பிரதமர் அலுவலகம்

ஐநா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில் மகாத்மா காந்தி குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 SEP 2019 6:00PM by PIB Chennai

பொதுச்செயலாளர் அன்டோயோ குட்ரஸ் அவர்களே,

அதிபர் மூன் அவர்களே,

பிரதமர் லீ அவர்களே,

பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே,

பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் அவர்களே,

பிரதமர் ஆர்டர்ன் அவர்களே,

பிரதமர் லோட்டே ஷெரிங் அவர்களே,

மேன்தன்மை தங்கிய பிரமுகர்களே, நண்பர்களே,

 

இன்று நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, அவர் இன்றைய சகாப்தத்திற்கும் பொருத்தமானவர் என்பது குறித்து விவாதிப்பதற்காக இங்கு கூடியுள்ளோம்.

 

மதிப்புமிக்க உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

 

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, நினைவு அஞ்சல்தலை வெளியிட்டுள்ள ஐநா சபைக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காந்தியடிகள் ஒரு இந்தியர். ஆனால், அவர் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. இன்று இந்தத் தளம், அவரது வாழும் உதாரணமாகத் திகழ்கிறது.

நிர்வாகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத வாய்மை மற்றும் அகிம்சையின் சக்தியை மட்டும் வைத்துக் கொண்டு, நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்த பேரரசை அசைத்ததுடன் மட்டுமல்லாமல், பல தேசப்பற்றாளர்களுக்கு சுதந்திரத்தின் எழுச்சியை ஊட்டிய ஒரு மனிதரை உலக வரலாற்றில் வேறு எங்கும் காணமுடியாது.

அதிகாரத்தைவிட்டு, வெகுதொலைவில் விலகியிருந்த போதிலும், கோடிக் கணக்கான மக்களின் இதயங்களில் ஆட்சிபுரியும் அத்தகைய ஒரே தலைவர் மகாத்மா காந்தி.

அவர் சந்தித்திராத ஏராளமான மக்கள் அவரது வாழ்வியல் முறையால் ஈர்க்கப்பட்டனர் என்பதை, நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.   மார்ட்டின் லூதர் கிங் ஜூனியராக இருந்தாலும் அல்லது நெல்சன் மண்டேலாவாக இருந்தாலும் அவர்களது அடிப்படை லட்சியங்கள் மகாத்மா காந்தியுடையவை.  காந்தியின் தொலைநோக்கையே அவர்கள் கொண்டிருந்தனர்.

நண்பர்களே,

இன்று ஜனநாயகத்தின் பொருள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அரசு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதே அது.  ஆனால், மகாத்மா காந்தி ஜனநாயகத்தின் உண்மையான ஆற்றலை எடுத்துக்காட்டினார்.  மக்கள் எல்லாவற்றிற்கும் அரசைச் சார்ந்திராமல், தமக்கு தாமே நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலையை அவர் போதித்தார்.

நண்பர்களே,

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி முக்கியத் தலைவராக விளங்கினார்.  அதேசமயம், காந்தியடிகள் சுதந்திரமான நாட்டில் பிறந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார் என்பதை ஒரு கணம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விடுதலைக்காக அவர் போராடினார்.  இது முக்கியம்தான். ஆனால், அதுமட்டுமே காந்தியடிகளின் பணிகளின் மொத்த விரிவாக்கமல்ல.

அரசைச் சார்ந்து இருக்கக் கூடாது என்பதே மகாத்மா காந்தியின் சமூக நடைமுறையின் முன்னோடிக் கொள்கையாகும்.

மகாத்மா காந்தி மாற்றத்தைக் கொண்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் அவர், மக்களின் உள் ஆற்றலைத் தட்டி எழுப்பி,  மாற்றத்தைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் என்று கூறுவதும் பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் போராட்டத்துக்கு காந்தியடிகள் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால், அவர் இன்றும் சுயராஜ்யம், தன்னிறைவு ஆகியவற்றை நோக்கி போராட வேண்டியிருந்திருக்கும்.

இந்தியா தற்போது எதிர்நோக்கியிருக்கும் பெரிய சவால்களுக்கு தீர்வுகாண காந்தியடிகளின் தொலைநோக்குப் பார்வை சிறந்த வழியாக மாறியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் பங்கேற்புக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம்.  தூய்மை இந்தியா இயக்கமாக இருந்தாலும், டிஜிட்டல் இந்தியாவாக இருந்தாலும், மக்கள் தற்போது தாங்களாகவே இந்த இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களே,

மகாத்மா காந்தி தமது வாழ்க்கையே ஒரு செய்தி என்று கூறுவதுண்டு. தமது வாழ்க்கையில் இருந்து எந்தத் தாக்கத்தையும் மேற்கொள்ள அவர் முயன்றதில்லை.  அவரது வாழ்க்கை பலரது உத்வேகத்திற்கு காரணமாக மாறியது.  எப்படி ஈர்ப்பது என்ற யுகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால், காந்தியடிகளின் நோக்கம் எப்படி ஊக்குவிப்பது என்பதாக இருந்தது.

ஜனநாயகத்தின் மீது காந்தியடிகள் கொண்டிருந்த விசுவாசத்தின் வலிமை என்ன என்பதை உணர்த்த, அது தொடர்பான சம்பவம் ஒன்றைக் கூற நான் விரும்புகிறேன்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தை சந்தித்த போது, அவர் ஒரு கைக்குட்டையை உணர்ச்சிப் பெருக்குடன் எனக்குக் காட்டினார். கதரால் நெய்யப்பட்ட கைக்குட்டைதான் அது.  அதை அரசியின் திருமணத்தின் போது காந்தியடிகள் பரிசாக அளித்திருக்கிறார்.

யாருடன் அவருக்குக் கொள்கை மோதல்கள் இருந்தனவோ, அதை ஒதுக்கிவைத்து அவருடன் நேசமான உறவை காந்தி கொண்டிருந்தார் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். விடுதலைப் போராட்டத்தில் தம்முடன் போராடியவர்களில், தமக்கு எதிரான கருத்து கொண்டிருந்தவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும், அவர்களது நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

நண்பர்களே,

கொள்கைகளின் மீது அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. காந்தியின் கவனத்தை ஈர்த்த ஏழு பொன்மொழிகள் பற்றி நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

உழைப்பில்லாத செல்வம்

மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி

குணமில்லாத அறிவு

நெறிமுறை இல்லாத தொழில்

மனிதநேயம் இல்லாத அறிவியல்

தியாகம் இல்லாத மதம்

கொள்கை இல்லாத அரசியல் - என்பவையே அவை 

 

பருவநிலை மாற்றம் அல்லது பயங்கரவாதமாக இருந்தாலும்,

ஊழல் அல்லது சுயநலமான சமூக வாழ்க்கையாக இருந்தாலும், காந்தியடிகளின் இந்தக் கொள்கைகள் மனிதநேயத்தை பாதுகாக்க வழிகாட்டியாகத் திகழ்கின்றன. 

காந்தியடிகள் காட்டிய இந்தப் பாதை மிகச்சிறந்த உலகத்தை உருவாக்க உந்து சக்தியாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என நான் நம்புகிறேன்.

காந்தியடிகளின் மனித நேயத்துடன் கூடிய இந்தக் கொள்கைகள் தொடரும் வரை, காந்தியடிகளின் ஊக்கமும், அவரது செயல்பாடுகளும் நம்முடன் இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! 

 

 

*****



(Release ID: 1586299) Visitor Counter : 567