறது. நான் சந்திரயான் 2 ஏவப்பட்ட சமயத்தில் பெங்களூரூவில் இருந்தேன், அங்கே இருந்த குழந்தைகளின் உற்சாகத்தை என்னால் கண்கூடாகக் காண முடிந்தது. சற்றும் அவர்கள் கண் அயரவில்லை. ஒருவகையில் இரவு முழுவதும் அவர்கள் விழித்திருந்தார்கள். அவர்கள் மனங்களில் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகள் படைத்தல் ஆகியவை தொடர்பாக இருந்த உற்சாகத்தை என்னால் என்றும் மறக்கவே இயலாது. குழந்தைகளின், இளைஞர்களின் இந்த உற்சாகத்தை ஊக்குவிக்க, அவர்களிடம் அறிவியல் மனப்பாங்கை வளர்க்க, மேலும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இப்போது ஸ்ரீஹரிக்கோட்டாவில் விண்கலங்கள் ஏவப்படும் போது நீங்கள் அருகிலிருந்தே பார்க்க முடியும். தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து 10000 மக்கள் அமர்ந்து பார்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்ரோவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு வாயிலாக இணையவழியிலேயே நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பல பள்ளிகள் தங்கள் மாணவர்களை விண்கலம் ஏவப்படுவதைக் காணவும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் சுற்றுலாவாகக் கூட்டிக் கொண்டும் வருகிறார்கள். இனிவரும் காலத்தில் இதனால் பயனடையுங்கள் என்று நான் அனைத்துப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நண்பர்களே, நான் உங்களனைவருக்கும் மேலும் ஒரு சுவாரசியமான தகவலை அளிக்க விரும்புகிறேன். நான் நமோ செயலியில் ஜார்க்கண்டின் தன்பாதில் வசிக்கும் பாரஸ் அவர்களின் பதிவைப் படித்தேன். இஸ்ரோவின் யுவிகா திட்டம் பற்றி நான் இளைய நண்பர்களிடம் பேச வேண்டும் என்று பாரஸ் அவர்கள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர்களை அறிவியலோடு இணைப்பதற்காக, இஸ்ரோவின் பாராட்டுதற்குரிய முன்னெடுப்பு தான் யுவிகா. 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் பள்ளிக் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. யுவிகா என்றால் இளைய விஞ்ஞானித் திட்டம். இந்தத் திட்டம் நமது தொலைநோக்கான, ”ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான்” என்ற கோட்பாட்டை அடியொற்றியது. இந்தத் திட்டத்தில், தேர்வுகளுக்குப் பிறகு, விடுமுறை நாட்களில் மாணவர்கள், இஸ்ரோவின் பல்வேறு மையங்களுக்கு வந்து விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல், விண்வெளிப் பிரயோகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். நேரடிப்பயிற்சி எப்படி இருக்கும், எந்த மாதிரியாக இருக்கும், எத்தனை சுவாரசியமாக இருக்கும் என்று எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? கடந்தமுறை யாரெல்லாம் அதில் பங்கெடுத்துக் கொண்டார்களோ அவர்களின் அனுபவத்தை அவசியம் படித்துப் பாருங்கள். நீங்களும் இதில் கலந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இஸ்ரோவின் யுவிகா இணையதளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். எனது இளைய நண்பர்களே, நான் இணையதளத்தின் பெயரைச் சொல்லுகிறேன், உங்கள் பேனா, நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் குறித்துக் கொள்ளுங்கள், அவசியம் இன்றே அந்த இணையதளத்துக்குச் சென்று பாருங்கள், சரியா? www.yuvika.isro.gov.in. குறித்துக் கொண்டீர்களா? சரி, நான் மீண்டும் சொல்கிறேன், www.yuvika.isro.gov.in.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, 2020ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று லத்தாக்கின் அழகான பள்ளத்தாக்குகள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவத்துக்கு சான்றாக விளங்கியது. லேயின் குஷோக் பாகுலா ரிம்போசீ விமானநிலையத்திலிருந்து, இந்திய விமானப்படையின் AN-32ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து வரலாறு படைத்தன. இந்தப் பயணத்தில் 10 சதவீதம் இந்திய உயிரி எரிபொருள் கலவை பயன்படுத்தப்பட்டது. இரு எஞ்ஜின்களிலுமே இந்தக் கலவை பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இதுமட்டுமல்ல, லேயின் எந்த விமானநிலையத்திலிருந்து இந்த விமானம் பயணப்பட்டதோ, அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருக்கும் விமானநிலையமாகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த உயிரி எரிபொருள், உணவுக்குப்பயன்படுத்தப்படாத தாவர எண்ணெயிலிருந்து தயார் செய்யப்பட்டது. இது பாரதத்தின் பல்வேறு பழங்குடியினப் பகுதிகளிலிருந்து வாங்கப்பட்டது. இந்த முயற்சிகள் காரணமாக கரிக்காற்று வெளியேற்றத்தில் குறைவு உண்டாவதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வாய்பிருக்கிறது. இந்த மகத்தான செயலுக்காக இதோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, அறிவியல் தொழிலக ஆய்வுக் குழுமமான CSIR, தெஹ்ராதூனில் உள்ள இந்திய பெட்ரோலியக் கழகத்தின் விஞ்ஞானிகள் தாம் உயிரி எரிபொருள் வாயிலாக விமானம் பறப்பதை சாத்தியமாக்கி இருக்கின்றார்கள். அவர்களின் இந்த சீரிய முயற்சி, நமது மேக் இன் இண்டியாவுக்கு, அதாவது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது புதிய பாரதம், இப்போது பழைய அணுகுமுறையோடு பயணிக்க விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும் அன்னையர்களும் முன்னே கால் பதித்து, சவால்களைத் தாங்களே கையாள்கிறார்கள்; இதனால் சமூகம் முழுவதிலும் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நம்மால் காண முடிகிறது. பிஹாரின் பூர்ணியாவில் நடந்த சம்பவம், நாடு முழுமையிலும் இருக்கும் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி, பல பத்தாண்டுகளாக வெள்ளப் பெருக்கால் அவதிப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், இங்கே விவசாயம் மற்றும் வருவாய்க்கான பிற மூலங்களை திரட்டுவது என்பது மிகவும் கடினமானதாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இதே சூழ்நிலைகளில் பூர்ணியாவைச் சேர்ந்த சில பெண்கள் வித்தியாசமானதொரு பாதையை தேர்ந்தெடுத்தார்கள். நண்பர்களே, முன்பு இந்தப் பகுதியில் பெண்கள், மல்பெரிச் செடிகளில் பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார்கள், இதன்மூலம் அவர்களுக்கு குறைவான வருமானமே கிடைத்து வந்தது. ஆனால் இதைக் கொள்முதல் செய்பவர்கள், இந்தப் பட்டுக்கூட்டிலிருந்து பட்டு இழையை உற்பத்தி செய்து பெரும் இலாபத்தை ஈட்டிக் கொண்டார்கள். ஆனால், இன்று பூர்ணியாவின் பெண்கள் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொண்டார்கள், காட்சியை முழுவதுமாக மாற்றியமைத்தார்கள். இந்தப் பெண்கள் அரசாங்க உதவியுடன், மல்பரி உற்பத்திக் குழு அமைத்தார்கள். இதன் பின்னர், அவர்கள் பட்டுக்கூட்டிலிருந்து பட்டு இழை தயார் செய்தார்கள்; பின்னர் இந்த இழைகளிலிருந்து புடவைகளை நெசவு செய்யத் தொடங்கினார்கள். முன்பெல்லாம் எந்த பட்டுக்கூட்டை விற்பனை செய்து குறைந்த வருவாயை அவர்கள் ஈட்டி வந்தார்களோ, இன்று அதே பட்டுக்கூட்டைப் பயன்படுத்தி புடவைகள் நெசவு மற்றும் விற்பனை மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். ”ஆதர்ஷ் ஜீவிகா மஹிலா மல்பரி உத்பாதன் சமூஹ்”, என்ற பெயரில் ஒரு மகளிர் குழுவை ஏற்படுத்தி இந்தச் சகோதரிகள் படைத்திருக்கும் அற்புதத்தின் தாக்கம் பல கிராமங்களைத் தொட்டிருக்கிறது. பூர்ணியாவின் பல கிராமங்களின் விவசாய சகோதரிகள், இப்போது புடவைகளை மட்டும் நெசவு செய்யவில்லை, பெரிய விழாக்களின் போது, கடைகளை நிறுவி விற்பனை செய்கிறார்கள். இன்றைய பெண்கள், புதிய சக்தி, புதிய எண்ணப்பாட்டோடு எந்தெந்த வகைகளில் புதிய இலக்குகளை அடைகிறார்கள் பாருங்கள்!!
என் மனதிற்கினிய நாட்டுமக்களே, நமது நாட்டின் பெண்களின் துணிவாண்மை, அவர்களின் தைரியம் ஆகியன ஒவ்வொருவருக்கும் பெருமிதம் தரும் விஷயம். உங்கள் அருகிலேயே கூட இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் இருக்கலாம். இவை எல்லாம் எப்படி பெண்கள் பழைய தளைகளைத் தகர்த்து வருகிறார்கள், புதிய சிகரங்களை எட்டிப் பிடித்து வருகிறார்கள் என்பதை நமக்குத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. உங்களிடம் நான் இப்போது 12 வயதான பெண், காம்யா கார்த்திகேயனின் சாதனை பற்றிப் பேச விரும்புகிறேன். காம்யா….. என்ற 12 வயதுப் பெண் Aconcagua மலையுச்சிக்குப் பயணித்து சாதனை படைத்திருக்கிறாள். இவர், தென்னமெரிக்காவின் ANDES மலைகளின் மிகப்பெரிய சிகரமான 7000 மீட்டர்கள் ஏறியிருக்கிறாள். இந்த மாதத் தொடக்கத்தில் சிகரம் தொட்டு அங்கே இந்தியாவின் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார் காம்யா என்பது ஒவ்வொரு இந்தியரின் மனதையும் தொடும் விஷயம். நாட்டுக்கே இப்படி பெருமை சேர்த்திருக்கும் காம்யாவின் புதிய திட்டத்தின் பெயர் மிஷன் சாஹஸ் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அவர் அனைத்துப் பெருந்தீவுகளிலும் இருக்கும் மிக உயரமான சிகரங்களையும் எட்டவிருக்கிறார். இந்த முயற்சிக்காக, அவர் வட மற்றும் தென் துருவங்களிலும் பனிச்சறுக்கு செய்ய வேண்டியிருக்கும். இந்த மிஷன் சாஹஸ் தொடர்பாக நான் காம்யாவுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளபடியே காம்யாவின் இந்தச் சாதனை அனைவரும் உடலுறுதியோடு இருக்க உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இத்தனை குறைவான வயதிலே காம்யா, எந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறாரோ, அதில் உடலுறுதியின் பங்களிப்பு மிகப்பெரியது. A Nation that is fit, will be a nation that is hit. உடலுறுதியோடு இருக்கும் நாடு, உச்சங்களைத் தொடும் நாடு. வரவிருக்கும் மாதங்கள் சாகஸ விளையாட்டுக்களுக்காகவும் மிகவும் உகந்தவை. இந்தியாவின் புவியியல் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்றால், நமது நாட்டில் இப்படிப்பட்ட சாகஸ விளையாட்டுகளுக்கான சந்தர்ப்பங்கள் ஏராளம் ஏராளம். ஒருபுறம் மிகவும் உயரமான மலைகள் என்றால், மறுபுறமோ கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பாலைவனம். ஒருபுறம் அடர்ந்த காடுகள் என்றால், வேறுபுறத்திலோ பரந்துபட்ட கடல்பரப்பு. ஆகையால் நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான இடத்தில், உங்களுக்கு விருப்பமான செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வாழ்க்கையை சாகஸத்தோடு இணையுங்கள் என்று நான் உங்களிடம் விசேஷமான வேண்டுகோளை முன்வைக்கிறேன். வாழ்க்கையில் சாகஸம் இருக்க வேண்டியது தானே!! மேலும் நண்பர்களே, 12 வயதே ஆன குழந்தை காம்யாவின் வெற்றிக்குப் பின்னர், அடுத்ததாக நீங்கள் 105 வயதான பாகீரதி அம்மாவின் வெற்றிக் கதையைக் கேட்டீர்களென்றால் ஆச்சரிப்படுவீர்கள். நண்பர்களே, வாழ்க்கையில் நாம் முன்னேற விரும்பினோம் என்றால், ஏதோ ஒன்றை சாதிக்க நினைத்தோம் என்றால், முதல் கட்டளை…. நமக்குள்ளே இருக்கும் மாணவனை என்றைக்கும் எக்காரணம் கொண்டும் இறக்க விடக்கூடாது. நம்முடைய 105 வயது நிரம்பிய பாகீரதீ அம்மா நமக்கெல்லாம் உத்வேகம் அளித்து வருகிறார். யார் இந்த பாகீரதீ அம்மா என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்!! பாகீரதீ அம்மா கேரளத்தின் கொல்லத்தில் வசித்து வருகிறார். மிகச்சிறிய வயதிலேயே இவர் தனது தாயை இழந்து விட்டார். சிறிய வயதில் திருமணம் நடந்தேறிய பிறகு கணவனையும் இழந்தார். ஆனால், பாகீரதீ அம்மா என்றுமே தனது மனோதைரியத்தைக் கைவிடவில்லை, தனது ஊக்கத்தைத் துறக்கவில்லை. பத்து வயதுக்கும் குறைவான வயதிலேயே அவர் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. தனது 105ஆவது வயதில் இவர் மீண்டும் தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். இத்தனை வயதான பிறகும்கூட, பாகீரதீ அம்மா 4ஆம் நிலைக்கான தேர்வை எழுதினார், மிகவும் ஆர்வத்தோடு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார். தேர்வு முடிவில் அவர் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். இதுமட்டுமல்ல, கணக்கில் அவர் நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அம்மா இப்போது மேலும் படிக்க விரும்புகிறார், மேலும் தேர்வுகளை எழுத விரும்புகிறார். பாகீரதீ அம்மா போன்றோர் தாம் இந்த நாட்டின் பலம். உத்வேகத்தின் வற்றாத ஊற்றுக்கள். நான் இன்று விசேஷமாக பாகீரதீ அம்மாவுக்கு என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, வாழ்க்கையின் விபரீதமான காலகட்டங்களில் நமது மனோதைரியம், பேரார்வம் எந்த ஒரு சூழ்நிலையையும் மாற்றியமைக்க வல்லது. இப்போது, ஊடகத்தில் ஒரு விஷயத்தை நான் படிக்க நேர்ந்தது, இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது முராதாபாதின் ஹமீர்புர் கிராமத்தில் வசிக்கும் சல்மான் பற்றியது. சல்மான், பிறப்பிலிருந்தே மாற்றுத்திறனாளி. அவருடைய கால்கள் செயல்படும் நிலையில் இல்லை. இந்த இடர்ப்பாட்டைத் தாண்டியும்கூட அவர் தோல்வியை ஏற்கவில்லை, சுயதொழில் செய்யும் முடிவை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி புரிய வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டார். அப்புறமென்ன, சல்மான் தனது கிராமத்தில் காலணிகள் மற்றும் சலவைத்தூள் தயாரிக்கும் பணியைத் தொடக்கினார். சில காலத்திலேயே அவருடன் 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்து கொண்டார்கள். சற்றே உங்கள் சிந்தையை செலுத்திப் பாருங்கள்…. சுயமாக நடக்க முடியாத சல்மான் மற்றவர்கள் நடப்பதை சுலபமாக்க காலணிகள் தயாரிக்கும் முடிவை மேற்கொண்டார். இதில் விசேஷமான விஷயம் என்னவென்றால் சல்மான் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயிற்சியும் அளித்தார். இப்போது இவர்கள் அனைவரும் இணைந்து தயாரிப்பு வேலைகளிலும், சந்தைப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் உழைப்பினால் இவர்கள், தங்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனத்துக்கும் இலாபத்தை ஈட்டியிருக்கிறார்கள். இப்போது இவர்கள் அனைவருமாக இணைந்து நாள் முழுவதும் 150 ஜோடிக் காலணிகளைத் தயாரிக்கிறார்கள். இதுமட்டுமல்ல, சல்மான் இந்த ஆண்டு மேலும் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மனவுறுதியை மேற்கொண்டிருக்கிறார். நான் இவர்கள் அனைவரின் துணிவு, இவர்களின் செயலாண்மை ஆகியவற்றுக்கு தலைவணங்குகிறேன். இப்படிப்பட்ட மனோவுறுதியை, குஜராத்தின் கட்ச் பகுதியின் அஜ்ரக் கிராமத்து மக்களிடத்திலும் காண முடிந்தது. 2001ஆம் ஆண்டில் பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு அனைவரும் கிராமத்தைத் துறந்து சென்று கொண்டிருந்த வேளையில், இஸ்மாயில் கத்ரி என்ற பெயர் கொண்ட மனிதர், கிராமத்திலேயே இருந்து, அஜ்ரக் ப்ரிண்ட் என்ற தனது பாரம்பரியமான கலைக்குப் பாதுகாப்பளிக்க அவர் முடிவெடுத்தார். என்ன ஆயிற்று? சில காலத்திலேயே வண்ணங்களால் உருவான அஜ்ரக் கலை, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது, கிராமம் முழுவதும், இந்தப் பாரம்பரியமான கைவினைத்திறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டது. கிராமவாசிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தங்களுடைய இந்தக் கலையைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், இதில் நவநாகரீகத்துக்கு ஏற்றபடி ஜோடனைகள் செய்து கொண்டார்கள். இப்போது பெரிய பெரிய ஆடை வடிவமைப்பாளர்கள், பெரிய பெரிய வடிவமைப்பு நிறுவனங்கள், அஜ்ரக் ப்ரிண்டை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்கள் காரணமாக இன்று அஜ்ரக் ப்ரிண்ட் என்பது ஒரு பெரிய ப்ராண்ட் ஆகி விட்டது. உலகின் மிக அதிக அளவில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இந்தக் கலையின்பால் கவரப்பட்டு வருகிறார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, நாடுமுழுவதிலும் மஹாசிவராத்திரி புனித நன்னாள் கொண்டாடப்பட்டது. சிவபெருமான், அன்னை பார்வதி ஆகியோரின் அருளாசிகளோடு நாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மஹா சிவராத்திரியன்று போலே பாபாவின் ஆசிகள் என்றும் உங்களோடு இருக்கட்டும், உங்களின் அனைத்து மன விருப்பங்களையும் அந்த அருளாளன் சிவன் நிறைவேற்றட்டும், உங்களிடம் அவர் சக்தியை நிறைக்கட்டும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கட்டும், உங்களுக்கு சந்தோஷங்களை அளிக்கட்டும், நீங்கள் நாட்டின் பொருட்டு உங்கள் கடமைகளைக் கடைபிடித்து வாருங்கள்!!
நண்பர்களே, மஹாசிவராத்திரியோடு வசந்தகாலத்தின் அழகு மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இனிவரும் நாட்களில் ஹோலிப் பண்டிகையும், இதனைத் தொடர்ந்து குடீ-பட்வாவும் வரவிருக்கின்றன. நவராத்திரி புண்ணியகாலமும் இதோடு இணையவிருக்கிறது. ஸ்ரீ இராமநவமித் திருநாளும் வரும். திருநாளும் பண்டிகையும் நமது நாட்டின் சமூக வாழ்க்கையின் இணைபிரியா அங்கங்கள். ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் ஏதோவொரு சமூக செய்தி மறைந்திருக்கிறது; இது சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே ஒற்றுமையாக இணைத்து வைக்கிறது. ஹோலிக்குப் பிறகு சைத்ர சுக்ல ப்ரதிபதாவிலிருந்து இந்திய விக்ரமீ புத்தாண்டுத் தொடக்கம் நிகழும். இதற்காகவும், இந்தியப் புத்தாண்டுக்காகவும், நான் உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, அடுத்த மனதின் குரலின் போது, மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் முழுகவனத்தோடு ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாருக்கெல்லாம் தேர்வுகள் நிறைவடைந்து விடுகிறதோ, அவர்களின் ஆனந்தத்துக்கு அளவேது!! யாருக்கெல்லாம் தேர்வுகள் முடிவடையவில்லையோ, அவர்களுக்கு என் அநேக நல்வாழ்த்துக்கள். வாருங்கள், அடுத்த மனதின் குரலில் மேலும் பல விஷயங்களோடு நாம் சந்திப்போம்!! மிக்க நன்றி, வணக்கம்.
*****
(Release ID: 1604075)
Visitor Counter : 251
Read this release in:
Malayalam
,
Urdu
,
Assamese
,
Telugu
,
Gujarati
,
English
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Kannada