மத்திய அமைச்சரவை

பிரிக்ஸ் நாடுகளுடன் சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 24 OCT 2018 1:14PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் இன்று (24.10.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

விரிவான விவரங்கள் :

தொழிலாளர்  நலச் சட்டம் மற்றும்  அமலாக்கம், தொழிலாளர்கள் குறிப்பாக அடித்தளத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான சந்தைக் கொள்கைகள், தொழிற்கல்வி, திறன் மற்றும் பயிற்சி, சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைக்கவும் பரஸ்பர நிகழ்வுகளை நடத்தவும் பிரிக்ஸ் நாடுகளுடனான இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு உறுப்பு நாடுகள் பிரிக்ஸ் கட்டமைப்பின் தொழிலாளர் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பிரிக்ஸ் சமூகப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தம் ஒரு சர்வதேச உடன்பாடு அல்ல என்றும் சர்வதேச சட்டங்களின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விளைவு:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரிக்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பு, கூட்டுச் செயல்பாடு அதிக வீரியத்துடன் ஈடுபடுவதற்கு வகை செய்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி புதிய தொழில்புரட்சியில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பொதுவான நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் செயல்படும். தொழிலாளர், வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக கலந்தரையாடல் ஆகியவற்றில் கூட்டுத்திட்டங்களை அமல்படுத்துவதற்கும், அறிவுசார் நிகழ்வுகளை உறுப்புநாடுகள் பகிர்ந்து கொள்வதற்கும் இது வகை செய்யும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் சர்வதேசப் பயிற்சி மையத்துடன் பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் நலக் கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிய வடிவிலான வேலைகளில் தொடர்பு கொள்ளவும் வகை செய்கிறது. இளைஞர் வேலைவாய்ப்பு துறைகளில் இந்த நெட்வொர்க் கவனம் செலுத்தும். மேலும், ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், தகவல் பரிமாற்றம், திறன் நிர்மாணத்திற்கு இணையக் கட்டமைப்பு உள்ளிட்ட புதிய கற்றல் தொழில்நுட்பங்களையும் இந்த நெட்வொர்க் கண்டறியும். பிரிக்ஸ் நாடுகளின் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உடன்பாடுகளில் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

                                         *******



(Release ID: 1550587) Visitor Counter : 90