ஆயுஷ்

ஆயுஷ் அமைச்சகத்தின் ஓராண்டு சாதனை


1,032 ஆயுஷ் சுகாதார & நலவாழ்வு மையங்களுக்கு ரூ. 89.92 கோடி ஒதுக்கீடு

Posted On: 23 DEC 2019 12:05PM by PIB Chennai

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வேர்களை ஆழமாக அறிந்து கொள்வதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாமானிய மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய முக்கியமான பொது சுகாதார வளமாக ஆயுஷ் (Ayush) மருத்துவ முறை திகழ்கிறது.  வாழ்க்கை முறை சார்ந்த நாள்பட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், வயது முதிர்ந்த குடிமக்களுக்கு ஏற்படும் உடல் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த மருத்துவமுறை அவசியமாகிறது. நாள்பட்ட நோய் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் நம்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், ஆயுஷ் மருத்துவ முறை கட்டாயம் தேவைப்படுகிறது.

ஆயுஷ் அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், மாற்று மருத்துவ முறையை பிரபலப்படுத்துவதிலும், வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் அது  செயல்பட்டு வருகிறது.  2019 ஆம் ஆண்டு முழுவதும் ஆயுஷ் மருத்துவ முறைகளை முக்கிய மருத்துவ முறையாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் எட்டப்பட்டுள்ளது.  ஆயுஷ் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்தல், ஆயுஷ் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், ஆயுஷ் கல்வி, ஆயுஷ் மருந்துகள் மற்றும் அது சார்ந்த அம்சங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆயுஷ் மருத்துவ முறையை உலக மயமாக்கல் மற்றும்  ஆயுஷ் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை புகுத்துதல் ஆகிய 7 பெரும் அம்சங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது. 

ஆயுஷ் சுகாதார சேவை எளிதில் கிடைப்பதை மேம்படுத்துதல்

ஆயுஷ் சுகாதார சேவைகளை மேம்படுத்த, தேசிய ஆயுஷ் இயக்கம் (NAM) எனப்படும் மத்திய அரசு உதவியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  ஆயுஷ் துறையின் வளர்ச்சிக்கு மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்த திட்டம் உறுதுணையாக உள்ளது.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் 10% மையங்களை ஆயுஷ் அமைச்சகத்தின் வாயிலாக மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மூலம்  செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் NAM திட்டத்தின் மூலம், தற்போது  இயங்கி வரும் 1,032 ஆயுஷ் மருந்தகங்களை, ஆயுஷ் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களாக மேம்படுத்த ரூ.89.92 கோடி நிதியுதவி ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் செயல்படும் 10 ஆயுஷ் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களை 30 ஆகஸ்ட் 2019 அன்று பிரதமர் டிஜிட்டல் முறையில் தொடங்கி வைத்தார்.  நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஆயுஷ் சுகாதார சேவை கிடைக்கச் செய்வதை, இந்த மையங்கள் உறுதி செய்யும். 

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின்கீழ், ஆயுஷ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை சேர்ப்பதற்கு, 19 ஆயுர்வேத, சித்தா & யுனானி மற்றும் 14 யோகா & இயற்கை முறை சிகிச்சை தொகுப்புகள் தேசிய சுகாதார ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  ஆயுஷ் மருத்துவத்தை முக்கிய மருத்துவ முறையோடு இணைக்கும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், பொது சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் தேசிய ஆயுஷ் இயக்கம் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம், ஆயுஷ் சுகாதார சேவைகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இரண்டாம் தர / மூன்றாம் தர ஆயுஷ் சுகாதார சேவைகளை வழங்க ஏதுவாக, மாநில / யூனியன் பிரதேச அரசுகள் 50 படுக்கை வசதி கொண்ட ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்க ஆயுஷ் அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது.   48,050 ஹெக்டேர் பரப்பளவிலான  விளைநிலங்களில் ஆயுஷ் மருத்துவ தாவரங்களை சாகுபடி செய்யவும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்காக 56,711 விவசாயிகளுக்கு மானிய உதவியும் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் தரமான  செடிகளை உற்பத்தி செய்ய ஏதுவாக, 190  நாற்றங்கால்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

இமயமலை பிராந்தியத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக கருதப்படும், சோவா-ரிக்பா முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, ‘லே’ பகுதியில் சோவா-ரிக்பா தேசிய நிறுவனத்தை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், புதுதில்லி திஹார் சிறையில் நடத்திய யோகா பயிற்சியில் 16,000 சிறைக் கைதிகள் பங்கேற்றனர். 

புனேயில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமும், மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி இயற்கை மருத்துவ முறைகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல்

ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கான தன்னாட்சி பெற்ற மத்திய ஆராய்ச்சிக் கவுன்சில்கள், ஆயுஷ் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சிக் கவுன்சில்கள் ஒருங்கிணைந்து, 70 சூழ்நிலைகளுக்குத் தேவையான 140 பாரம்பரிய மருந்துகளை மதிப்பீடு செய்துள்ளன.  இந்த மருத்துவ முறைகளுக்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், நித்தி ஆயோக் மற்றும் இந்தியாவில் முதலீடு (AGNI) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுகாதார ஆராய்ச்சி (SIHR) திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு இரண்டாண்டுகளில் ரூ.490 கோடி செலவிடப்படவுள்ளது. 

ஆயுஷ் கல்வி

2019 ஆம் ஆண்டில், வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல்  திட்டத்துடன் இணைந்து ஆயுஷ் கல்வி முறை ஊக்குவிக்கப்பட்டது.  ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்வி நிலையங்களில் சேர்ந்து இளநிலை பட்டப்படிப்புகளை படிக்க, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த வகை கல்வியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கும் அகில இந்திய முதுநிலை பட்டதாரிகளுக்கான நுழைவுத் தேர்வு (AIPGET) முறையும் சீரமைக்கப்பட்டது.  தேசிய தேர்வு முகமை (NTA) மூலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS), பண்டைக்கால பாரம்பரிய முறையான வர்மக் கலையை உயிர்ப்பித்து அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் வர்ம அறிவியல் வரலாறு தொடர்பான தேசிய மாநாடு ஒன்றும் ஆகஸ்ட் 2019-ல் நடத்தப்பட்டது. வர்ம அறிவியல் பற்றிய பாடப்புத்தகம் ஒன்றும் இந்த நிறுவனத்தால் தொகுக்கப்பட்டுள்ளது.   மேலும், வர்மக் கலை தொடர்பான சிறப்பு புறநோயாளிகள் பிரிவு ஒன்றும் இந்த நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  சிக்கன் குனியா, சொரியாசிஸ் போன்ற நோய்கள் பற்றிய ஆராய்ச்சித் திட்டங்களும், பல்வேறு தேசிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆயுஷ் மருந்துக் கொள்கை மற்றும் அதுசார்ந்த அம்சங்கள்

ஆயுஷ் மருந்துகளை வரன்முறைப்படுத்தி கட்டுப்படுத்த, இந்த ஆண்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.  9 பணியிடங்களுடன் ஆயுஷ் மருந்துக் கட்டுப்பாட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.  இ-அவ்சாதி இணைய தளம் வாயிலாக ஆன்லைன் முறையிலேயே  இதற்கான உரிம விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.  ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளைக் கண்காணிக்கவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் தவறான விளம்பரங்கள் இடம்பெறுகிறதா என்பதை கண்காணிக்கவும், ஆயுஷ் மருந்துகளுக்கான பார்மகோ விஜிலன்ஸ் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அமைச்சகத்தின் கட்டாய பணியாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சர்வதேச யோகா தினம் 21 ஜூன் 2019 அன்று வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.  இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் மட்டுமின்றி, 150 வெளிநாடுகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது.  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 30,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற முக்கிய விழாவில், பிரதமர் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டார்.  ஆயுஷ் மருத்துவ சேவை மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பு மருத்துவம் குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்காக 100 கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த அமர் சித்ர கதா பதிப்பகத்துடன் இணைந்து, புரஃபசர் ஆயுஷ்மான்: மருத்துவ தாவரங்கள் & மருத்துவ குணங்கள் குறித்த குழந்தைகளுக்கான காமிக் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுஷ் மருத்துவ முறையை உலகமயமாக்கல்

ஆயுஷ் மருத்துவ முறையை உலகமயமாக்கும் முயற்சிக்கு 2019 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கவுன்சில்களுக்கும் – அமைச்சகத்திற்கும் இடையே தேசிய & சர்வதேச அளவிலான ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.  ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான பிம்ஸ்டெக் பல்கலைக் கழகம் ஒன்றை இந்தியாவில் ஏற்படுத்தவும், பிம்ஸ்டெக் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஆயுஷ் துறையில் தகவல்  தொழில்நுட்பம்

எதிர்கால வளர்ச்சி சார்ந்த தகவல் தொழில்நுட்பத்தை ஆயுஷ் துறையில் புகுத்துவதற்கு ஆயுஷ் க்ரிட் என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர், ஆயுஷ் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த தகவல் தொழில்நுட்பத்தை இயன்ற அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

பொதுமக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள யோகா பயிற்சி மையத்தை கண்டறிய ஏதுவாக, யோகா லொகேட்டர் என்ற செல்போன் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.

***********


(Release ID: 1597335) Visitor Counter : 766