மத்திய அமைச்சரவை
போதைப் பொருட்கள், போலியான மாற்று ரசாயனப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க இந்தியா-சவுதி அரேபியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
27 NOV 2019 11:18AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போதைப் பொருட்கள், போலியான மாற்று ரசாயனப் பொருட்கள் கடத்தலை தடுக்க இந்தியா-சவுதி அரேபியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு பின்னேற்பு அளிக்கப்பட்டது.
பயன்கள்:
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்படுவோரின் நிதி விவரங்களை அறியவும், கடத்தல்காரர்களின் அடையாளங்களை அறியவும், சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளவும் தேவையான தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள், மனோவியல் சம்பந்தமான பொருட்கள், போலியான மாற்று ரசாயனப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட பகுதியிலிருந்து அவற்றின் ரசாயன அறிக்கைகள் / பகுப்பாய்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், சட்ட விரோதமான சோதனைக் கூடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
பின்னணி:
போதைப் பொருட்கள் தொடர்பான பயங்கரவாதிகள், சர்வதேச குற்றச்செயல்பாட்டு அமைப்புகள் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் வர்த்தகம் செய்வது, பல நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் போதைப் பொருள் கடத்தல் என்பது தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நிதியுதவி கிடைக்க உதவி செய்கிறது. மேலும் பெருமளவில் போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வினியோகம் பல்வேறு வழிகளில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் மூலம் நடப்பதால் இளைஞர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்கிறது. பொது சுகாதாரத்தில் இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும் சமூகத்தை குற்றச்செயல் மிக்கதாக மாற்றுகிறது என்பதால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1593687)
Visitor Counter : 139