இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 6:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நாளை (30 அக்டோபர் 2026) பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் 24-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார்.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, ரூ.18,690 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். இது விவசாயிகளின் நலன் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
மேலும், வேளாண் விளைபொருட்களைச் சேமித்தல், பதப்படுத்துதல், அது தொடர்பான உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக, 'வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்' கீழ் உருவாக்கப்பட்ட 521 அலகுகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அத்துடன், அதிக மதிப்புள்ள தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வருமான வாய்ப்புகளை அதிகரிக்கவும், 12 தோட்டக்கலை தொகுப்புகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேச மாநிலம் ராய்செனில் நடைபெறும் இத்திட்டத்தின் 24-வது தவணைத் தொகை விடுவிப்பு நிகழ்வில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டம், வேளாண் துறையின் பிற முக்கிய முன்னெடுப்புகளின் சிறப்பம்சங்களை எடுத்துரைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக அமையும். மேலும், விவசாயிகளின் நலன், வளம், அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இத்திட்டம், 'நேரடிப் பணப் பரிமாற்றம்' மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்கி, அவர்களின் விவசாயச் செலவுகள், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330171®=3&lang=1
***
SK/SV/PS