பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்புக் கல்லூரியின் 66-வது பயிற்சியின் பட்டமளிப்பு மற்றும் நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 2:56PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (26.11.2026) நடைபெற்ற தேசியப் பாதுகாப்புக் கல்லூரியின் (என்டிசி) 66-வது பயிற்சியின் பட்டமளிப்பு, நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். மாறிவரும் புவிசார் அரசியல் சூழல், போர் முறைகளுக்கு ஏற்ப உடனடி அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்ளும் அதே வேளையில், எதிர்காலப் பாதுகாப்புச் சவால்களுக்கு நிறுவனங்களைத் தயார்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் புவியியல், நீண்ட எல்லைகள், கடல்சார் நலன்கள் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேசப் பொறுப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசியப் பாதுகாப்பில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

கல்லூரியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வகுப்பறைகளுடன் நின்றுவிடாமல், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட தொடர்புடைய அமைச்சகங்களுக்குச் செயல்படுத்தக்கூடிய கொள்கைப் பரிந்துரைகளாக வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உத்திசார் போர் ஒத்திகைப் பயிற்சிகளில் இணைத்ததையும், சென்னை ஐஐடி-யுடன் இணைந்து வழங்கப்படும் நிர்வாக எம்பிஏ பாடத்திட்டத்தையும் அவர் பாராட்டினார். 47 வாரங்கள் நடைபெற்ற இப்பயிற்சியில், நட்பு நாடுகளைச் சேர்ந்த 40 அதிகாரிகள் உட்பட 122 அதிகாரிகள் பங்கேற்றனர். இறையாண்மைக்கு மதிப்பளித்தல், பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சர்வதேச உத்திசார் ஈடுபாட்டுத் திட்டம் (இன்ஸ்டெப்) போன்ற முன்முயற்சிகளையும் பாராட்டினார். தேசியப் பாதுகாப்புக் கல்லூரி கமாண்டன்ட் ஏர் மார்ஷல் மனிஷ் குமார் குப்தா, சென்னை ஐஐடி பேராசிரியர் கே. முரளி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341878&reg=3&lang=1   

***

SK/SE/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342540) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Nepali , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Malayalam