பிரதமர் அலுவலகம்
பிரதமர் சத்தீஸ்கருக்கு ஜூன் 14ல் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUN 2018 11:43AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜூன் 14ம் தேதி சத்தீஸ்கர் பயணம் செய்கிறார். பிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நவீனமயமாக்கப்பட்ட ஆலை அதிக உற்பத்தித் திறனுள்ளதாகவும் தரம் உயர்த்தப்பட்ட விலைமலிவான உருக்குகளை உற்பத்தி செய்வதாகவும் அமைந்திருக்கும். அத்துடன் மின்சக்தியைச் சேமித்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அந்த ஆலை அமைந்திருக்கும்.
அத்துடன், பிலாயில் ஐ.ஐ.டி. கல்விக் கழகத்திற்கு நிரந்தரமான வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுகிறார். பாரத்நெட் இணையத்தின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கான அறிவிப்புப் பலகையை அவர் திறந்து வைக்கிறார். கிராம ஊராட்சிகளில் நிலத்தடி கண்ணாடி இழை இணைப்பு அமைப்பதற்காக பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து ஜகதல்பூருக்கும் ராய்ப்பூருக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மடிக் கணினிகள், சான்றிதழ்கள், காசோலைகளையும் அவர் விநியோகிப்பார். பின்னர் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
பிலாய் நகருக்கு வருவதற்கு முன்பு பிரதமர் புதிய ராய்ப்பூர் பொலிவுறு நகருக்கு வருகை தருகிறார். அங்கு, பொலிவுறு நகருக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு, கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைத் தொடங்கி வைக்கிறார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1535243)
வருகையாளர் எண்ணிக்கை : 162