நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையாகி சமூகத்துக்குத் திரும்புபவர்கள், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் பல சவால்களைச் சந்திக்கின்றனர். கடந்த காலத்தின் சுமையில் இருந்து விடுபடவும் அவர்கள் போராடுகின்றனர் என்று ரஷ்ய திரைப்பட இயக்குநர் நிகிதா க்ருஷின் தெரிவித்தார்.
கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தனது ‘நியூ ஹோம்’ (New Home) திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 101 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ரஷ்ய மொழித் திரைப்படம், உலக அளவில் முதன்முறையாகத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. சிறப்பு விருந்தினர் நாடாக இடம்பெற்றுள்ள ரஷ்யாவின் திரைப்படக் காட்சிப் பிரிவில் இப்படம் இடம்பெற்றுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையானவர்கள் மறுவாழ்வு பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்து அது தொடர்பாக இப்படத்தை உருவாக்கியதாக க்ருஷின் கூறினார்.
ஏழு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையாகும் அன்னா என்ற பெண்ணின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது. பணம், குடும்பம், எதிர்காலத் திட்டம் என எதுவுமின்றி வெளியே வரும் அவருக்கு வேலை, தங்குமிடம் ஆகியவற்றுக்கான உதவி சமூக நலத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது பல மனப்போராட்டங்களை அவர் எதிர்கொள்கிறார். குற்ற உணர்வு, மன்னிப்பு, மறுவாழ்வு, இரண்டாவது வாய்ப்பு ஆகியவை படத்தின் முக்கியக் கருப்பொருள்களாகும்.
அன்னா என்பது, குறிப்பிட்ட ஒருவரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அல்ல என்றும், இதேபோன்ற சூழலைச் சந்தித்த பலருடனான உரையாடல்களின் அடிப்படையில் உருவானது என்றும் இயக்குநர் தெரிவித்தார்.
இந்தியா-ரஷ்யா திரைப்பட ஒத்துழைப்பு குறித்துப் பேசிய க்ருஷின், ரஷ்யாவில் இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்ததாகக் கூறினார். நிதி, தொழில்நுட்ப உதவிகளைத் தாண்டி இரு நாட்டு மக்களின் கலாசாரத் தொடர்புகளை வெளிப்படுத்தும் கதைகள் மூலம் திரைப்பட்ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339905®=3
****
SK/PLM/RJ