பிரதமர் அலுவலகம்
உலக அளவிலான தேக்க நிலைக்கு இடையே, பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன, வறுமையிலிருந்து கோடிக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர்
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு இலக்குகள் மேலும் அதிகரிக்க வேண்டும்: பிரதமர்
அரசியல் நிலைத்தன்மை, யூகிக்கத்தக்க கொள்கை, வர்த்தகத்திற்கு உகந்த சீர்திருத்தங்கள் காரணமாக உலகிலேயே இந்தியா மிகவும் வெளிப்படையான, முதலீட்டுக்கு ஏற்ற இடமாக உள்ளது: பிரதமர்
பிரிக்ஸ் வர்த்தக அமைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
Posted On:
14 NOV 2019 4:11AM by PIB Chennai
பிரேசிலில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் இதர தலைவர்களும், இந்த அமைப்பில் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உலகின் பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீதத்தை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். உலகளவில் நிலவும் மந்த நிலைக்கு இடையே, பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ளன, வறுமையிலிருந்து கோடிக்கணக்கானோரை விடுவித்துள்ளதுடன், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் புதிய சாதனைகளையும் படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு இலக்குகள் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த பிரதமர், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தக கட்டணத்தை மேலும் குறைப்பது பற்றிய ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, குறைந்தது ஐந்து பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் உருவாக்கப்படுவதுடன் கொடுக்கல்-வாங்கல் அடிப்படையில் பரஸ்பரம் பகிர்தலும் இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
புதுமையான பிரிக்ஸ் கட்டமைப்பு, எதிர்கால கட்டமைப்புக்கான பிரிக்ஸ் அமைப்பு ஆகிய முக்கிய முன்முயற்சிகள், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் நடைபெறும் விவாதத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். மனித வளம் குறித்த முயற்சிகளில் தனியார் துறையினர் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளும் பரஸ்பர சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
அரசியல் நிலைத்தன்மை, யூகிக்கத்தக்க கொள்கை, வர்த்தகத்திற்கு உகந்த சீர்திருத்தங்கள் காரணமாக உலகிலேயே இந்தியா மிகவும் வெளிப்படையான, முதலீட்டுக்கு ஏற்ற இடமாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
***************
(Release ID: 1591631)
Visitor Counter : 171