பிரதமர் அலுவலகம்

பாலை நிலமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் (COP14) 14வது மாநாட்டின் உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்


ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்ய இந்தியா ஆயத்தமாக உள்ளது என பிரதமர் உரை

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் மக்களுக்கு அதிகாரமளித்தல் நிலைக்கு தொடர்பு உள்ளது: பிரதமர்

நிலத்தின் வளம் குறைவதைத் தடுப்பது தொடர்பான பிரச்சினைகளைக் கையாள தனிச்சிறப்பு மையம் ஒன்றை இந்தியா அமைக்கும்: பிரதமர்

Posted On: 09 SEP 2019 4:47PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற்ற பாலை நிலமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் (COP14) 14வது மாநாட்டின் உயர்நிலைக் கூட்டத்தில்  பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

இணை தலைமை பொறுப்பை இரண்டு ஆண்டு காலத்துக்கு நாம் ஏற்கும் நிலையில், இதில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய இந்தியா ஆயத்தமாக இருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். நெடுங்காலமாக இந்தியாவில் நிலத்துக்கு நாங்கள் எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறோம். இந்திய கலாச்சாரத்தில் பூமி புனிதமானது, அதை தாயாக மதிக்கிறோம் என்று அவர் கூறினார்.

``உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் பாலைவனமாதல் பிரச்சினை பாதிப்பு உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்.  இதனால், உலகம் எதிர்கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சினையுடன், நிலம் தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  வளம் குன்றிய நிலங்கள் குறித்த பிரச்சினை பற்றி நாம் யோசிக்கும்போது, தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும். தண்ணீர் கிடைக்கும் நிலையை மேம்படுத்துவதுடன், நிலத்தடி நீர்வளம் பெருகுவதை மேம்படுத்துதல், தண்ணீர் காலியாவதைக் குறைத்தல், மண்ணில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் ஆகிய அனைத்துமே நிலம் மற்றும் தண்ணீர் அணுகுமுறையில் ஒன்றிணைந்த அம்சங்களாக உள்ளன. நிலத்தின் வளம் குறைவதை சமன்படுத்தும் அணுகுமுறையை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய நீர் செயல் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு யு.என்.சி.சி.டி. தலைமையை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் கூறினார்.

``பாரிஸ் நகரில் ஐ.நா.எப்.சி.சி.சி.யின் சி.ஓ.பி.-யில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவுக்கான குறியீடுகள் பற்றி இன்று எனக்கு நினைவுக்கு வந்தது. நிலம், நீர், காற்று, மரங்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கு இடையில் ஆரோக்கியமான சமன்பாட்டு நிலையைப் பராமரித்தல் என்ற இந்தியாவின் ஆழமான கலாச்சார வேர்கள் பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. நண்பர்களே, இந்தியாவில் மரங்களின் பரப்பு அதிகரித்து வந்திருக்கிறது என்பதைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் 8 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மரங்கள் மற்றும் வனப் பரப்பு அதிகரித்துள்ளது'' என்றும் பிரதமர் கூறினார்.

பல்வேறு முயற்சிகள் மூலமாக பயிர் விளைச்சலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நிலத்தின் வளத்தை மீட்பது மற்றும் நுண் நீர் பாசனத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு துளியிலும் அதிக விளைச்சல் என்ற குறிக்கோளுடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். உயிரி உரங்களின் பயன்பாட்டை அதிகரித்து, பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை நாங்கள் குறைத்து வருகிறோம். தண்ணீர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒட்டுமொத்தமாகத் தீர்வு காண்பதற்காக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் இந்தியா முடிவு கட்டப் போகிறது என்று பிரதமர் கூறினார்.

``நண்பர்களே, சுற்றுச்சூழல் விஷயத்துடன் மக்களுக்கு அதிகாரம் அளித்தல் நிலைக்குத் தொடர்பு இருக்கிறது. நீர் ஆதாரங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதாக இருந்தாலும் அல்லது ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதாக இருந்தாலும், மக்களிடம் மனப்போக்கு மாற்றம் ஏற்படுவது தான் சிறந்த வழியாக இருக்கிறது. ஒரு விஷயத்தை எட்ட வேண்டும் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரும் முடிவு செய்தால் மட்டும்தான், நாம் விரும்பிய முடிவுகளை எட்ட முடியும். நாம் எவ்வளவு திட்டங்களை வேண்டுமானாலும் கொண்டு வரலாம், ஆனால் கள அளவில் குழுவாக செயலாற்றினால் தான் உண்மையான மாற்றம் ஏற்படும். தூய்மை இந்தியா திட்டம் விஷயத்தில் இந்தியா இதைப் பார்த்துவிட்டது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்று, கழிவறை கட்டுதலை உறுதி செய்தனர். 2014ல் 38 சதவீதமாக இருந்த கழிவறை வசதி இன்றைக்கு 99 சதவீதத்தை எட்டியுள்ளது'' என்று பிரதமர் தெரிவித்தார்.

உலகளாவிய நில செயல் திட்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார். ``இந்தியாவில் வெற்றிகரமாக அமைந்துள்ள நிலம் வளம் குறைப்பை சமன் செய்யும் எல்.டி.என். அணுகுமுறைகள் சிலவற்றைப் புரிந்து, செயல்படுத்த விரும்பும் நாடுகளுக்கு உதவிகள் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. வளம் குறைந்துவிட்ட நிலம் என்ற அந்தஸ்தில் இருந்து மீட்க வேண்டிய நிலத்தின் அளவு, இப்போதிருந்து 2030க்குள் 21 மில்லியன் ஹெக்டேர் என்ற இலக்கை, 26 மில்லியன் ஹெக்டேர் என்று உயர்த்துவதாக இந்தக் களத்தில் நான் அறிவிக்க விரும்புகிறேன்'' என்றும் பிரதமர் கூறினார்.

நில வளம் குறைதல் பிரச்சினைகளை கையாள, அறிவியல்பூர்வ அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கவுன்சிலில் தனிச்சிறப்பு மையம் ஒன்றை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். நில வளம் குறைவது தொடர்பான விஷயங்களுக்குத் தீர்வு காண விரும்புவோருடன் அறிவு, தொழில்நுட்பம், பயிற்சிகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த மையம் தீவிர பங்காற்றும்.

ओम्द्यौःशान्तिः, अन्तरिक्षंशान्तिः, என்று கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தன் உரையை நிறைவு செய்தார்.  சாந்தி என்ற வார்த்தை அமைதியை மட்டுமோ அல்லது வன்முறைக்கு எதிரான வார்த்தையாக மட்டுமோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இங்கே அது வளமையைக் குறிப்பிடுகிறது. எல்லா விஷயங்களுக்கும், அதற்கான அவசியம் குறித்த ஒரு விதி உள்ளது, ஒவ்வொருவரும் அவரவரின் அவசியத்தைப் பூர்த்தி செய்திட வேண்டும். அப்படி பூர்த்தி செய்வது தான் வளமை. எனவே, வானம், சொர்க்கம் மற்றும் விண்வெளி வளமையாகட்டும் என்று அது சொல்கிறது என்று பிரதமர் கூறினார்.

********



(Release ID: 1584643) Visitor Counter : 271