கோவாவில் நடைபெறவுள்ள 57-வது சர்வதேச திரைப்பட விழா 2026-ல், பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஜனநாயகம், சுதந்திரம், அடையாளம், வரலாறு, சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இத்திரைப்படங்கள், பல்வேறு நாடுகளின் வாழ்க்கைச் சூழல்களையும் மக்களின் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன.
பிரேசிலின் ‘அமடியோ அண்ட் தி ஹைப்போதெட்டிக்கல் நியூ வேர்ல்டு’ திரைப்படம், அடிமைகளை விடுவிக்கும் போராட்டத்தில் பங்காற்றும் ஆப்பிரிக்கக் கண்டுபிடிப்பாளரைப் பற்றியது. இந்தோனேசியாவின் ‘தி சீ ஸ்பீக்ஸ் ஹிஸ் நேம்’ திரைப்படம், 1998-ம் ஆண்டு ஜனநாயகப் போராட்டத்தின்போது காணாமல் போன மாணவர் குறித்ததாகும். தென்னாப்பிரிக்காவின் ‘தி ட்ரெக்’ காலனித்துவக் கொடுமைகளைப் பேசுகிறது.
ஈரானின் ‘பவுல்ட்ரி ஃபார்ம்’ காணாமல் போன நண்பனைத் தேடும் ஈராக் நாட்டுச் சிறுவனின் ஆபத்தான பயணத்தைக் காட்டுகிறது.
சவுதி அரேபியாவின் ‘ஹிஜ்ரா’, சீனாவின் ‘எம்பர்ஸ்’ போன்ற படங்கள் குடும்ப உறவுகள், இளைய தலைமுறையின் கனவுகள், பெண்களின் வாழ்க்கை, தனிப்பட்ட அடையாளம் ஆகியவற்றைப் பேசுகின்றன.
இந்தியாவின் ‘ஆர்ட்டிக்கிள் 370’ திரைப்படத்தை ஆதித்யா தர் இயக்கியுள்ளார். 2016-ம் ஆண்டு காஷ்மீர் கலவரப் பின்னணியில், 370-வது சட்டப்பிரிவை நீக்கும் நடவடிக்கையை இப்படம் சித்தரிக்கிறது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இசை ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றது. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் படங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இது தவிர கசகஸ்தான், கியூபா, இத்தாலி, எகிப்து, ஜெர்மனி, லிபியா, கத்தார், துனிசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், நார்வே, சீனா, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், மலேசியா, வியட்நாம், பெலாரஸ், ஆகிய நாடுகளின் படங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ‘கிண்டிக்’, ‘பராகோவா’, ‘போ போ’, ‘சேஃப் எக்சிட்’, ‘9 டெம்பிள்ஸ் டு ஹெவன்’, ‘காட்டன்’, ‘பாகா’, ‘1982’, ‘அண்ட் தி ஸ்னோ வாஸ் ஃபாலிங்’, ‘பாப்’ ஆகியவை அடங்கும்.
நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் பல்வேறு இடங்களில் இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. 86 நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் திரைப்படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன. சிறப்புத் தொகுப்புகள், பழைய திரைப்படங்களின் மறுதிரையிடல், புகழஞ்சலி நிகழ்ச்சிகள் ஆகியவையும் இவ்விழாவில் இடம்பெறும். இதன் மூலம் உலக நாடுகளுக்கு இடையிலான கலாசாரப் பரிமாற்றத்துக்கு இவ்விழா வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336218®=3&lang=1
(Release ID : 2336218)
****
AD/PLM/SH