மத்திய அமைச்சரவை

பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார முகமை அமைப்பை தேசிய சுகாதார ஆணையம் என மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 JAN 2019 5:51PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தை (Pradhan Mantri - Jan Arogya Yojana)  சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள தேசிய சுகாதார முகமையை “தேசிய சுகாதார ஆணையமாக” மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்புதலின் மூலம், ஏற்கனவே உள்ள “தேசிய சுகாதார முகமை” கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தேசிய சுகாதார ஆணையம் அமைக்கப்படுகிறது. இதன் அலுவலகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைக்கப்படும்.

முடிவுகளை எடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்லடுக்கு கட்டமைப்புக்கு மாற்றாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் தலைமையிலான ஆட்சிமன்ற வாரியம் அமைக்கப்படும். இது, இந்தத் திட்டத்தை எந்தவொரு தடங்கலும் இன்றி செயல்படுத்தும் வகையில், முடிவுகளை விரைந்து மேற்கொள்ள வழிவகை செய்யும். அரசு, துறை வல்லுநர்கள் உள்ளிட்டோரின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டு, ஆட்சிமன்ற வாரியம் விரிவான அளவில் இருக்கும். அதோடு, ஆட்சிமன்ற வாரியத்தில் மாநிலங்களும் சுழற்சி அடிப்படையில் பிரதிநிதிகளாக சேர்க்கப்படும்.

புதிய தேசிய சுகாதார ஆணையத்துக்கு புதிதாக நிதிஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேசிய சுகாதார முகமைக்கு, தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், கட்டமைப்பு, செயல்பாட்டு செலவு உள்ளிட்டவற்றுக்காக மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியையே, தற்போது திட்டமிடப்பட்டுள்ள தேசிய சுகாதார ஆணையம் பயன்படுத்திக் கொள்ளும்.

திறமையான, வலுவான மற்றும் வெளிப்படையான முறையில் முடிவுகளை எடுப்பதன் மூலம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தை செயல்படுத்த முழு நம்பகத்தன்மை, அதிகாரம் மற்றும் சட்டப்பூர்வ உரிமையை தேசிய சுகாதார ஆணையம் பெற்றிருக்கும்.

 

*****


(Release ID: 1558375)