மத்திய அமைச்சரவை
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
29 JAN 2020 1:57PM by PIB Chennai
1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
உத்தேச திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோரில் இருவரின் கருத்து தேவை என்ற பிரிவு அறிமுகம்.
- கருவின் கால உச்சவரம்பை சிறப்புப் பிரிவு மகளிருக்கு 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயர்த்துவது. சிறப்புப் பிரிவு மகளிர் என்பது மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த விதிகளில் வரையறுக்கப்படும். இந்தப் பிரிவில் பாலியல் வன்முறையில் பிழைத்தவர்கள், தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள், சிறுமியர் போன்ற எளிதில் பாதிக்கப்படக் கூடிய இதர பெண்கள் அடங்குவர்.
- மருத்துவ வாரியம் நோய் அறியும் சோதனைகள் மூலம் கண்டுபிடித்த அதிக அளவில் இயல்பு நிலை மாறிய கரு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகபட்ச கரு வயது பொருந்தாது. மருத்துவ வாரியத்தின் அமைப்பு, பணிகள், இதர விவரங்கள் இந்த சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் விதிகளில் நிர்ணயிக்கப்படும்.
- கருக் கலைப்பு செய்த பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஒரு நபரைத் தவிர வேறு எவருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது.
மருத்துவச் சிகிச்சை, குறைபாடுள்ள சிசு வாய்ப்பு, மனிதாபிமானம் அல்லது சமுதாய அடிப்படையில், சட்டப்படியான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு பெண்களுக்கு கிடைப்பதை விரிவாக்கும் வகையில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்தச் மசோதா 2020 கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தேச திருத்தங்களில் சில உட்பிரிவுகள் மாற்றியமைக்கப்படும். தற்போதுள்ள 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்படும். சில நிபந்தனைகள் அடிப்படையில் கருக்கலைப்பு உச்ச வரம்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இவை சேர்க்கப்படும். பாதுகாப்பான கருக்கலைப்பு சேவை மற்றும் தரத்தில் குறைகளின்றி கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் விரிவான கருக்கலைப்புப் பராமரிப்புச் சேவையை வலுப்படுத்தவும், கருக்கலைப்புக்கு உச்ச வரம்பை அதிகரிக்கவும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பயனடைவார்கள். கருவின் அசாதாரணமான நிலைமை அல்லது பாலியல் வன்முறை காரணமான கர்ப்பங்கள் ஆகியவற்றை தற்போது அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி நீதிமன்றங்களில் சமீபத்தில் பல மனுக்கள் பெறப்பட்டிருந்தன. கருக்கலைப்பு உச்ச வரம்பை அதிகரிக்கும் உத்தேச திட்டம் கருக்கலைப்பு அவசியப்படும் பெண்களுக்கு கண்ணியம், சுதந்திரம், ரகசியத்தன்மை ஆகியவற்றை அளிக்கும்.
பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதை அதிகரிக்கவும், மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மனதில் கொண்டும் அக்கறையுள்ள அனைவருடனும் பல்வேறு அமைச்சகங்களுடனும் விரிவான ஆலோசனை கலந்த பின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த உத்தேச திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
*****
(Release ID: 1600938)
Visitor Counter : 3065