பிரதமர் அலுவலகம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட தினத்தின் வெள்ளி விழாவில் பிரதமர் உரை
प्रविष्टि तिथि:
12 OCT 2018 5:26PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட தினத்தின் வெள்ளி விழாவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
கடந்த 25 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்து, தேச நிர்மாணத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது பங்களிப்பை செய்திருப்பதாக அவர் கூறினார். நமது கலாச்சாரத்தின் முக்கியமான பகுதியாக மனித உரிமைகள் பாதுகாப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பின், சுதந்திரமான பாகுபாடற்ற நீதிமுறை; செயலூக்கம் உள்ள ஊடகம்; செயலூக்கம் உள்ள மக்கள் சமூகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்றவை மனித உரிமைகள் பாதுகாப்பில் இடம்பெற்றிருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் என்பது வெறும் முழக்கமாக மட்டும் இருக்க முடியாது. அது, நமது பண்பாட்டின் ஒரு பகுதியுமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த நான்காண்டுகளில், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மனிதகுலத்தின் அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் குறிக்கோளாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம்- பெண்குழந்தைகளைப் படிக்கவைப்போம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், இலவச எரிவாயுத் திட்டம், சௌபாக்யா திட்டம் போன்றவற்றின் சாதனைகளை அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்களின் பயனாக மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்பது கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பது துப்புரவையும், கோடிக்கணக்கான ஏழை மக்களின் கௌரவத்தையும் உறுதி செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், சுகாதார காப்பீடு திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்முயற்சிகள் பற்றியும் அவர் உரையில் குறிப்பிட்டார். முத்தலாக் முறையிலிருந்து முஸ்லிம் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான சட்டம் பற்றி கூறிய அவர், மக்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது என்றார்.
மின்னணு முறையில் செயல்படும் நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தேசிய நீதித் துறை தகவல் தொகுப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம், எளிதாக நீதி கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஆதார் என்பது தொழில்நுட்ப அடிப்படையில் அதிகாரமளிக்கும் முன்முயற்சி என்றும் அவர் கூறினார்.
இந்த முன்முயற்சிகளெல்லாம் வெற்றி பெறுவதற்கு மக்களின் பங்கேற்பு முக்கிய காரணம் என்று பிரதமர் தெரிவித்தார். மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வோடு மக்கள் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தங்களின் பொறுப்புகளைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பங்களிப்பும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.
******
(रिलीज़ आईडी: 1552844)
आगंतुक पटल : 959