பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்


குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளன்று ஊடகங்களிடம் பேசினார்

விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்

Posted On: 18 NOV 2019 11:41AM by PIB Chennai

மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத் தொடர் என்பதாலும், இந்திய அரசியல் சாசனத்தின் 70 ஆவது ஆண்டு என்பதாலும், நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குவதற்கு முன் பிரதமர் ஊடகங்களிடம் பேசினார். 

 

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வைத்ததில் மிகப்பெரிய பங்களிப்பு செய்த மாநிலங்களவையை அவர் பாராட்டினார். 

 

“நண்பர்களே, 2019-க்கான நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடர் இதுவாகும்.  மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மிகமுக்கிய பங்களிப்பு செய்துள்ள மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத் தொடர் என்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிறது”.  70-ஆவது அரசியல் சாசன தினத்தை இந்தியா நவம்பர் 26 அன்று கொண்டாடுகிறது.  1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதை அடுத்து,  இந்த ஆண்டு 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

 

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் மகத்தான கோட்பாடு அரசியல் சாசனம் என்று பிரதமர் கூறினார். 

 

“அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, 70 ஆவது அரசியல் சாசன தினத்தை நவம்பர் 26 அன்று  நாம் கொண்டாடவிருக்கிறோம்.  இந்த அரசியல் சாசனம் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது.  இந்தியாவின்  பொலிவை அது உள்ளடக்கி இருக்கிறது.  நாட்டை இயக்கும் சக்தியாக அது விளங்குகிறது.  நமது அரசியல் சாசனத்தின் 70 ஆண்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக  நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடர் இருக்கும்”. 

 

தங்களின் விவாதங்கள் மூலம் நாடு சிறப்பு பெறுவதற்கு உதவியாக முந்தைய கூட்டத் தொடரை போலவே, பல்வேறு வகையான விவாதங்களில் தீவிரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பங்கேற்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

“கடந்த சில நாட்களாகப் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம்.   புதிய அரசு அமைக்கப்பட்டப் பின் கூடிய  முந்தைய கூட்டத் தொடரைப் போல, இந்த கூட்டத் தொடரிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  தீவிரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பங்கேற்க வேண்டும்.  கடந்த கூட்டத் தொடர் முன்னெப்போதும் இல்லாத சாதனைகளைக் கண்டது.  இந்த சாதனைகள் அரசுக்கோ, ஆளுங்கட்சிக்கோ உரியவை அல்ல.  ஒட்டுமொத்த நாடாளுமன்றத்திற்கும் உரியவை; இந்த சாதனைகளுக்கு முறையான உரிமையாளர்கள் அனைத்து உறுப்பினர்களும்தான் என்பதை நான் பெருமிதத்தோடு வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் தீவிரப் பங்கேற்புக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தக் கூட்டத் தொடரும் கூட, நாட்டின் வளர்ச்சிக்காக சக்திவாய்ந்த பணியைப் புதுப்பித்துக் கொள்வதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 

 

அனைத்து விஷயங்களிலும் விவாதத்தை நாங்கள் விரும்புகிறோம்.  ஆதரவாகவோ, எதிராகவோ, பெருமளவு விவாதங்கள் இருப்பது அவசியமாகும்.  நாட்டின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், இவற்றிலிருந்து பெறப்படும் தீர்வுகளை சிறப்பாகப் பயன்படுத்துவோம்.

 

உறுப்பினர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக செயல்பட நான் வாழ்த்துகிறேன்.”

*****************



(Release ID: 1591946) Visitor Counter : 168