பிரதமர் அலுவலகம்

ஊரக மின்மயமாக்கல் மற்றும் சௌபாக்யா திட்டங்களின் பயனாளிகளிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 19 JUL 2018 11:53AM by PIB Chennai

நாடு முழுவதும் 2014 ஆம் ஆண்டு முதல் மின்சார வசதி அளிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.  அனைத்து வீடுகளுக்கும் எளிதில் மின்சாரம் வழங்கும் பிரதமரின் திட்டம் எனப்படும் சௌபாக்யா திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது.  மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் அடைந்தவர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதன் 10-வது நிகழ்வாகும் இது.

     அண்மையில் மின்மயமாக்கப்பட்ட 18 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடுவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த பிரதமர், “இருளையே கண்டிராதவர்களுக்கு ஒளியேற்றுதலின் பொருளைப் புரிந்து கொள்ள இயலாது. இருளில் தங்கள் வாழ்க்கையை கழித்திராதவர்களுக்கு ஒளியின் மதிப்பை உணர்ந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.  

     தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்றது முதல் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்தார்.  முந்தைய அரசு அளித்த தவறான வாக்குறுதிகளைப் போல இல்லாமல், தற்போதைய அரசு ஒவ்வொரு கிராமத்தையும் மின்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.  இந்த அரசு மின்மயமாக்கலில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாடு முழுவதும் மின் விநியோக முறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

     நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும், மின்சார வசதி பெறாத 18 ஆயிரம் கிராமங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த மணிப்பூர் மாநிலம் லெய்சாங் கிராமம் கடைசியாக மின்சார வசதியைப் பெற்றது. இந்த 18 ஆயிரம் கிராமங்களில் பெரும்பாலானவை மலைப் பகுதிகளிலும், சாலை இணைப்புகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளிலும் உள்ளவை என்றும், அந்த கிராமங்களுக்கு மின்சார வசதி அளிப்பது பெரும் சிரமமாக இருந்தது என்றும் பிரதமர் தெரிவித்தார். இத்தகைய சிரமங்களுக்கு இடையே, கடமை உணர்வு கொண்ட குழுவினர் அயராது பாடுபட்டு, இந்த கிராம மக்களின் மின்சாரக் கனவை நனவாக்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

     கிழக்குப் பகுதியின் நிலையை அரசு மாற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ள 18,000 கிராமங்களில் 14,582 கிராமங்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவை என்றும், 5,790 கிராமங்கள் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவை என்றும் கூறினார்.  நாட்டின் கிழக்குப் பகுதியை மேம்படுத்துவதில் அரசு முன்னுரிமை அளித்து செயல்படுவதாகவும், முழுவதும் மின்மயமாக்கப்பட்ட அந்தப் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

     நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி அளிக்கும் நோக்கத்துடன், அனைத்து வீடுகளுக்கும் எளிதில் மின்சாரம் வழங்கும் பிரதமரின் திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர்  தெரிவித்தார்.  இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 86 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய பிரதமர், நாடு முழுவதும் நான்கு கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு அளிப்பதை இது உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

     பிரதமருடன் கலந்துரையாடிய தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள், மின்சாரம் தங்களது வாழ்க்கையையே மாற்றி அமைத்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.  சூரியன் மறைவதற்குள் வேலைகளை முடித்து, மண்ணெண்ணெய் விளக்குகள் மூலம் குழந்தைகளை படிக்க வைக்க போராடிய நிலை மாறி, மின்சாரத்தின் மூலம் தங்கள் வாழ்க்கை சுலபமானதாக மாறியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். தங்களின் வாழ்க்கைத் தரம் அடியோடு மாறி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான பயனாளிகள் தெரிவித்தனர். தங்கள் இல்லங்களில் விளக்கேற்றியதற்காக பிரதமருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 



(Release ID: 1539251) Visitor Counter : 295