பிரதமர் அலுவலகம்

பாக்யாங் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார் - இந்திய விமானப் போக்குவரத்து வசதியை பெறுகிறது

Posted On: 24 SEP 2018 1:24PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்தில் பாக்யாங் புதிய விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தார்.  இமாலய மாநிலமான  அங்கு முதல் விமான நிலையம் உருவாகியுள்ளது, இது நாட்டின் 100-வது விமான நிலையம் ஆகும்.

    இவ்விழாவை ஒட்டி அங்கு திரளாக கூடியிருந்த மக்களிடையே பேசிய பிரதமர், இந்த நாள் சிக்கிம் மாநிலத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும் என்றும், இந்தியாவுக்கும் இது முக்கியமான நாள் என்றும் குறிப்பிட்டார். பாக்யாங் விமான நிலையம் திறக்கப்பட்டதோடு இந்தியாவில் 100-வது விமான நிலையத்தை நாம் உருவாக்கியிருப்பதை பெருமிதத்தோடு தெரிவித்த பிரதமர்,  சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நிலோஷ் லாமிச்சானே அண்மையில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்ததையும் சுட்டிக்காட்டினார்.

   பாக்யாங் விமான நிலையம் சிக்கிம் மாநிலத்திற்கு இனி விமானப் போக்குவரத்து வசதியை பெரிதும் எளிதாக்கிவிடும் என்று பிரதமர் கூறினார்.   சாமானிய மனிதருக்கும் இதன் மூலம் பயன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உடான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமான நிலையம் அமைந்துள்ளது என்றார் பிரதமர்.

     வடகிழக்கு பிராந்தியம் முழுமையும் உள்கட்டமைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து வசதி துரிதமாகக் கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு தாம் பலமுறை நேரடியாக வருகை தந்திருப்பதை அவர் குறிப்பிட்டார். இது தவிர மத்திய அமைச்சர்கள் பலரும், இந்த பிராந்தியத்திற்கு அடிக்கடி வருகை  புரிவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் பலன்கள் தற்போது வெளிப்படையாக தெரிவதை சுட்டிக்காட்டிய பிரதமர்,  விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து, சிறந்த சாலை வசதிகள், பெரிய பாலங்கள் உள்ளிட்டவையே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

   நாட்டில் தற்போது இயங்கிவரும் 100 விமான நிலையங்களில், 35 விமான நிலையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

   சிக்கிம் மாநிலத்தின் முன்னேற்றத்தின் காரணம் இயற்கை முறையிலான விவசாயமே என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இயற்கை முறையில் பலனளிக்கும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு இயக்கம் மத்திய அரசால் தொடங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

------



(Release ID: 1547074) Visitor Counter : 199