பிரதமர் அலுவலகம்

நாடெங்கிலும் உள்ள இளம் புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புதுத்தொழில் தொடங்கிய தொழில் முனைவோரிடம் பிரதமர் காணொலிப் பாலம் மூலம் கலந்துரையாடல்

Posted On: 06 JUN 2018 1:00PM by PIB Chennai

நாடெங்கிலும் உள்ள இளம் புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புதுத்தொழில்  தொடங்கிய தொழில் முனைவோரிடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.06.2018)  காணொலிப் பாலம் மூலம் கலந்துரையாடினார். அரசுத் திட்டங்களின் பல்வேறு பயனாளிகளுடன் காணொலிப் பாலம்  மூலமாக பிரதமர் கலந்துரையாடுவது இது நான்காவது முறையாகும்.

இந்தியாவின் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்களை உருவாக்குபவர்களாக மாறியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், மக்கள் தொகை லாப ஈவுப் பங்கினைப் பயன்படுத்திக் கொள்வதில் அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். புதிய தொழில் தொடங்கும் துறையில் சிறந்து விளங்க போதுமான மூலதனம், தைரியம், மக்களுடன் தொடர்பு ஆகியவை தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தொடக்க நிலை நிறுவனங்கள் என்றால் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப புதுமைப்படைப்புக்கள் மட்டுமே என்று இருந்த காலம் மாறி வருவதாக பிரதமர் கூறினார். தற்போது பல துறைகளில் தொடக்க நிலை நிறுவனங்கள் இருப்பதாக அவர் கூறினார். 28 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 419 மாவட்டங்களில் தொடக்க நிலை நிறுவனங்களுக்கான மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றில் 44 சதவீத தொடக்க நிலை நிறுவனங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்ளுர் பகுதிகளில் புதுமைப்படைப்புக்களை தொடங்கிடு இந்தியா திட்டம் ஊக்குவித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 45 சதவீத தொடக்க நிலை நிறுவனங்கள் பெண்களால் அமைக்கப்பட்டுள்ளன.

பதிவு உரிமை மற்றும் வர்த்தக சின்னப்பதிவு ஆகியவை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதாக திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். வர்த்தக சின்னம் பதிவு செய்வதற்கு  நிரப்ப வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 8-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக சின்னப்பதிவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. முந்தைய அரசின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போல 3 பங்கு பதிவு உரிமைகளும் செய்யப்பட்டுள்ளது.

இளம் தொழில்முனைவோரிடையே கலந்துரையாடியபோது, இளைஞர்கள் புதுமை படைப்பதை ஊக்குவிக்கவும், இளம் தொழில் முனைவோர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் அரசு ரூ.10,000 கோடி நிதியத்தை உருவாக்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நிதியத்தின் மூலம் ரூ.1285 கோடி நிதியுதவி உறுதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனையடுத்து மொத்தம் ரூ.6980 கோடி முதலீட்டுக்கான நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தொழில் தொடக்க சுற்றுச்சூழலை வலுவானதாக மாற்றுவதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விளக்கிய பிரதமர், அரசின் இ-மார்க்கெட் பிளேஸ் வலைதளம், தொடங்கிடு இந்தியா வலைதளத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து தொடக்கநிலை நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்கலாம் என்றும் கூறினார். தொடக்க நிலை நிறுவனங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு வருமானவரி விலக்கு வழங்கப்படுகிறது. இளம் தொழில் முனைவோர், சுய சான்றளிப்பு செய்தால் மட்டுமே போதுமானது என்ற நிலையை உருவாக்க  தொழிலாளர் சட்டங்கள் 6, சுற்றுச்சூழல் சட்டங்கள் 3 மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். ஸ்டார்ட் அப் இந்தியா சப் என்ற ஒற்றைச் சாளர டிஜிட்டல் மேடையை அரசு உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தொடக்க நிலை நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்கள் தொழில் முனைவோருக்கு கிடைக்கும் சூழல் அமைப்பு ஆகியன வெளியிடப்படுகின்றன.

பயனாளிகளுடன் கலந்துரையாடிய திரு.நரேந்திர மோடி இளைஞர்களிடையே புதுமைப்படைப்பையும், போட்டியிடும் திறனையும் வளர்ப்பதற்கு அரசு பல்வேறு போட்டிகளை தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார். அடல் புதிய இந்திய சவால், ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான், மாபெரும் விவசாய சவால் போன்ற போட்டிகளை அவர் பட்டியலிட்டார். இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போன்ற புதுமைப்படைப்பாளர் போட்டிகளை நடத்துவது குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் தாம் பேசியிருப்பதாக திரு.மோடி கூறினார்.

இந்தியாவில் புதுமைப்படைப்பை ஊக்குவிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் புதுமைப்படைப்பை ஊக்குவிக்க நாடெங்கும் 8 ஆராய்ச்சி பூங்காக்கள், 2,500 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

புதுமைப்படைப்பாளர்களிடையே பேசிய திரு.நரேந்திரமோடி வேளாண்துறையை  சீர்திருத்தி அமைக்க ஆலோசனை தெரிவிக்குமாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் உற்பத்திச் செய்வோம் என்பதைப் போலவே இந்தியாவில் வடிவமைப்போம் என்பதும் முக்கியமானது என்றார் அவர். இளைஞர்கள் புதுமைப்படைப்பினை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், “புதுமைப் படையுங்கள் அல்லது வளர்ச்சியின்றி தேங்கி நில்லுங்கள்” என்ற மந்திரத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமருடன் கலந்துரையாடிய இளைஞர்கள் தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் வரும் பல்வேறு அரசின் திட்டங்கள் எவ்வாறு தங்களுக்கு புதிய தொழில் தொடங்க உதவியதாக விளக்கினார்கள். தொழில் முனைவோரும், புதுமைப்படைப்பாளர்களும் தங்களது படைப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்கள். இவற்றில் வேளாண் புதுமைப்படைப்புகள் முதல் பிளாக் சங்கிலி தொழில்நுட்பம் வரை பல அடங்கியிருந்தன. பல்வேறு அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது புதுமைப்படைப்புகளை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களது அறிவியல் திறன்களுக்காக பாராட்டு தெரிவித்த பிரதமர், மேலும் இத்தகைய கண்டுபிடிப்புக்களை செய்யுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

“புதுமைப்படைத்திடு இந்தியா”வை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு நாட்டுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இன்னவேட் இந்தியா என்ற ஹாஷ் டேக் மூலம் தங்களது கருத்துக்களையும் புதுமைப்படைப்புக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

                                ------



(Release ID: 1534571) Visitor Counter : 154