மத்திய அமைச்சரவை

மக்கள் மற்றும் ஏழைகளுக்கான முயற்சிகளுக்கு ஊக்கம்

நிதி உள்ளடக்கத்திற்கான தேசிய இயக்கமான பிரதமர் மக்கள் நிதி திட்டத்தை 14.8.2018க்கு பிறகும் தொடர அமைச்சரவை ஒப்புதல்
அனைத்து குடும்பம் என்பதில் இருந்து அனைத்து வயதுவந்தோருக்கும் கணக்கு தொடங்க கவனம்
வங்கிகளில் மிகைப்பற்று உச்சவரம்பு ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக அதிகரிப்பு
வங்கிகள் மிகைப்பற்று ரூ. 2000 வரை உச்சவரம்புக்கு நிபந்தனைகள் இல்லை
உச்சவரம்பு வசதிக்கான வயது வரம்பு 18-65 ஆக உயர்வு
புதிய ரூபே அட்டை வைத்திருப்போருக்கான காப்பீடு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு

Posted On: 05 SEP 2018 9:15PM by PIB Chennai

மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கான முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி உள்ளடக்கத்திற்கான தேசிய முயற்சியான பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தை கீழ்கண்ட மாற்றங்களுடன் தொடருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  • 14.8.2018க்கு பிறகும் நிதி உள்ளடக்கத்திற்கான தேசிய இயக்கம் தொடரும்
  • தற்போதுள்ள வங்கி மிகைப்பற்று உச்ச வரம்பு ரூ. 5,000த்தில் இருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படும்
  • ரூ. 2,000 வரையிலான உச்சவரம்புக்கு எந்த நிபந்தனைகளும் இருக்காது
  • உச்சவரம்பு வசதியை பெறுவதற்கான வயது 18-60லிருந்து 18-65 ஆக திருத்தம்
  • ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒவ்வொரு வயது வந்தவருக்கும் விபத்துக் காப்பீடு அளிக்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் 28.08.18க்குப் பின் தொடங்கப்பட்ட புதிய பிரதமர் மக்கள் நிதி திட்ட கணக்குகளில் புதிய ரூபே அட்டை வைத்திருப்பவர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு

தாக்கம்:

இந்த திட்டம் தொடர்வதால், நாட்டில் உள்ள அனைத்து வயது வந்தோர்கள் வங்கிக் கணக்கு வைத்திருப்பதுடன் இதர நிதி சேவைகள், சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறுவதுடன் வங்கி மிகைப்பற்று உச்சவரம்பாக ரூ.10000/- பெறலாம். இதன்படி இந்த திட்டம் அவர்களை நிதி சேவைகளின் நீரோட்டத்தில் கொண்டு வருவதுடன், பல்வேறு மாநிலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கான வசதியையும் அளிக்கும்.

பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் சாதனைகள்:

  • சுமார் 32.41 கோடி மக்கள் நிதி கணக்குகள் திறக்கப்பட்டு ரூ 81,200 கோடிகள் முதலீடு இருப்பு உள்ளது.
  • மகளிர் மக்கள் நிதி கணக்குகளில் 53% மற்றும் மக்கள் நிதி கணக்குகளில் 59% ஊரக மற்றும் புற நகர் பகுதிகளில் உள்ளன. செயல்பாட்டில் உள்ள 83%க்கும் கூடுதலான மக்கள் நிதி கணக்குகள் (அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் தவிர) ஆதாருடன் இணைக்கப்பட்டு 24.4 கோடி ரூபே வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • 7.5 கோடிக்கும் அதிகமான மக்கள் நிதி கணக்குகள் நேரடி மானிய பரிமாற்றம் பெறுகின்றன.
  • 1000 முதல் 1500 வீடுகள் கொண்ட 1.26 லட்சம் ஊரக சேவை பகுதிகளில் வங்கி முகவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 13-16 கோடி ஆதார் சார்ந்த பட்டுவாடா முறை பரிவர்த்தனைகள் ஜூலை மாதத்தில் இந்த வங்கி முகவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதுவரை பிரதமர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள 13.98 கோடி சந்தாதாரர்களிடமிருந்து 19,436 கோரிக்கைகள் பெறப்பட்டு ரூ. 399.72 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
  • இதே போல் 5.47 கோடி பிரதமர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களிடம் இருந்து 1.10 லட்சம் கோரிக்கை பெறப்பட்டு, ரூ. 2206.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு 1.11 கோடி பேர் சந்தா செலுத்தியுள்ளனர்.

பிரதமர் மக்கள் நிதி திட்டத்தினை நடைமுறைப்படுத்த வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் நிதி கணக்குகள் மற்றும் மொபைல் பேங்கிங் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சேமிப்பு, கடன் விநியோகம், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு வசதி அளித்திருப்பதுடன், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் பயன்களை நேரடியாக அளிகவும் வழிவகை செய்துள்ளது.

இந்த முன்னோடி நிதி உள்ளடக்க திட்டத்தை தொடரவும், குடும்பத்திற்கு ஒரு கணக்கு என்பதில் இருந்து ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் ஒரு கணக்கு தொடங்க கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நிதி கணக்கு – ஆதார் – மொபைல் எண் ஆகியவற்றை இணைக்கும் வழிமுறை இந்த நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவை அளித்து அதன் மூலம் டிஜிட்டல் மயம், நிதி உள்ளடக்கம் மற்றும் காப்பீடு பெறும் சமுதாயம் ஆகியவற்றின் வேகம் அதிகரிக்கப்படும்.

பின்னணி:

அனைவருக்கும் வங்கி சேவை நிதி உள்ளடக்க மேம்பாடு மற்றும் நாடு முழுவதும் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஒரு வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்ய பிரதமர் மக்கள் நிதி திட்டம் என்ற தேசிய நிதி உள்ளடக்க இயக்கம் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது.

**************

 



(Release ID: 1545189) Visitor Counter : 414