பிரதமர் அலுவலகம்

புனேயில் உள்ள ஐஐஎஸ்இஆர்-ல் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 07 DEC 2019 9:26PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (ஐஐஎஸ்இஆர்) விஞ்ஞானிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (07.12.2019) கலந்துரையாடினார்.

தூய எரிசக்தி பயன்பாட்டுக்கான புதிய பொருட்கள் மற்றும் கருவிகள், வேளாண் உயிரி தொழில்நுட்பம், இயற்கை வள வரைபடம் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி ஐஐஎஸ்இஆர் விஞ்ஞானிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். மூலக்கூறு அறிவியல், நுண்ணுயிர்க்கொல்லி தடுப்பு, பருவநிலை ஆய்வுகள், சந்தைகள் மற்றும் பங்குகள் குறித்த நிதி ஆராய்ச்சி ஆகிய துறைகளுக்கான புதிய தொழில்நுட்பங்களும் இதில் விளக்கப்பட்டன.

பல தகவல் நிறைந்த விளக்கங்களுக்காக விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், குறிப்பிட்ட தேவைகளுக்காகவும் குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டுமென்று விஞ்ஞானிகளை அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக ஐஐஎஸ்இஆர் புனே வளாகத்தைப் பார்வையிட்ட பிரதமர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஐஐஎஸ்இஆர்-ல் சி டாக் நிறுவியுள்ள பரம் பிரம்மா எனும் நவீன சூப்பர் கம்ப்யூட்டரையும் அவர் பார்வையிட்டார். இது 797 டெராபிளாப்ஸ் திறன் கொண்டது.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) என்பது இந்தியாவில்  உள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் முதன்மையானதாகும்.

டிஜிபிக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் புனேக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

*****




(Release ID: 1595461) Visitor Counter : 139