இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2026 7:05PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை வகித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற நான்காவது சிறப்புக் கூட்டம் இதுவாகும்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல் குறித்து அமைச்சரவைச் செயலாளர் விளக்கமளித்தார். திரவ இயற்கை எரிவாயு (LNG)/ சமையல் எரிவாயு (LPG) மற்றும் உரங்கள் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து அவர் தெரிவித்தார். திரவ எரிவாயு கொள்முதலுக்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் ஒட்டுமொத்த கையிருப்பு மற்றும் விநியோக நிலை போதுமானதாக இருப்பதாகவும் அவர் கூறினார். போதுமான கச்சா எண்ணெய் கிடைப்பதால், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100%-க்கும் அதிகமான பயன்பாட்டு அளவில் செயல்பட முடிகிறது. இது பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் தொடர்ச்சியான உற்பத்தியை உறுதி செய்கிறது. குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பிஎன்ஜி இணைப்புகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய எரிவாயு தொகுப்பை விரிவுபடுத்துதல், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி மற்றும் மறுவாயுவாக்கல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நகர எரிவாயு விநியோக வலையமைப்புகளை விரிவுபடுத்துதல், மற்றும் 2026-ம் ஆண்டின் குழாய்வழி உள்கட்டமைப்பு ஆணையின் கீழ் காலவரையறைக்குட்பட்ட குழாய்வழி மற்றும் இறுதிநிலை இணைப்பு ஒப்புதல்கள் ஆகியவற்றின் மூலம், திரவ எரிவாயுவிற்குப் பதிலாக பிற எரிசக்தி மூல மாற்றத்தை அரசு எளிதாக்குகிறது.
கூட்டத்தின்போது, வரவிருக்கும் ராபி பருவத்திற்கான உரத் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், உரங்களுக்கான மாற்று ஆதாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொடி தாங்கிய கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகளின் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாலுமிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நேரத்தில் தகவல்கள், அவசரக்கால உதவிகள் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை வழங்குவதற்கான ஒரு நடைமுறையை உருவாக்கப் பிரதமர் உத்தரவிட்டார்.
நடைபெறும் மோதலினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
எரிசக்தித் துறையில் தற்சார்பை உறுதிசெய்ய, சூரியசக்தி மற்றும் புதைபடிவ எரிபொருள் அல்லாத பிற ஆதாரங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
நெருக்கடியால் எழும் சவால்களை எதிர்கொள்ள, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார். குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291992®=3&lang=1
**
TV/BR/SU