இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 11:55PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 14 பதக்கங்களிலிருந்து 114 பதக்கங்களை வென்று முன்னேறியுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சாதனை, இந்தியாவின் விளையாட்டு வீரர்களிடம் உள்ள அபரிமிதமான திறனையும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய விளையாட்டு வீரர்கள் 30 தங்கப் பதக்கங்களை வென்றதுடன், ஐந்து உலக சாதனைகளையும், ஒன்பது ஆசிய சாதனைகளையும் படைத்துள்ளனர் என்றும், நான்கு போட்டிகளில் பதக்க மேடையின் மூன்று இடங்களையும் இந்தியர்களே கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இரண்டு முக்கிய சாதனைகளைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கேற்ற 61 விளையாட்டு வீரர்களில் 36 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர் என்று கூறினார். மேலும், பங்கேற்ற 56 பெண் விளையாட்டு வீரர்களில் 34 பேர் பதக்கங்களை வென்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
திடமான மன உறுதி இருந்தால், எந்தக் கனவும் நனவாகலாம், எந்தச் சவாலையும் முறியடிக்கலாம் என்பதை விளையாட்டு வீரர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்று பிரதமர் கூறினார். இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதைச் சமூகம் ஒரு குறையாகப் பார்த்த காலம் முடிந்துவிட்டது என்றும், திறமையானவர்களுக்கு இந்தியா முழு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
ஒருபுறம் இது வெறும் எண்… ஆசிய பாரா விளையாட்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டும் புள்ளிவிவரம்.
எனினும், மிக முக்கியமாக, இந்த அபரிமிதமான வளர்ச்சி நமது விளையாட்டு வீரர்களின் அளப்பரிய திறனையும் ஆற்றலையும் உணர்த்துகிறது.
30 தங்கப் பதக்கங்கள், 5 உலக சாதனைகள், 9 ஆசிய சாதனைகள், இந்தியர்கள் ஒட்டுமொத்த பதக்க மேடையையும் கைப்பற்றிய 4 நிகழ்வுகள், இந்த ஆண்டு நிகழ்ந்தன.
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு புள்ளிவிவரங்கள்:
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கேற்ற 61 விளையாட்டு வீரர்களில், 36 பேர் பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ளனர்.
பங்கேற்ற 56 பெண் விளையாட்டு வீரர்களில், 34 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்!
திடமான மன உறுதி இருந்தால், எந்தக் கனவும் நனவாகலாம், எந்தச் சவாலையும் முறியடிக்கலாம் என்பதை விளையாட்டு வீரர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பும் இளைஞர்களைச் சமூகம் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்த காலம் முடிந்துவிட்டது.
இப்போது, உங்களிடம் திறமை இருந்தால், இந்தியாவே உங்களுக்கு ஆதரவளிக்கும்; உங்களுக்காக உற்சாகத்துடன் கைதட்டும்.
வாருங்கள், விளையாடுங்கள், மிளிருங்கள்!”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333392®=3&lang=1
***
SK/BR/RJ