மத்திய அமைச்சரவை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறை கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:42PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறைக் கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பின்வரும்  பிரிவுகளைச் சேர்ந்த கைதிகளுக்கு சிறப்பு  சலுகையாக,  மூன்று கட்டங்களாக விடுதலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 2018 அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று ஒரு பிரிவு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக 2019 ஏப்ரல் 10ஆம் தேதி (சம்பாரன் சத்தியாகிரக ஆண்டு தினம்) ஒரு பிரிவு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மூன்றாவது கட்டமாக 2019 அக்டோபர் 2ஆம் தேதி (மகாத்மா காந்தி பிறந்த தினம்) மற்றொரு பிரிவு கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

a) 55 வயது மற்றும் அதற்கு  மேற்பட்ட, தண்டனைக் காலத்தில் 50 சதவீதத்தை நிறைவு செய்த பெண் கைதிகள்

b) 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, தண்டனைக் காலத்தில் 50 சதவீதத்தை நிறைவு செய்த திருநங்கை கைதிகள்

c) 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, தண்டனைக் காலத்தில் 50 சதவீதத்தை நிறைவு செய்த ஆண் கைதிகள்

d) 70 சதவீத உடல் குறைபாடு உடைய, தண்டனைக் காலத்தில் 50 சதவீதத்தை நிறைவு செய்த மாற்றுத் திறனாளி கைதிகள்

e) மீள முடியாத நோய்வாய்பட்ட கைதிகள்

f) தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை நிறைவு செய்த கைதிகள்

   மரண தண்டனை விதிக்கப்பட்ட அல்லது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு இந்த சிறப்பு விடுதலை வழங்கப்படமாட்டாது.  வரதட்சணைக் கொலை, பாலியல் பலாத்காரம், மனிதக் கடத்தல் போன்ற கொடுங்குற்றங்களை புரிந்தவர்களுக்கும், பொடா, யுஏபிஏ, தடா, எஃப் ஐ சி என், போக்சோ சட்டம், கருப்பு பண பதுக்கல், பெஃமா சட்டம், என்டிபிஎஸ், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவை மூலம் தண்டனைப் பெற்றவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தாது.

  விடுதலை செய்ய தகுதி வாய்ந்த கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கும். கைதிகளின் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்குமாறு மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்படும். அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு , மாநில அரசுகள் பரிந்துரை செய்யும். ஒப்புதலுக்கு பின்னர், 2018 அக்டோபர் 2, 2019 ஏப்ரல் 10, 2019 அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

 பின்னணி

  தேசத் தந்தை  மகாத்மா காந்திக்கு பொருத்தமான அஞ்சலி செலுத்தும் வகையில், மனிதநேய அடிப்படையில், அவரது 150-வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு விடுவிப்பு மேற்கொள்ளும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

===============



(Release ID: 1539182) Visitor Counter : 274