பிரதமர் அலுவலகம்

பாங்காக்-கில் “வணக்கம் பிரதமர் மோடி” சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை


“தாய்” மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல், குருநானக்-கின் 550-வது பிறந்த தினத்தையொட்டி நினைவு நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார் பிரதமர்

இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை வழியாக தடையற்ற இணைப்பை ஏற்படுத்துவது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் - பிரதமர்

Posted On: 02 NOV 2019 8:40PM by PIB Chennai

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இன்று நடைபெற்ற “வணக்கம் பிரதமர் மோடி” (‘Sawasdee PM Modi’) என்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தாய்லாந்து முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கலந்துகொண்டனர்.

வரலாற்றுப்பூர்வமான இந்தியா-தாய்லாந்து நல்லுறவுகள்

தாய்லாந்தில் பல்வேறுபட்ட இந்திய வம்சாவளியினர் வசித்துவருவதை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் கூறி பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர், இந்தியா-ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது முதலாவது அரசுமுறை பயணமாக வந்துள்ளதாகக் கூறினார். இந்தியா-தாய்லாந்து இடையேயான பழமையான வரலாற்றுப்பூர்வ நல்லுறவு என்பது, இந்திய கடலோர மாநிலங்கள் மூலமாக தென்கிழக்கு ஆசியாவுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உறவு என்பதை அவர் வெளிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார மற்றும் வாழ்க்கை முறையின் ஒத்த தன்மையின் மூலமே, இந்த நல்லுறவு வலுப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தான் பயணம் மேற்கொள்ளும் நாட்டில், இந்திய சமூகத்தினரை சந்தித்துப் பேசுவது தனது விருப்பம் என்று பிரதமர் கூறினார். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறந்த தூதர்களாக தாய்லாந்தில் வசிக்கும் மக்கள் இருப்பதாக திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

“தாய்” மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் மற்றும் குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தையொட்டி நினைவு நாணயம் வெளியீடு

திருவள்ளுவர் எழுதிய பழமையான திருக்குறள் நூலின் “தாய்” மொழிபெயர்ப்பை பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார். மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விளக்காக இந்த புத்தகம் திகழ்வதாக அவர் கூறினார். குருநானக்-கின் 550-வது பிறந்த தினத்தையொட்டி வடிவமைக்கப்பட்ட நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். குருநானக்-கின் போதனைகள், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் பாரம்பரிய சொத்தாக இருப்பதாக அவர் கூறினார். கர்தார்பூர் வழித்தடம் மூலம், கர்தார்பூர் குருத்வாராவுக்கு நவம்பர் 9-ம் தேதி முதல் நேரடி இணைப்பு ஏற்பட உள்ளதாகக் கூறிய பிரதமர், ஒவ்வொருவரும் வந்து கர்தார்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கிழக்கு நோக்கிய கொள்கையில் உறுதி மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு

சுற்றுலாவை ஊக்குவிக்க புத்த ஆலயங்களுக்கு இடையேயான பயணத் திட்டத்தை வடிவமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி விளக்கினார். போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கான சர்வதேச குறியீட்டில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா 18 இடங்கள் முன்னேறியிருப்பதை அவர் குறிப்பிட்டார். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், இணைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதோடு, பாரம்பரிய, ஆன்மீக மற்றும் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் அம்சங்களை குறிப்பிட்ட பிரதமர், தாய்லாந்துடன் வடகிழக்குப் பகுதியின் இணைப்பை வலுப்படுத்த இந்தியா கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். தென்கிழக்கு ஆசியாவின் நுழைவுவாயிலாக வடகிழக்கு பிராந்தியத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை மூலம், மூன்று நாடுகளுக்கும் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும் என்றும், இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

மக்களின் நலனில் அரசு உறுதி

ஜனநாயகத்தை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், 2019-ம் ஆண்டில் நடைபெற்ற வரலாற்றுப்பூர்வமான பொதுத் தேர்தலை விளக்கினார். இந்தத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக தனது அரசு ஆட்சிக்கு வந்ததை பிரதமர் குறிப்பிட்டார்.

370-வது சட்டப்பிரிவை நீக்கியது உள்ளிட்ட அரசின் அண்மைக்கால மிகப்பெரும் முடிவுகள் மற்றும் சாதனைகளில் சிலவற்றை மோடி பட்டியலிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் 8 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த பயனாளிகளின் எண்ணிக்கை என்பது, தாய்லாந்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட அதிகம் என்று அவர் கூறினார். 50 கோடிக்கும் மேலான இந்தியர்களுக்கு மருத்துவ சிகிச்சை பலன்களை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் நீர் கிடைப்பதையும், அனைவருக்கும் வீடு இருப்பதையும் 2022-ம் ஆண்டுக்குள் உறுதிப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.



(Release ID: 1590488) Visitor Counter : 209