இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 3:14PM by PIB Chennai
மதிப்பிற்குரிய சைப்ரஸ் அதிபர் அவர்களே,
இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளே,
ஊடகத் துறை நண்பர்களே,
வணக்கம்!
கலிமேரா (சைப்ரஸ் மொழியில் வணக்கம்)
சைப்ரஸ் அதிபரையும் அவர்தம் குழுவினரையும் இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் அவர்களே, கடந்த ஆண்டு சைப்ரஸ் நாட்டிற்கு நாங்கள் வந்திருந்த போது, எங்களுக்கு நீங்கள் மிகவும் அன்பான வரவேற்பை அளித்தீர்கள். இந்தியாவின் மீதான உங்களின் சிறப்பான நட்புணர்வின் அடையாளமாக, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கி என்னைக் கவுரவித்தீர்கள்.
உங்களது அந்த முழுமையான பயணத்தின் போது, உங்களின் உண்மையான அன்பு, நட்பு மற்றும் இந்தியாவின் மீதான உங்களின் வலுவான பிணைப்பு ஆகியவற்றை எங்களால் உணர முடிந்தது. இன்று, நீங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணம் நமது இரு நாடுகளின் கூட்டுப் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையேயான நட்பு மிகவும் வலுவானது மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற நெறிமுறைகளின் மீது இரு நாடுகளும் கொண்டுள்ள பொதுவான நம்பிக்கையே நமது கூட்டாண்மைக்கான அடித்தளமாக விளங்குகிறது. அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நாம் மதிக்கிறோம். இந்த உன்னதக் கொள்கைகளுக்கு இந்தியா முழுமையாகக் கடமைப்பட்டுள்ளது. எப்போதும் தொடர்ந்து அவ்வாறே இருக்கும்.
இன்று, இந்தியாவும் ஐரோப்பாவும் தங்களது உறவுகளின் புதியதொரு பொற்காலத்தில் அடி எடுத்து வைக்கும் வேளையில், சைப்ரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பாவுடனும் இந்தியாவை இணைக்கும் ஒரு முக்கிய முதலீட்டு நுழைவாயிலாகவும் உருவெடுத்து வருகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் முதல் 10 முதலீட்டாளர்களுள் சைப்ரஸ் நாடும் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில், சைப்ரஸிலிருந்து இந்தியாவிற்குள் வரும் முதலீடுகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன. இதன் மூலம் நமது இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கை மேலும் வலுவடைந் துள்ளது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த உத்வேகத்தின் அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீடுகளை மீண்டும் இரு மடங்காக உயர்த்த நாம் இலக்கு வைத்துள்ளோம். இந்த கூட்டு தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, நமது நம்பகமான உறவை இன்று உத்திசார் ஓத்துழைப்பு என்ற அடுத்தகட்ட நிலைக்கு உயர்த்துகிறோம்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையேயான இந்த உத்திசார் கூட்டு செயல்பாடு, இரு நாடுகளின் நிதி மற்றும் சேவைத் துறை மையங்களை இணைப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இது சைப்ரஸ் நாட்டின் உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் வேளாண் துறைகளில் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிடும்; அதே நேரத்தில், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தொழில்களில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும்.
சைப்ரஸ் நாட்டுடன் இணைந்து, கிஃப்ட் சிட்டியை ஒரு உலகளாவிய நிதி மற்றும் சேவைத் துறை மையமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நாம் விரைவுபடுத்துவோம். அதோடு இரு நாடுகளின் கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையேயான இணைப்பையும் மேம்படுத்துவோம்.
நண்பர்களே,
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு என்பது நமது உறவின் ஒரு முக்கியத் தூணாகும். சமீபத்திய ஆண்டுகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவப் பரிமாற்றங்களும், பயிற்சிகளுக்கான ஒத்துழைப்பும் வளர்ந்து வருவது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நமது கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமின்றி, 'இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சி' மற்றும் 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம்' போன்ற முக்கிய முன்முயற்சிகள் மூலம் இணைப்பை உறுதி செய்வதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
நண்பர்களே,
சைப்ரஸ் நாட்டில் வசிக்கும் இந்திய வல்லுநர்களும் மாணவர்களும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள்-மக்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடர்புகளை இன்னும் தீவிரமாக்குவதற்கு எதிர்காலத்தில் வேலைக்காகவோ அல்லது படிப்புக்காகவோ ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, அந்தப் பயணம் சட்டப்பூர்வமாகவும், பாதுகாப்பாகவும், எந்தவிதத் தடங்கலும் இன்றி அமைவதை உறுதி செய்வோம்.
இன்று, கலாச்சாரம் மற்றும் உயர்கல்வித் துறை சார்ந்த ஒப்பந்தங்களிலும் நாம் கையெழுத்திடுகிறோம்; இது இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சாரப் பரிமாற்றத்தையும், ஆராய்ச்சி ஒத்துழைப்பையும் மேலும் ஆழமாக்கும்.
நண்பர்களே,
இன்று, முக்கியமான உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் நாம் விவாதித்தோம். உக்ரைனாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, அமைதிக்கான ஆரம்பகட்ட முயற்சிகளையும், மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதையும் நாம் தொடர்ந்து ஆதரிப்போம். உலகம் எதிர்கொண்டு வரும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய நிறுவனங்களைச் சீரமைப்பது அவசரமானது மற்றும் இன்றியமையாதது என்பதிலும் நாம் உடன்படுகிறோம்.
மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,
இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையேயான பிணைப்பு காலத்தின் சோதனைகளைக் கடந்து வலுவாக நிலைத்து நின்றுள்ளது. இன்று, 'இந்தியா - சைப்ரஸ் உத்திசார்ந்த கூட்டு செயல்பாடுகளுக்கான திட்டங்களை கூட்டாண்மை' நிறுவப்பட்டதன் மூலம், புதிய ஆற்றல், லட்சியம் மற்றும் உத்வேகத்துடன் நமது உறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல நாம் தயாராக உள்ளோம்.
நமது உறவை ஒத்துழைப்பிலிருந்து கூட்டு உருவாக்கத்திற்கும், கூட்டாண்மையிலிருந்து கூட்டுச் செழிப்பிற்கும் மாற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இந்தியாவும் சைப்ரஸும் இணைந்து ஒரு பாதுகாப்பான, செழிப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
****
(Release ID: 2264085)
AD/VK/RJ