நிதி அமைச்சகம்

2020-21ஆம் ஆண்டின் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு

மகளிருக்கான சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கப்படும்

Posted On: 01 FEB 2020 2:27PM by PIB Chennai

2020-21ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மகளிர் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு, சமூக நலம் தொடர்பான பல்வேறு முக்கியத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகள்

                மக்களவையில் நிதியமைச்சர் ஆற்றிய பட்ஜெட் உரையில், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்’ திட்டம் மிகச் சிறந்த பயன்களை அளித்திருப்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். தற்போது அனைத்து நிலைகளிலுமான கல்வியில் பெண் குழந்தைகள் சேரும் விகிதம், ஆண்களைவிட அதிகரித்திருப்பதாகக் கூறினார். தொடக்கக் கல்வியில் பெண் குழந்தைகள் சேர்க்கை விகிதம் 94.32 சதவீதம் என்றும் ஆண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் 89.28 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இதே போன்ற உயர்வு விகிதம் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியிலும் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

2020-21ஆம் நிதியாண்டிற்கான ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களுக்கு ரூ.35,600 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள், பதின்ம வயதிலான பெண்கள், கருவுற்ற பெண்கள்,  பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக, 2017-18-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட போஷான் அபியான் திட்டம் (0-6 ஆண்டுகள்) மிகப்பெரும் கவனத்தை ஈர்த்திருப்பதாக அவர் கூறினார். நாடு முழுவதும் பத்து கோடி பேரின் ஊட்டச்சத்து நிலை குறித்து, தகவல் தெரிவிப்பதற்கு 6,00,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது முன் எப்போதும் இல்லாத முன்னேற்றம் என்றார்.

பெண்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், தாய்மை அடையும் பெண்களின் வயது தொடர்பான விபரங்களைத் தெரிவிப்பதற்கும் சிறப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தக் குழு ஆறு மாதத்தில்  தனது பரிந்துரைகளை அளிக்கும் என்றார். மகளிர் நலன்களுக்கு அரசு தொடர்ந்து உறுதி அளித்து வருவதை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், மகளிருக்கான சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சமூக நலம்

     மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியுடன் உள்ளதாகத்  தெரிவித்த நிதியமைச்சர், அந்த நிலையைப் போக்க, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், தேவையான தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளது என்றும்  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அந்த தொழில்நுட்பங்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

     2020-21ஆம் நிதியாண்டில் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை மேலும் மேம்படுத்த  அரசு உறுதி பூண்டிருப்பதாகவும், அதற்காக பட்ஜெட்டில் ரூ.85,000 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.53,700 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்,   மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.9,500 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

------



(Release ID: 1601579) Visitor Counter : 216