பிரதமர் அலுவலகம்

நொய்டா விரிவாக்கப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்; பக்ஸார், குர்ஜா அனல் மின் நிலையங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்

Posted On: 09 MAR 2019 4:54PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா விரிவாக்கப்பகுதிக்கு இன்று வருகை தந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பண்டிட் தீன் தயாள் தொல்லியல் நிறுவனத்தில் காணொளிக் காட்சியின் மூலம் நொய்டா சிட்டி செண்டர் முதல் நொய்டா எலெக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் குர்ஜாவில் 1320 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் மற்றும் பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸாரில் 1320 மெகா வாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஆகிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பண்டிட் தீன் தயாள் தொல்லியல் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அந்த வளாகத்தில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் திருவுருவச் சிலையையும் அவர் திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிறுவன வளாகத்தில் அமைந்திருந்த தீன் தயாள் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது கூடியிருந்த மக்களிடையே பேசுகையில், “நொய்டா பகுதி தலைகீழாக மாறியிருக்கிறது. வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கான பெயர் பெற்றதாக இப்போது நொய்தா பகுதி விளங்குகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி செய் என்ற இலக்கின் மையமாக நொய்டா பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார். அந்த வகையில் உலகின் மிகப்பெரும் கைபேசி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மின்னணு கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நொய்டாவில் அமைந்திருப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் மிகப்பெரும் விமான நிலையம் உத்தரப் பிரதேச மாநிலம் ஜேவாரில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இது நிறைவடையும்போது, ஜேவார் விமானநிலையமானது வாழ்க்கைக்கான வசதியை மட்டும் கொண்டு வருவதாக மட்டும் இருக்காது; உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பொருளாதார ரீதியாக பயனளிப்பதாகவும் இருக்கும். நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். உதான் திட்டத்தின்  மூலம் சிறிய நகரங்களிலும் விமானப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதில்  மத்திய அரசு உறுதியோடு உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மின்சாரத் துறையை மேம்படுத்துவதில் அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், உற்பத்தி, மின்பகிர்மானம், விநியோகம், மின் இணைப்பு ஆகிய மின்சார உற்பத்தியின் நான்கு அம்சங்களிலும் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார். இத்தகைய அணுகுமுறையானது மின்சாரத் துறையை முற்றிலுமாக மாற்றியுள்ளதோடு ஒரு நாடு ஒரே பகிர்மான வசதி என்பது இன்று நடைமுறையாகியுள்ளது என்றும் அவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறைக்கும் கூட அரசு உரிய ஊக்கமளித்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  ‘ஒரு உலகம், ஒரு சூரியன், ஒரு பகிர்மான வசதி’ என்பதே தனது கனவாக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பக்ஸார், குர்கா ஆகியவற்றில் துவங்கப்படும் அனல் மின் நிலையங்கள் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்றும், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் இதர அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைப்பதை மாற்றியமைக்கும் என்றும் பிரதமர் கூறினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் மின்சார உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ஆய்வாளர்களுக்கும், இந்தியாவில் இருந்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரும் மாணவர்களுக்கும், நவீன வசதிகளை வழங்குவதாக இந்த நிறுவனம் இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் கூறினார். 125 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் ஆதரவின் விளைவாக இது சாத்தியமானது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டில் ஊழலை முற்றிலுமாக அகற்றுவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த நமது படைவீரர்களின்  துணிவைப் போற்றிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான முடிவுகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

******


(Release ID: 1568480) Visitor Counter : 227