பிரதமர் அலுவலகம்
ஹூஸ்டனில் நடைபெற்ற ‘நலமா மோடி’ நிகழ்வில் இந்திய குடும்பங்களிடையே பிரதமர் உரையாற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்ப் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்
Posted On:
22 SEP 2019 11:47PM by PIB Chennai
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில் உள்ள என் ஆர் ஜி அரங்கில் நடைபெற்ற ‘நலமா மோடி’ நிகழ்வில் 50,000க்கும் மேல் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதமரோடு அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்ப் அவர்களும் இணைந்து கொண்டார்.
பிரம்மாண்டமான கூட்டத்தினரிடையே உரையாற்றுகையில், ஹூஸ்டன் நகரில் நடைபெறும் இந்த நிகழ்வில் புதிய வரலாறும் புதிய ஒருங்கிணைவும் உருவாக்கப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். “டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இங்கு நம்மோடு இருப்பதும், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அமெரிக்க செனட் உறுப்பினர்கள் பேசுவதும் 130 கோடி இந்தியர்களின் சாதனைக்குச் செலுத்தும் மரியாதையே ஆகும்” என்றும் பிரதமர் கூறினார். இந்த அரங்கில் இருந்து வெளிப்படும் மிகப்பெரும் உற்சாகமானது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒழுங்கமைவு அதிகரித்து வருவதையே சுட்டிக் காட்டுகிறது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
“இந்த நிகழ்விற்குப் பெயர் நலமா மோடி. ஆனால் மோடி என்ற தனிநபர் மட்டும் ஒன்றும் கிடையாது. நான் இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களின் விருப்பங்களுக்காக செயல்படுபவன். எனவே நலமா மோடி என்று நீங்கள் கேட்டால் இந்தியாவில் எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்றுதான் நான் கூறுவேன்.” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “எல்லாம் நன்றாகவே இருக்கிறது” என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கூறிய பிரதமர் இத்தகைய பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமைதான் நமது உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தின் வலிமைக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
“இன்று புதியதொரு இந்தியாவை உருவாக்குவதில் இந்தியா உறுதியோடு இருப்பதோடு, அதை நோக்கி மிகக் கடினமாக உழைத்துக் கொண்டும் வருகிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய, சிறப்பானதொரு இந்தியாவை உருவாக்க ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். “இந்தியா சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை; அவற்றை நேருக்கு நேராகவே சந்திக்கிறது. படிப்படியான மாற்றங்களைக் கொண்டுவர இந்தியா விரும்பவில்லை. நிரந்தரமான தீர்வுகளை உருவாக்கவும், முடியாதவற்றை செயல்படுத்தவுமே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை சுட்டிக் காட்டிப் பேசிய பிரதமர் “ கடந்த ஐந்து ஆண்டுகளில் யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத விஷயங்களை 130 கோடி இந்தியர்கள் அடைந்திருக்கின்றனர். உச்சத்தை நாங்கள் இலக்காகக் கொள்ளும் அதே நேரத்தில் அதைவிட அதிகமான உயரத்தை நாங்கள் எட்டிப்பிடித்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டார். வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவது, கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, கிராமப்புற சாலைக் கட்டமைப்புகளை உருவாக்குவது, வங்கிக் கணக்குகளைத் துவக்குவது போன்ற பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமது அரசு எடுத்திருப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“வாழ்க்கைக்கான வசதி”, “எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வசதி” போன்றவை குறித்து தனது அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார். மக்களின் “வாழ்க்கை வசதி”யை உறுதிப்படுத்தும் வகையில் பயனற்ற சட்டங்களை அகற்றுவது, சேவைகளை விரைவாகத் தருவதை உறுதிப்படுத்துவது, மலிவான விலையில் இணைய வசதி, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கொண்டு வந்தது போன்ற அரசு மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார். தமது அரசின் கீழ் ஒவ்வொரு இந்தியனையும் வளர்ச்சி சென்றடையும் என்றும் அவர் கூறினார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கியது குறித்துப் பேசும்போது, இத்தகைய தீர்மானகரமான, வலுவான நடவடிக்கையை எடுத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்குமாறு இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்த 370 வது பிரிவு வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களை பிரித்து வைத்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். “இப்போது ஒவ்வொரு இந்தியரைப் போலவே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை சேர்ந்த மக்களும் அதே போன்ற உரிமைகளைக் கொண்டவர்களாக உள்ளனர்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராகவும் தீர்மானகரமான, வலுவான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் உறுதிப்பாட்டையும் அவர் பாராட்டினார்.
அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவிற்கு வருகை தர வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். “இந்தியா அமெரிக்கா நாடுகளின் உயிர்த்துடிப்புள்ள எதிர்காலத்தை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்வதாக நமது நட்புறவு விளங்கும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நலமா மோடி நிகழ்விற்கு டொனால்ட் ஜே ட்ரம்ப் அவர்களை வரவேற்பதில் பெருமையும் மதிப்பும் கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர், அமெரிக்க அதிபர் தான் செல்லுமிடம் எங்கிலும் ஆழமான. நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபரின் தலைமைக் குணங்களையும் அவர் பாராட்டினார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் டொனால்ட் ஜே ட்ரம்ப் அவர்களின் நட்புணர்வையும், பாசத்தையும் உற்சாகத்தையும் தான் உணர்வதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்ப் இந்த நிகழ்வில் பேசுகையில் இந்தியாவிற்காகவும் அதன் குடிமக்களுக்காகவும் தலைசிறந்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டார். இதுவரை கண்டிராத வகையில் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காகவும் அவர் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்பு எப்போதையும் விட இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான நட்புறவு மிகச் சிறப்பானதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகளை மேற்கொண்டு வருவதற்காக பிரதமரைப் பாராட்டிய ட்ரம்ப் “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 30 கோடி இந்திய மக்களை வறுமையிலிருந்து மேலே கொண்டு வந்துள்ளது. இது மிகவும் ஆச்சரியமான ஒன்று” என்றும் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வலுவான, துடிப்புமிக்க இந்தியக் குடியரசை உலகம் கண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். அவர்களது பங்களிப்புகளுக்காக இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்க அதிபர் நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது நல்வாழ்வில் தனது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பெரும்பான்மை அவைத்தலைவரான ஸ்டெனிஹோனர் இந்தியப் பிரதமரை ஹூஸ்டன் நகருக்கு வரவேற்றுப் பேசுகையில் நவீன இந்தியாவினால் அமெரிக்கா உத்வேகம் பெற்றுள்ளது என்று கூறினார். சவால்களை மனதில் கொண்டு பிரதமர் நாட்டிற்கு தலைமை தாங்கி வருவதாகவும், விண்வெளியின் புதிய எல்லைகளை இந்தியா தொட்டு வருகிறது என்றும் அதே நேரத்தில் மண்ணில் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மேலே கொண்டுவருவதிலும் உறுதியோடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்னர் மரியாதை நிமித்தமாகவும் நீண்ட கால இந்திய- ஹூஸ்டன் உறவு மற்றும் ஒருங்கிணைவை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ‘ஹூஸ்டன் நகர சாவி’யை வழங்கினார்.
******
(Release ID: 1585839)
Visitor Counter : 284