பிரதமர் அலுவலகம்

நியூசிலாந்து பிரதமர் திருமிகு ஜெசிந்தா ஆர்டர்ன் உடனான, பிரதமரின் இருதரப்பு சந்திப்பு

Posted On: 26 SEP 2019 6:00AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் திருமிகு ஜெசிந்தா ஆர்டர்னை நியூயார்க்கில் ஐ நா பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே 25-ஆம் தேதி சந்தித்தார்.

இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களிடையேயான உறவுகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து,   2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மணிலாவில் தாங்கள் இருவரும் முன்பு சந்தித்துக் கொண்டதை அவர்கள் நினைவுகூர்ந்தனர். இந்திய பிரதமரின் வருகையின்போது நிறுவப்பட்ட புதிய நடைமுறைகளின் பயனாக இருதரப்பு உறவு கணிசமான அளவுக்கு வலுவடைந்ததையும் அவர்கள் குறிப்பிட்டனர். செப்டம்பர் 24-ஆம் தேதி ஐ நா பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே நடைபெற்ற ‘தற்காலத்துக்கும் காந்தி பொருத்தமானவர்‘ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தாம் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் ஆர்டனுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

 

‘இந்தியா 2022 உறவில் முதலீடு செய்தல்’ என்ற புதிய உத்தி அறிக்கை, 2011-ஆம் ஆண்டின் நியூசிலாந்து – இந்தியாவின் உத்தியின் தொடர்ச்சி என்பதை நியூசிலாந்து பிரதமர், பிரதமர் மோடியிடம் சுட்டிக்காட்டினார். நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினரும், மாணவர்களும் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய பாலமாகத் திகழ்வதாக பிரதமர் ஆர்டன் குறிப்பிட்டார்.  அவர்கள் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பெருமளவில் பங்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதம் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலக அளவிலான விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.  பயங்கரவாத விஷயத்தில் இருநாடுகளும் ஒரே விதமான கருத்தைக் கொண்டிருப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர். புல்வாமாவிலும், க்ரைஸ்ட்சர்ச்சிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை இருநாடுகளும் வன்மையாகக் கண்டித்தன. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இருநாடுகளும் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்தன. க்ரைஸ்ட்சர்ச் தாக்குதலுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான நியூசிலாந்து, பிரெஞ்ச்  கூட்டு முன்முயற்சிக்கும் இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.

 

***



(Release ID: 1586383) Visitor Counter : 110