பிரதமர் அலுவலகம்

ஆளுங்கட்சிக்கு ஆதரவு கிடைத்ததற்கு முழு காரணமும் அதிகாரிகளையே சேரும் : பிரதமர்

தற்போதுள்ள நிலை மாறி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்ற மக்களின் உறுதியையும், எதிர்பார்ப்புகளையும் தேர்தலின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன : பிரதமர்
அனைத்து அமைச்சகங்களும், மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் : பிரதமர்

Posted On: 10 JUN 2019 8:52PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் அரசின் அனைத்து செயலாளர்களுடனும் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு.ராஜ்நாத் சிங், திரு.அமித் ஷா, திருமதி.நிர்மலா சீதாராமன் மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலை துவக்கி வைத்த அமைச்சரவை செயலாளர் திரு.பி.கே.சின்ஹா, கடந்த முறை ஆட்சியின்போது எவ்வாறு பிரதமர் இயக்குநர் / துணைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளுடன் நேரிடையாக கலந்துரையாடியதை நினைவுகூர்ந்தார்.

துறைச் செயலாளர்கள் குழுக்களிடம் இரண்டு முக்கிய பொறுப்புகளை முன்வைக்க உள்ளதாக அமைச்சரவை செயலாளர் தெரிவித்தார் : (அ) ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் மைல்கற்களுடன் கூடிய ஐந்தாண்டு திட்ட ஆவணம். (ஆ) ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், 100 நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.

கலந்துரையாடலின்போது, நிர்வாக முடிவெடுத்தல், வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம், தகவல் தொடர்பு முனைப்புகள், கல்வி சீர்திருத்தம், சுகாதாரம், தொழிற்கொள்கை, பொருளாதார வளர்ச்சி, திறன்வளர்ப்பு போன்றவை குறித்து பல்வேறு துறைச் செயலாளர்களும் தங்களது தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்திகளை பகிர்ந்துக் கொண்டனர்.

முதல்முறையாக 2014, ஜுன் மாதம் செயலாளர்களுடன் இதே போன்ற கலந்துரையாடியதை பிரதமர் அவர்கள் கலந்துரையாடலின்போது, நினைவுகூர்ந்தார். சமீபத்திய பொதுத் தேர்தல்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தது. இந்த வெற்றி முழுவதும், கடந்த ஐந்தாண்டுகளாக கடினமாக உழைத்து, தீட்டங்களை தீட்டி, அடித்தள அளவில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்திய ஒட்டுமொத்த அதிகாரிகளுக்கு உரித்தானதாகும். இந்த முறை நடைபெற்ற தேர்தல்கள் சாதகமான வாக்கினால் குறிக்கப்பட்டுள்ளது. இது அன்றாட நாளில் கிடைக்கப்பெறும் அனுபவங்களின் அடிப்படையில் சாதாரண மனிதனுக்கு உருவான நம்பிக்கையினால் ஏற்பட்டதாகும்.

மக்கள் தொகையியல் ஆதாயம் குறித்து பேசிய பிரதமர், மக்கள் தொகையியலை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும் என்றார். மத்திய அரசின் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு மாநில அரசின் ஒவ்வொரு மாவட்டமும் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்திட பங்காற்ற வேண்டும். “இந்தியாவில் உருவாக்குவோம்” திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், இறுதியில் உறுதியான முன்னேற்றமடைவதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார். 

“வியாபாரத்தை எளிமையாக்குவோம்” திட்டத்தின் கீழ் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம், சிறு வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு அதிக வசதிகள் ஏற்படுத்தி தருவதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். அரசின் ஒவ்வொரு துறையும் “வாழ்வை எளிமையாக்குதல்” குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.

நீர், மீன்வளம் மற்றும் கால்நடை ஆகியவையும் அரசின் முக்கிய துறைகளாக இருக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலின்போது நாட்டை முன்னெடுத்து கொண்டு செல்வதற்கான பார்வை, உறுதி மற்றும் திறனை செயலாளர்கள் கொண்டிருப்பதை கண்டதாக அவர் கூறினார். இந்த அணியை குறித்து பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.   ஒவ்வொரு துறையிலும் வெளிப்பாடுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்திட தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டுக் கொண்டாட்டம் எனும் மைல்கல்லை  அனைத்துத் துறைகளும் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்ற உணர்வினை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றார். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வண்ணம் அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

***


 



(Release ID: 1573935) Visitor Counter : 147