கோவாவில் நடைபெற்ற 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுத் திரைப்படமாக வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ் (We Are All Strangers) என்ற படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகள், சிறியவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் காலத்தின் சவால்கள், மனிதர்களிடையே உருவாகும் பிணைப்புகள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
அந்தோணி சென் இயக்கிய இந்தத் திரைப்படம் 157 நிமிடங்கள் ஓடக்கூடியது. மாண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் குரோயிங் அப் ('Growing Up) திரைப்படத் தொடரின் மூன்றாவது படமாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு இந்த தொடரில் இலோ இலோ (Ilo Ilo - 2013), வெட் சீசன் (Wet Season - 2019) ஆகிய படங்கள் வெளியாகின.
சிங்கப்பூரில் வாழும் 21 வயது இளைஞர் ஜுன்யாங், அவரது தந்தை பூன் கியாட் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. நான்கு பேர் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கும்போது, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் பயணம் தொடங்குகிறது.
படத்தில் ஜுன்யாங் கதாபாத்திரத்தில் நடித்த திரு கோ ஜியா லர் கூறுகையில், சுமார் 8,000 குழந்தைகளில் இருந்து தாம் இதற்குத் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். முறையான நடிப்புப் பயிற்சி இல்லாமல் திரைத்துறையில் நுழைந்ததாகவும், இயக்குநருடன் தொடர்ந்து பணியாற்றியதால் நடிப்பில் தேர்ச்சி பெற்றதாகவும் அவர் கூறினார். இளமைப் பருவத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும், வாழ்க்கையில் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அவர் குறிப்பிட்டார்.
லிடியா கதாபாத்திரத்தில் நடித்த ரெஜீன் லிம், ரத்த உறவாக இருந்தாலும் ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கக் கூடும் என்றார். புரிதல், ஏற்றுக்கொள்ளுதல், உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஆகியவையே குடும்பத்தை உருவாக்குகின்றன என அவர் தெரிவித்தார்.
இந்தத் திரைப்படம் பல்வேறு நாடுகளின் மக்களிடையே மனிதநேய உறவுகளை வளர்க்கும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் சந்திப்பை திரு கிரண் முரளி ஒருங்கிணைத்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343028®=3
****
SK/PLM/RJ