மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்காகவே பொது நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் – மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 3:51PM by PIB Chennai

நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவைகளில் பொது கணக்கு குழுக்கள் பொது நிதியின் பாதுகாவலர்களாக தங்களுடைய பங்களிப்பை வலுப்படுத்த வேண்டுமென்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று அழைப்பு விடுத்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவைகளின் பொது கணக்கு குழு தலைவர்களுக்கான மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், அரசு பொது நிதியிலிருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முறையாக கணக்கு காட்ட வேண்டும் என்றும் எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகவே அது முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடமையும் ஜனநாயகத்தின் அடிப்படைத்தூண்கள் என்றும் தெரிவித்தார் அவர். சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான மாற்றம் பொதுச் செலவினங்களின் உண்மையான அளவுகோல் என்று குறிப்பிட்டார்.

பொது கணக்கு குழு என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பு என்று தெரிவித்தார். பொதுச்செலவினங்களை ஆய்வு செய்யவும், நிதி சார்ந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்தவும், நிர்வாக அமைப்பை பொறுப்புடமையாக்கவும் இந்த அமைப்புக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இக்குழுக்களின் பணியானது கணக்குகளை ஆய்வு செய்வது அல்லது தணிக்கை முடிவுகளை பரிசோதிப்பது மட்டுமின்றி, பொது நிதி அதன் நோக்கத்தை அடைந்துள்ளதா மற்றும் ஒதுக்கப்பட்ட பணிக்கான பயன்களை அளித்துள்ளதா என்பதையும் அவை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது கணக்கு குழுவின் தலைவராக எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்ககூடிய தனித்துவமான ஜனநாயக நடைமுறை குறித்து குறிப்பிட்ட திரு ஓம் பிர்லா, இது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும், வலிமையையும் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். இக்குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிரிதிநிதித்துவம் இருப்பதால் பொதுச் செலவினங்களை ஆய்வு செய்யும் போது பல்வேறு அம்சங்கள் முன்வைக்கப்படுவதை உறுதி செய்வதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332043&reg=3&lang=1

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332245) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada , Malayalam