பிரதமர் அலுவலகம்

2019-20 மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த பிரதமரின் கருத்து தமிழாக்கம்

Posted On: 05 JUL 2019 3:34PM by PIB Chennai

குடிமக்களுக்குப் பயனளிக்கும், வளர்ச்சிக்கு வித்திடும், எதிர்காலத் திட்டங்களைக் கொண்ட 2019-20 - க்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தயாரித்ததற்காக, நாட்டின் முதலாவது நிதி அமைச்சரான திருமதி நிர்மலா சீதாராமனையும் அவரது குழுவினரையும் நான் பாராட்டுகிறேன்.

 

இந்த நிதிநிலை அறிக்கை நாட்டை வளமுள்ளதாக்கும். அதன் மக்களைக் கூடுதல் அதிகாரம் பெற்றவர்களாக உருவாக்கும். இந்த பட்ஜட் மூலம் ஏழைகள் வலுப் பெறுவார்கள், இளைஞர்கள் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவார்கள்

 

இந்த பட்ஜட் காரணமாக மத்திய தர வகுப்பினர் முன்னேற்றம் அடைவார்கள். வளர்ச்சியின் நிலை பாய்ச்சல் வேகத்தில் இருக்கும்.

 

இந்த பட்ஜெட் வரிமுறையை எளிதாக்கும். அடிப்படைக் கட்டமைப்பை நவீனமயமாக்கும்.

 

இந்த பட்ஜெட் தொழில்துறையையும் தொழில் முனைவோரையும் வலுப்படுத்தும். நாட்டின் வளர்ச்சி நடவடிக்கையில் பெண்களின் பங்கேற்பை இது அதிகரிக்கும்.

 

இந்த பட்ஜெட் கல்வித்துறையை சிறப்பானதாக மாற்றும். செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் பயன்கள் மக்களைச் சென்றடைய இது உதவும்.

 

இந்த பட்ஜெட் நிதி சார்ந்த உலகத்திற்கு சீர்திருத்தத்தைக் கொண்டு வரும். சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவதோடு கிராமப்புற மக்கள் மற்றும் ஏழைகளுக்கு நல்வாழ்வளிக்கும்.

 

சுற்றுச்சூழல், மின்சாரப் போக்குவரத்து, சூரிய எரிசக்தி ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திருப்பதால், இது ஒரு பசுமை பட்ஜெட் ஆகும்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு அவநம்பிக்கை சூழலில் இருந்து வெளியே வந்தது. தற்போது எதிர்பார்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ததும்பி வழியும் நிலையில் உள்ளது.

 

மின்சாரம், எரிவாயு, சாலைகள் போன்ற தங்களின் சொந்த உரிமைகளுக்காக சாமானிய மக்கள் போராட வேண்டி இருந்தது. குப்பை , ஊழல், மிகவும் முக்கிய பிரமுகர் கலாச்சாரம், போன்ற சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றிலிருந்து விடுபட நாம் அயராது பாடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

 

தற்போது மக்கள் ஏராளமான விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் அவர்களை மனநிறைவு கொள்ள உறுதி தந்துள்ளது. செல்லும் பாதை சரியானது, நடைமுறை சரியானது வேகம் சரியானது, என்பதை இந்த பட்ஜெட் உறுதி செய்வதால் இலக்குகளை எட்டுவது நிச்சயம்.

 

இந்த பட்ஜெட் எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. 21 ஆம் நூற்றாண்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான முக்கிய இணைப்பு  என்பதை  இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது.

 

2022-ம் ஆண்டுக்கான அதாவது சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுக்கான முடிவுகளை அமல்படுத்துவதற்கு இந்த பட்ஜெட் வழிகாட்டுதலை அமைத்துள்ளது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், ஷெட்யூல்டு வகுப்பினருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், அடித்தள மக்களுக்கும் அதிகாரமளிக்க எமது அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த அதிகாரமளித்தல், வளர்ச்சியின் அதிகாரபீடமாக அவர்களை உருவாக்கும். 

 

இந்த அதிகாரபீடம் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவை நனவாக்க நாட்டுக்கு சக்தியை அளிக்கும். 

 

வேளாண் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கான புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.  பிரதமரின் விவசாய நலநிதித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு சுமார் 87 ஆயிரம் கோடி ரூபாய் வங்கியில் செலுத்தப்படுவது, 10 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய உற்பத்தி அமைப்புகளைத் திறக்கும் முடிவு, மீனவர்களுக்கான பிரதமரின் மீனவர் நலநிதித் திட்டம், தேசிய கிடங்குத் தொகுப்பை உருவாக்குவது ஆகியவை 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முக்கிய பங்களிப்பை செய்யும். 

 

மனித சக்தி இல்லாமல் தண்ணீர் சேமிப்பு சாத்தியமில்லை, மக்கள் இயக்கத்தின் மூலமே தண்ணீர் சேமிப்பு சாத்தியமாகும்.  இந்த பட்ஜெட் இந்த தலைமுறைக்கு மட்டுமின்றி, எதிர்கால தலைமுறைகளுக்கும்  அக்கறை கொண்டுள்ளது.  தூய்மை இந்தியா இயக்கம் போன்று தண்ணீருக்கான இயக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உதவும்.

 

இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுகள் வரும் ஆண்டுகளின் அடித்தளத்தை வலுவாக்குவதோடு, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவை திறக்கும். 

 

உங்களின் எதிர்பார்ப்புகள், கனவுகள், உறுதிப்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும். 

 

இதுபற்றி காசியில் நாளை நான் விரிவாகப் பேசவிருக்கிறேன்.  நிதியமைச்சருக்கும், அவரின் குழுவினருக்கும் மீண்டும் நான் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தியாவின்  அனைத்து குடிமக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துக்கள். 

 

உங்களுக்கு எனது நன்றி.



(Release ID: 1577665) Visitor Counter : 198