பிரதமர் அலுவலகம்

அகமதாபாத் ஷாப்பிங் திருவிழா 2019-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

நாட்டில் தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று கூறினார் பிரதமர்

Posted On: 17 JAN 2019 9:20PM by PIB Chennai

அகமதாபாத் நகரில் சபர்மதி நதிக்கரையில் நடைபெறும் ஆமதாபாத் ஷாப்பிங் திருவிழா 2019-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சாலையோர வியாபாரிகள் முதல் ஷாப்பிங் மால் வியாபாரிகள் வரை, கைவினைஞர்கள் முதல் ஓட்டல்கள் - உணவகங்கள் - தொடர்புடைய வணிகர்கள் வரை, குஜராத் முழுவதிலும் இருந்து தங்களுடைய பொருட்களைக் காட்சிப்படுத்தவும், விற்பதற்கும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்திருப்பதால் இந்தத் திருவிழா தனித்துவமானதாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி பிரதமர் பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். ``இதுபோன்ற பெரிய வணிக மாநாடுகளை வழக்கமாக வெளிநாடுகளில் தான் நாம் பார்ப்போம். இப்போது துடிப்புமிக்க குஜராத் மற்றும் அகமதாபாத் ஷாப்பிங் திருவிழா ஆகியவை ஒரே சமயத்தில் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சி'' என்று அவர் கூறினார்.

``நாட்டில் தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக அரசு தொடர்ச்சியாக முயற்சிகள் எடுத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான விதிமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன. அதனால்தான் தொழில் செய்வதற்கு உகந்த பட்டியலில் 142வது இடத்தில் இருந்து 77வது இடத்துக்கு கணிசமாக முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்று பிரதமர் குறிப்பிட்டார். ``சிறு தொழில்முனைவோருக்கான நடைமுறைகளை எளிமையாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து பெருமுயற்சிகள் எடுத்து வருகிறோம். ஜி.எஸ்.டி. மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையில் சிறுதொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் அளிக்கலாம் என்ற நடைமுறையை உருவாக்கி வருகிறோம். ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களை 59 நிமிடங்களில் நாங்கள் அளிக்கிறோம்'' என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக காந்திநகரில் மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் துடிப்புமிக்க குஜராத் உலக வர்த்தக மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார். காந்தி நகரில் ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும்  9வது துடிப்புமிக்க குஜராத் மாநாடு இதன் மூலம் தொடங்கியுள்ளது. அரசுகளின் தலைவர்கள், உலகளாவிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். நாளை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

******

 



(Release ID: 1560464) Visitor Counter : 96