புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

“புள்ளியியல் தினம்” 29 ஜுன், 2019 அன்று கொண்டாடப்படுகிறது

Posted On: 27 JUN 2019 12:34PM by PIB Chennai

அன்றாட வாழ்வில் புள்ளியியலின் பயன்பாடு குறித்து பிரபலப்படுத்தவும், கொள்கைகளை வகுப்பதில் புள்ளியியல் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், மத்திய அரசு புள்ளியியல் தினத்தை கொண்டாடி வருகிறது. தேசிய அளவில் கொண்டாடப்படும் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்நாள் இடம்பெறுவதுடன், தேசிய புள்ளியியல் நடைமுறையை உருவாக்கி, இத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்-ஐ சிறப்பிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான ஜுன்    29-அன்று கொண்டாடப்படுகிறது.

      இந்நாளை குறிக்கும் விதமாக, நாடுமுழுவதும் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஜுன், 2019 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிக்கு மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கம் மற்றும் திட்டத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ராவ் இந்தர்ஜித்சிங் தலைமை ஏற்கவுள்ளார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையும்,  இந்திய புள்ளியியல் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் திரு. விவேக் தேப்ராய், இந்திய புள்ளியியல் கழகத் தலைவர் திரு. பிரவின் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

 

 புள்ளியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பேராசிரியர் சி.ஆர்.ராவ் விருது இந்த விழாவின்போது வழங்கப்படவுள்ளது. புள்ளியியல் தொடர்பான அகில இந்திய போட்டியில் வெற்றிபெறும் முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களும் இந்த விழாவில் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுவார்கள்.

      “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு” (SDG) என்பதே இந்த ஆண்டு புள்ளியியல் தின கொண்டாட்டத்தின் மையக் கருத்தாக இருக்கும்.

“நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு” பற்றிய அறிக்கையும், தேசிய குறியீட்டு விதிமுறைகளும் இந்த நிகழ்ச்சியின்போது வெளியிடப்படவுள்ளன.

இதேபோன்று, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கள அலுவலகங்கள், மாநில அரசுகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் / துறைகளின் சார்பிலும் புள்ளியில் தினத்தை ஒட்டி கருத்தரங்குகள், மாநாடுகள், விவாத அரங்குகள், வினாடி வினா போட்டி,  சொற்பொழிவுகள், கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்களிடையே, குறிப்பாக, இளைய தலைமுறையினரிடையே சமூக - பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கை வகுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

******



(Release ID: 1576003) Visitor Counter : 421