மத்திய அமைச்சரவை
2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படும்
Posted On:
12 JUN 2019 7:44PM by PIB Chennai
ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வகையில் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356 உட்பிரிவு (4)-இன் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஜூலை 3, 2019 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
விளைவுகள்:
இந்த முடிவின் விளைவாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி 2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
தற்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சியின் காலம் 2019 ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கலாம் என மாநில ஆளுநர் பரிந்துரைத்திருந்தார்.
அமலாக்கம்:
இதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான தீர்மானம் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன் வைக்கப்படும்.
பின்னணி:
ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 92-இன் கீழ் 20.06.2018 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஓர் அறிவிக்கையை வெளியிட்டார். அதன்படி இது தொடர்பான தற்காலிக மற்றும் இதர விளைவுகளுக்கான ஏற்பாடுகளுடன் மாநிலத்தின் அரசு மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கான உரிமையை தன்னிடம் எடுத்துக் கொண்டார். தொடக்கத்தில் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநில சட்டமன்றம் 21.11.2018 அன்று மாநில ஆளுநரால் கலைக்கப்பட்டது.
20.06.2018 அன்று மாநில ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆறு மாதங்களுக்குப் பிறகு 19.12.2018 அன்று முடிவுக்கு வந்தது. ஜம்மு-காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 92வது பிரிவின் கீழ் இத்தகைய அறிவிப்பை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வழிவகை ஏதும் இல்லை. எனவே, மாநில நிலவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாநில ஆளுநரின் பரிந்துரைப்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவும் அறிவிக்கையை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் தரும் தீர்மானம் ஒன்றுக்கு 28.12.2018 அன்று மக்களவையும் 3.1.2019 அன்று மாநிலங்களவையும் ஒப்புதல் வழங்கின.
குடியரசுத் தலைவர் ஆட்சியின் நடப்புக் காலம் 2019 ஜூலை 2 உடன் முடிவடைகிறது. 2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கலாம என மாநில ஆளுநர் பரிந்துரை செய்திருந்தார்.
*****
(Release ID: 1574187)
Visitor Counter : 211