இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 2:19PM by PIB Chennai
மத்திய அமைச்சரவை சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஜிதின் பிரசாதா அவர்களே, தொழில்துறையின் அனைத்து தலைவர்களே, தலைமைச் செயல் அதிகாரிகளே, பிரதிநிதிகளே, காணொலி வாயிலாக இணைந்துள்ள நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களே, இந்தியாவின் எதிர்காலமாகத் திகழும் எனது இளம் தோழர்களே! இங்கு நேரடியாகக் கூடியுள்ள ஏராளமான உற்சாகமான இளைஞர்களே, பெண்களே, பெரியோர்களே!
இது செமிகான் இந்தியாவின் ஐந்தாவது பதிப்பாகும். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள விருந்தினர்களுக்கு எனது சிறப்பு வரவேற்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று விஸ்வகர்மா ஜெயந்தியும் ஆகும். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது பாரம்பரியத்தில், கட்டுமானம் மற்றும் படைப்பாற்றலின் அடையாளமாக விஸ்வகர்மா பெருமான் கருதப்படுகிறார். இன்றைய நிகழ்வுடன் ஏற்பட்டுள்ள இந்தத் தற்செயல் ஒற்றுமையைப் பாருங்கள். செமிகான் இந்தியா நிகழ்வு இன்றே தொடங்குகிறது. ஒருபுறம், பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நமது படைப்பாற்றல் பாரம்பரியம்; மறுபுறம், 21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பமும் தொலைநோக்குப் பார்வையும். இதுவே தற்சார்பு இந்தியாவுக்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கும் நமது உத்வேகமாகத் திகழ்கிறது.
நண்பர்களே,
ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ளார். கடந்த 15 நாட்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். நான் உங்கள் கவனத்தை 15 நாட்களுக்கு மட்டுமே ஈர்க்கிறேன். இந்தியா முன்னேறிச் செல்லும் திசையையும் வேகத்தையும் நம்மால் காண முடியும். இந்த செப்டம்பர் மாதத்தில், வெறும் 10 நாட்களுக்கு முன்பு, மும்பையில் உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு முகவர்கள், டோக்கன்மயமாக்கல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. இதே காலக்கட்டத்தில், இந்தியாவில் சுமார் 3,000 கிலோமீட்டர் நீளமுள்ள பிரத்யேக சரக்கு வழித்தடம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் பேசுவது செப்டம்பர் மாதத்தின் 10 நாட்களைப் பற்றித்தான்; நீண்ட காலத்தைப் பற்றியல்ல. இதன் மூலம் நாட்டில் சரக்குப் போக்குவரத்து வேகமடையும், சரக்குப் போக்குவரத்து மேலாண்மை மேம்படும், உற்பத்தித் துறைக்கு புதிய வலிமை கிடைக்கும்.
நண்பர்களே,
இதே காலக்கட்டத்தில், இந்த செப்டம்பர் மாதத்திலேயே, இந்தியாவின் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை வெளியானது. சவாலான இந்தக் காலக்கட்டத்திலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில், ஜப்பானின் கடன் மதிப்பீட்டு நிறுவனமும் இந்தியாவின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இவ்வாறு மதிப்பீடு உயர்த்தப்படுவது மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. இதன் பொருள், ஒருபுறம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது; மறுபுறம், இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
இந்த நம்பிக்கையின் மற்றொரு பெரிய வெளிப்பாட்டை மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காண முடிந்தது. இந்த மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. புதுதில்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது, உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மற்றொரு மிகப்பெரிய சான்றாகும்.
நண்பர்களே,
இந்தியாவின் இந்த சாதனைகளுக்கு மத்தியில், செமிகான் இந்தியா நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் முதல் பதிப்பு 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் நாம் சந்தித்து வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நமது விவாதத்தின் பொருள் மாறி வந்துள்ளது. முதல் பதிப்பில், கொள்கைகள் குறித்து நாம் பேசினோம். அடுத்தடுத்த பதிப்புகளில், அந்த விவாதம் மேலும் முன்னேறியது. திட்டங்கள் குறித்து நாம் பேசத் தொடங்கினோம். கோப்புகளில் கையெழுத்திடுவதில் இருந்து அடிக்கல் நாட்டுவது வரை நமது பயணம் தொடர்ந்தது. கடந்த ஆண்டு, முன்னோடித் தயாரிப்பு வரிசைகள் மற்றும் சோதனைச் சில்லுகள் குறித்து நாம் விவாதிக்கத் தொடங்கினோம். இந்தியாவின் உற்பத்திப் பிரிவுகளில் இருந்து முதல் மாதிரிகள் எவ்வாறு வெளிவரத் தொடங்கின என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு, வணிகரீதியான உற்பத்தி குறித்து நாம் பேசுகிறோம். தற்போது இந்தியாவின் தொழிற்சாலைகளில் இருந்து சில்லுகள் உற்பத்தியாகி, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடைகின்றன. இப்போதுதான், மொஹாலி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் மேலும் இரண்டு தொழிற்சாலைகளில் வணிகரீதியான உற்பத்தி தொடங்கியுள்ளது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே
எந்தவொரு நாட்டுக்கும் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த நிலையை எட்டுவது எளிதானதல்ல. இது ஒரு தொழிற்சாலையை அமைத்துவிட்டால் பணிகள் முடிந்துவிடும் துறை அல்ல. தொழில்நுட்பத் திறன்களை உருவாக்குவதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும். உலகில் எங்கெல்லாம் செமிகண்டக்டர் சூழலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் பல ஆண்டுகால தொடர் முயற்சிகளுக்குப் பிறகே அவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், உங்கள் ஒத்துழைப்புடன் இந்தியா சிப் வடிவமைப்பு, உற்பத்தி, உபகரணங்கள் தயாரிப்பு, மூலப்பொருட்களுக்கான சூழலமைப்பு, சோதனைத் திறன் என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி, வெற்றியைக் காட்டியுள்ளது. இந்தப் பயணத்தில், தொழில்துறையின் தலைவர்களான நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். இந்தியாவின் வெற்றிக்கான தூண்களாக நீங்கள் திகழ்கிறீர்கள்; நமது பயணத்தின் பங்காளிகளாக நீங்கள் இருக்கிறீர்கள்.
நண்பர்களே,
செமிகண்டக்டர் தொழில்துறையில் “டேப்-அவுட்” என்ற ஒரு சொல் உள்ளது. ஒரு சிப்பின் வடிவமைப்புப் பணி நிறைவடைந்து, அது உற்பத்திக்குச் செல்லும் நாளைத்தான் “டேப்-அவுட்” என்கிறோம். ஆனால், “டேப்-அவுட்” முடிந்தவுடன் பணிகள் நின்றுவிடுவதில்லை. அதே நாளில் அடுத்த பதிப்புக்கான பணிகள் தொடங்குகின்றன. இந்தியாவும் இதைத்தான் செய்து வருகிறது. இந்தியா செமிகண்டக்டர் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. நமது முதல் கட்டத்திற்காக சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது. அதேநேரத்தில், இரண்டாம் கட்டத்திற்காக 13.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நிதியை ஒதுக்க நிர்ணயித்துள்ளோம். சீர்திருத்த விரைவு நடவடிக்கையின் பாதையில் பயணித்து வரும் நாம், இந்தத் துறையில் மேலும் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். இப்போது சர்வதேச நிறுவனங்களும் நமது தொடக்க நிறுவனங்கள், இந்திய வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடியும். அதாவது, கொள்கைகள், நிதி, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் என உங்கள் திட்டங்களின் வெற்றிக்குத் தேவையான எதுவாக இருந்தாலும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
இந்தியாவில் தொழிற்சாலை இல்லாத சிப் வடிவமைப்பு நிறுவனங்கள் வளர வேண்டும் என்பதுடன், அறிவுசார் சொத்துகளும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்பதே நமது முயற்சியாகும். பல்வேறு வகையான கூட்டு செமிகண்டக்டர்களைத் தயாரிப்பது, சிலிக்கான் ஒளியியலைச் செமிகண்டக்டர் சூழலமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்குவது, செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது என இவை அனைத்தும் அவசியமாகும். இந்தத் திசையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். இதற்குத் தேவையான அடித்தளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.
விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதிலும் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு பங்கேற்றுள்ள உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தலைவர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் நீங்கள் பின்தங்கிவிடக் கூடாது. ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் மூலப்பொருட்கள் துறையைச் சேர்ந்த தலைவர்களுக்கும் இந்தியாவில் பொன்னான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஒட்டுமொத்த சூழலமைப்பும் ஒன்றிணைந்து வளர வேண்டும் என்பதே நமது விருப்பம். இதற்கான தேவையும் ஏற்கனவே உருவாகியுள்ளது. இதுவரை 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் இந்தத் திட்டங்களின் வரம்பு மேலும் விரிவடையும்.
நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் இந்தியாவில் கிடைக்கும் மற்றொரு முக்கியமான நன்மை இளைஞர் சக்தியாகும். திறமையும், தகுதியும் கொண்ட மனிதவளம். இன்று நம்மிடம் மிகப் பெரிய அளவில் பொறியியல் திறமை உள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்குகிறது. ஒருமுறை, ஓர் அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் என்னிடம், “எங்கள் நாட்டில் பொறியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவர்களை அழைக்கிறோம்; அவர்கள் அனைவரும் ஒரே அறைக்குள் அடங்கி விடுவார்கள். ஆனால் இந்தியாவில் பொறியாளர்களை அழைத்தால், ஒரு கால்பந்து மைதானம்கூட போதாது” என்று கூறினார். இதுதான் இந்தியாவின் வலிமை.
நண்பர்களே,
சிப் வடிவமைப்பைப் பொறுத்தவரை, மிகப்பெரிய அளவில் திறன் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வருவதற்கு சற்று முன்பு, இதே வளாகத்தில் தொழில் துறையைச் சேர்ந்த சில இளம் தோழர்களை நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் மாணவர்கள். இந்த மாணவர்கள் தாங்களே வடிவமைத்த சில்லுகளை எனக்குப் பரிசாக வழங்கினர். செமிகண்டக்டர் துறைக்காக ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நமது அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதைப் போல, ஏற்கனவே 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இவ்வளவு பெரிய திறமைவாய்ந்த மனிதவளம் உங்கள் அனைவருக்கும் ஒரு தங்கச் சுரங்கத்திற்குக் குறைவானதல்ல.
நண்பர்களே,
இந்த அரசின் முயற்சிகளுக்கு மத்தியில், இன்று நான் இளைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்தியாவில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள இளம் திறமையாளர்கள் முன்வர வேண்டும். வெளிநாடுகளில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் இந்தியாவில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியுடன் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குத் தொழில்துறைத் தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தொழில்துறைக்கு நன்மை கிடைப்பதுடன், இந்தியாவின் இளைஞர் சக்தியும் மேலும் வலுப்பெறும்.
நண்பர்களே,
வளர்ந்து வரும் செமிகண்டக்டர் தொழில்துறையும் சில சவால்களை எதிர்கொள்கிறது. அவை குறித்து நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். பல ஆண்டுகளாக உங்கள் துறையில் டிரான்சிஸ்டர்களின் அளவு குறித்து பேசப்பட்டு வந்தது. டிரான்சிஸ்டர்களின் அளவு குறையக் குறைய, கணினிகளின் செயல்திறன் அதிகரித்து, அவை மேலும் திறன் வாய்ந்தவையாக மாறின. இன்றும் இந்தக் கேள்வி முக்கியமானதாகவே உள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவு வருகையுடன், இந்தத் துறையின் முன் சில புதிய கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகளாவிய செமிகண்டக்டர் சந்தை 20 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கு செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய தேவையால் ஏற்பட்டதாகும். இதன் பொருள், இன்று நீங்கள் செயற்கை நுண்ணறிவில் பணியாற்றும்போது, சவால்கள் சிப்புக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து மட்டுமல்ல; அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் முக்கியமாகிறது. நினைவகத்தை செயலிக்கு அருகில் கொண்டு வருவது, பல சில்லுகள் ஒரே அமைப்பாகச் செயல்படும் வகையில் அவற்றை இணைப்பது, மிகப்பெரிய அளவிலான தரவுகளை தாமதமின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவது, வெப்பத்தையும் மின்சக்தியையும் நிர்வகிப்பது என செமிகண்டக்டர் தொழில்துறையின் முன் பல சவால்கள் உள்ளன. இந்தச் சவால்களுக்கு மத்தியில், புதிய மற்றும் நம்பகமான உற்பத்தி மையங்கள்தான் உலகிற்கு இப்போது மிகவும் தேவைப்படுகின்றன. இந்தியா இதற்காகத் தொடர்ந்து தன்னைத் தயார்படுத்தி வருகிறது. இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய செமிகண்டக்டர் தொழில்துறையின் முன் உள்ள மற்றொரு முக்கியமான பிரச்சினை எரிசக்திப் பாதுகாப்பாகும். செயற்கை நுண்ணறிவுக்காக தயாரிக்கப்படும் சில்லுகள், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தரவு மையங்களில், ஆயிரக்கணக்கான உயர் செயல்திறன் கொண்ட செயலிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, மிகப்பெரிய அளவிலான தரவுகளைச் செயலாக்குகின்றன. செயற்கை நுண்ணறிவு விரிவடையும் நிலையில், கணினிக் கணக்கீட்டுத் திறனுக்கான தேவையும் அதே வேகத்தில் அதிகரிக்கும். கணினிக் கணக்கீட்டுத் திறன் அதிகரிக்கும்போது, மின்சாரத்திற்கான தேவையும் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். எனவே, மின்சாரத் துறையில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானதாகும். நமது தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களில், தேவையான நேரத்தில், தேவையான அளவு மின்சாரம் கிடைப்பது மிகவும் முக்கியம். அதனால்தான் இந்தியா தற்போது மின்சாரத் துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில், நமது நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் திறன் சுமார் 2 ஜிகாவாட்டிலிருந்து 160 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது – 2-லிருந்து 160 ஆக உயர்ந்துள்ளது. அணுமின் துறையிலும் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இந்தத் துறை தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. சிறிய தொகுதி அணு உலைகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், இந்தியா தனது மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பையும் விரிவுபடுத்தியுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவில் மின்சார உள்கட்டமைப்பு இவ்வாறு விரிவுபடுத்தப்பட்டு வருவது, நமது செமிகண்டக்டர் சூழலமைப்புக்கும் மிகப்பெரிய வலிமையாகும். செமிகண்டக்டர் தொழில்துறைக்கு விருப்பமான இடமாக இந்தியா திகழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
இந்தியா ஜனநாயகத்தின் தாயகமாகும். சில ஆண்டுகளுக்கு முன்புதான் நமது அரசமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. இத்தகைய ஒரு நாடு முக்கியமான தொழில்துறையில் வெற்றி பெறும்போது, அது ஒட்டுமொத்த உலகின் விநியோகச் சங்கிலியையும் வலுப்படுத்துகிறது. இன்று விநியோகச் சங்கிலிகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் சூழலில், இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் வளர்ச்சிகளை இந்த விரிவான கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்க்க வேண்டும். இந்தியாவின் எதிர்பார்ப்புகள் உங்கள் முன் உள்ளன; இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் புதிய வாய்ப்புகள் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளன. இந்த நிகழ்வுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
***
(Release ID: 2311301)
AD/VK/RJ