இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 3:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 நவம்பர் 3 அன்று நண்பகல் 12.30 மணியளவில் ரூ.21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ திட்டங்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
பிங்க் லைன் என்று கூறப்படும் ரூ.8,300 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்டுள்ள புனே மெட்ரோவின் 3-வது வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பு, நவீன போக்குவரத்து தீர்வுகள் மூலம் புனேவின் நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இத்திட்டம் ஒரு முக்கிய அம்சமாகும்.
சுமார் 23 கிலோமீட்டர் தொலைவிலான பிங்க் வழித்தடம் மான் பகுதியையும், மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தையும் இணைக்கிறது. ஹிஞ்சேவாடி தகவல் தொழில்நுட்ப மையத்தையும் சிவாஜி நகரையும் இணைக்கும் இந்த வழித்தடம் புனேவின் முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதுடன் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், இதர பயணிகளின் அன்றாட பயணத்தை எளிதாக்கும்.
இவ்வழித்தடம் ஏற்கனவே உள்ள மெட்ரோ கட்டமைப்புடன் இணைக்கப்படுவதன் மூலம், புனேவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே தடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். இது தனியார் வாகனங்களை சார்ந்திருப்பதையும், போக்குவரத்து நெரிசல், வாகனங்களால் ஏற்படும் கரியமில உமிழ்வு ஆகியவற்றை குறைக்கவும், வணிக, குடியிருப்புப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் உதவும்.
பிங்க் வழித்தடம் முழுமையாக பெண் ரயில் ஓட்டுனர்களாகல் இயக்கப்பட உள்ளது. அத்துடன் இத்திட்டம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. அதற்கான மொத்த மின்தேவையில் சுமார் 30 சதவீதம் சூரிய சக்தியால் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் சுமார் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புனே மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். புனே மெட்ரோவின் 2ஏ, 2பி, 4, 4ஏ ஆகிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.
இந்நகரத்தின் மெட்ரோ கட்டமைப்பை பெருமளவில் விரிவுபடுத்துவதுடன் முக்கிய குடியிருப்பு, வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்பை இது வலுப்படுத்தும்.
இரண்டாம் கட்ட திட்டத்தில் 2ஏ, 2பி வழித்தடங்கள் சுமார் 12.75 கிலோமீட்டர் நீளத்தை கொண்டிருக்கும். 2ஏ வழித்தடம் வானஸ் – சாந்தனி சவுக் இடையே இணைப்பை ஏற்படுத்தும். அதேபோல் 2பி வழித்தடம் ராம்வாடியையும் வித்தல்வாடியையும் இணைக்கும். இது ஏற்கனவே உள்ள மெட்ரோவின் கிழக்கு - மேற்கு கட்டமைப்பை விரிவுபடுத்தும். சுமார் 25.52 கிலோமீட்டர் தொலைவிலான 4-ம் வழித்தடம் கராடியையும், கடக்வாஸ்லாவையும் இணைக்கும். 6.12 கிலோமீட்டர் தொலைவிலான 4ஏ வழித்தடம், நல் ஸ்டாப்பையும் மாணிக் பாக்கையும் இணைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331557®=48&lang=1
***
SS/IR/LDN/GS