பிரதமர் அலுவலகம்

உலக உயிரி எரிபொருள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரை

Posted On: 10 AUG 2018 12:42PM by PIB Chennai

உலக உயிரி எரிபொருள் தினத்தை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  

   விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், அரசு அதிகாரிகள்,  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில், உயிரி எரிபொருட்கள் இந்தியாவுக்கு புதிய ஊக்கத்தை அளிக்க முடியும் எனத் தெரிவித்தார். பயிர்களிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள், கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியது என்று அவர் கூறினார்.

     திரு அடல் பீஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது உயிரி எரிபொருளில் இருந்து எத்தனால் தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், எத்தனால் கலப்புத்திட்டத்திற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. விவசாயிகளுக்கு இதன் மூலம் பயன் கிடைப்பதுடன், கடந்த ஆண்டில் ரூ.4,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்ததாக பிரதமர் தெரிவித்தார். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த இலக்கு ரூ.12,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  உயிரிக்கழிவை உயிரி எரிபொருளாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு கணிசமான அளவுக்கு முதலீடு செய்துவருவதாக பிரதமர் தெரிவித்தார். 12 நவீன சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை இதன் மூலம் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

   ஜன்தன், வன்தன், கோபர்தன் ஆகிய திட்டங்கள் ஏழை, எளிய மக்கள், பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையை மாற்றியமைக்க  பேருதவி புரிந்துள்ளதாக  பிரதமர் குறிப்பிட்டார். உயிரி எரிபொருட்கள் ஆற்றலை உருவாக்கும் முயற்சி, மாணவர்கள்,ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், மக்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மட்டுமே நிறைவேற முடியும் என்று அவர் தெரிவித்தார். கிராமப்பகுதிகளுக்கு உயிரி எரிபொருளின் பயன்களை கொண்டுச் செல்ல அனைவரும் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

     “உயிரி எரிபொருட்கள் குறித்த தேசிய கொள்கை 2018” என்னும் கையேட்டை பிரதமர் வெளியிட்டார். பரிவேஷ் என்னும் ஒற்றைச்சாளர மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

------



(Release ID: 1542602) Visitor Counter : 293