குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

காவல்துறை சிறப்பாக செயலாற்றும்போது, நிர்வாகம் சிறப்பாக இருப்பதாக மக்கள் உணர்கின்றனர் - குடியரசுத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 3:21PM by PIB Chennai

இந்திய காவல் பணி 78 ஆர்ஆர் (2025 பிரிவு) பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (2026 நவம்பர் 10) குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அப்போது பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர் காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் நிர்வாகத்தின் அடையாளங்களாக திகழ்கின்றனர் என்று மக்கள் எண்ணுவதாக கூறினார். காவல்துறை சிறப்பாக செயலாற்றும்போது, நிர்வாகம் சிறப்பாக இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். ஒரு காவல்துறை அதிகாரி மக்களின் குறைகளை கனிவுடன் கேட்கும்போது தங்களுக்கு பெரும் ஆதரவு கிடைப்பதாக மக்கள் உணர்வதாக குறிப்பிட்டார். சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பின்தங்கிய, உயர் அதிகாரிகளை எளிதில் அணுக இயலாத நிலையில் உள்ளவர்களின் அச்சத்தை களைவதற்கும், குறைகளை தீர்ப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று இந்திய காவல் பணி அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

காவல்துறையில் பணியாற்றும் சில பணியாளர்கள் உயர் அதிகாரிகளை விட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அதிக திறன் உடையவர்களாக இருக்கலாம். எனவே, தங்களுடைய குழுவில் உள்ள மிகவும் இளைய உறுப்பினர்களிடம்கூட கற்றுக்கொள்ள தயங்க வேண்டாமென்று பயிற்சி அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினார். அவர்களுடைய பணிச்சூழலின்போது மக்கள் பங்கேற்பையும், குழுப்பணியையும் ஊக்குவிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். குழு உறுப்பினர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அவர்களுடைய திறன்களையும், உற்சாகத்தையும் மேம்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

காவல்துறை  குறித்த சட்டங்கள், விதிகள் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் கிடைப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். எனினும் தங்களுடைய செயல்பாடுகள், மாண்புகள் மூலம் மட்டுமே மக்களிடமிருந்து உண்மையான மரியாதையை பெற முடியும் என்று அவர் கூறினார். மக்கள் மீதான ஆதிக்க உணர்வுக்கு மாற்றாக சேவையாற்றுவதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334622&reg=3&lang=1

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334779) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Gujarati , Malayalam