பிரதமர் அலுவலகம்

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 03 NOV 2019 5:25PM by PIB Chennai

ஆசியான் அமைப்பு, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசிய அதிபர் மதிப்பிற்குரிய ஜோகோ விடோடோவை பாங்காக் நகரில் 2019 நவம்பர் 3 ஆம் தேதி சந்தித்தார்.

இந்தோனேசிய அதிபராக இரண்டாவது தடவையாகப் பொறுப்பேற்றுள்ள அதிபர் விடோடோவிற்கு பிரதமர் மோடி தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். உலகத்தின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், பன்மைத்துவம் மிக்க சமூகங்கள் என்ற வகையில் இந்தோனேசியாவுடன் இணைந்து செயல்படுவது என்ற இந்தியா உறுதிப்பாட்டினை கொண்டுள்ளது என்றும், ராணுவம், பாதுகாப்பு, தொடர்பு வசதிகள், வர்த்தகம், முதலீடு, பரஸ்பர மக்கள் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இந்தோனேசியாவுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடல்வழியில் மிக நெருங்கிய அண்டைநாடுகளாக இந்தியாவும் இந்தோனேசியாவும் விளங்குகின்றன என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்திய-பசிபிக் பகுதியில் கடல்வழி ஒத்துழைப்பு குறித்த இரு நாடுகளின் ஒன்றிப்பான தொலைநோக்கை எட்டும் வகையில் அமைதி, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றுக்காக இணைந்து செயல்படுவது குறித்த உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினர். தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய அச்சுறுத்தல்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததோடு, இரு நாடுகள் அளவிலும், உலக அளவிலும் இந்த அச்சுறுத்தலை சமாளிக்க இணைந்து செயல்படுவது எனவும் ஒப்புக் கொண்டனர்.

இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் மோடி தொலைநோக்குடன் கூடிய விவாதத்தை மேற்கொண்டார். மருந்துப் பொருட்கள், போக்குவரத்து வாகனங்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்திய நிறுவனங்கள் இந்தோனேசியாவில் கணிசமான அளவில் முதலீட்டை செய்துள்ளதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீட்டிற்காக உருவாகியுள்ள வாய்ப்புகளை இந்தோனேசிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அடுத்த ஆண்டில் இருநாடுகளுக்கும் வசதியான ஒரு தருணத்தில் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்றும் அதிபர் விடோடோவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தோனேசியாவுடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. அந்த நாட்டுடன் முழுமையானதொரு  யுத்த தந்திரரீதியான கூட்டணியும் நிலவுகிறது. இந்தோனேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் தூதரக உறவுகள் தொடங்கி 70வது ஆண்டு நிறைவு பெற்றதையும் இரு நாடுகளும் இந்த ஆண்டில் கொண்டாடுகின்றன.

***



(Release ID: 1590299) Visitor Counter : 99