கோவாவில் இன்று (20.11.2026) 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் தொடக்கத் திரைப்படமாக, ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் ‘ஃபாதர்லேண்ட்’ (Fatherland) திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் இந்தியாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசியல் கொள்கைகளால் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனியின் நிலையை இப்படம் எடுத்துரைக்கிறது. நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி எழுத்தாளர் தாமஸ் மான், அவரது மகள் எரிகா ஆகியோரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
1949-ம் ஆண்டு, அமெரிக்காவில் 16 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் ஜெர்மனி திரும்புகின்றனர். அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிராங்க்பர்ட்டில் இருந்து சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வீமர் வரை அவர்கள் மேற்கொள்ளும் பயணமே படத்தின் கதைக்களம். குடும்ப உறவு, பண்பாட்டு அடையாளங்கள், பழைய நினைவுகள், தாய்நாட்டின் மீதான பற்று ஆகியவை இதில் பேசப்படுகின்றன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை இணைக்கும் இப்படம், விழாவின் ‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்ற கருப்பொருளைப் பிரதிபலிப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஈவா புஸ்சின்ஸ்கா குறிப்பிட்டார்.
82 நிமிடங்கள் கொண்ட இப்படத்தில் சாண்ட்ரா ஹுல்லர், ஹான்ஸ் ஸிஷ்லர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். போலந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து இதைத் தயாரித்துள்ளன. கேன்ஸ், சான் செபாஸ்டியன், டெல்லுரைட் ஆகிய புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாவ்லிகோவ்ஸ்கி, சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.
****
TV/PLM/SH