மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 10:06AM by PIB Chennai
இந்தியாவின் நீலப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் மீன்வளத்துறையை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் கடல்சார் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மீன் உற்பத்தி, கடல்பாசி வளர்ப்பு, திருக்கை மற்றும் சூரை மீன் உற்பத்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ.218 கோடியும், லட்சத்தீவுகளுக்கு ரூ.175 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீவுப் பகுதிகள் நாட்டின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் பெரும் பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும், மீன்பிடித்தலுக்கான வாய்ப்புகளும் இங்கு அதிகம் உள்ளன.
சூரை மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கில் குளிர்சாதன வசதிகள், பதனப்படுத்தும் மையங்கள் அரசால் அமைக்கப்படுகின்றன. மேலும் கடல்பாசி வளர்ப்பு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு, ஏற்றுமதி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உள்ளூர் மீனவர்கள் மற்றும் தீவுப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் கடல்சார் ஏற்றுமதிக்கும் இது வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீவுப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் சந்தைகளுக்கும் ஏற்றுமதிக்கும் உயர்தர மீன் வகைகளை எளிதில் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பின்பற்றி நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளில் சூரை மீன் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், அந்தமான் தீவுகளில் பிரத்யேக சூரை மீன் வளர்ப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடல்பாசி வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களும் ஊக்குவிக்கப்படுவதால் கிராமப்புறப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அறிவியல் பூர்வமான மேலாண்மை முறைகள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவின் கடல்சார் செல்வங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334511®=3&lang=1
***
SS/PD/GS