பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரிஸில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் காணொலி வாயிலாக நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 3:22PM by PIB Chennai

எனது நண்பர் அதிபர் மேக்ரான் அவர்களே, மேன்மைமிகு தலைவர்களே, சிறப்புமிக்க பங்கேற்பாளர்களே, வணக்கம்!

முதல் சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பான அழைப்பை விடுத்ததற்கும், சரியான நேரத்தில் இந்த முக்கிய முயற்சியை மேற்கொண்டதற்கும் அதிபர் மேக்ரான் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக விண்வெளி நமது கற்பனைக்கு உத்வேகம் அளித்து வருகிறது. இன்று, காலநிலை மற்றும் பயிர்கள் முதல் பெருங்கடல்கள் மற்றும் மக்கள் வாழும் சமூகங்கள் வரை, பூமியில் உள்ள வாழ்க்கையை விண்வெளி வடிவமைக்கிறது. விண்வெளியின் வாய்ப்புகள் எல்லையற்றவை. அதற்கான நமது பொறுப்பு அனைவருக்கும் பொதுவானது. சுற்றுப்பாதைகளில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொழில்நுட்பங்கள் மேலும் சக்திவாய்ந்ததாகவும், விண்வெளித் துறையில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தும் வரும் நிலையில், நமது முதன்மை தேர்வு எப்படியிருக்கவேண்டும் என்றால், மோதலைக் காட்டிலும் ஒத்துழைப்புக்கு முன்னுரிமை; குறுகிய கால ஆதாயத்தைக் காட்டிலும் நீடித்ததன்மைக்கு முன்னுரிமை; ஒதுக்கிவைப்பதைக் காட்டிலும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு முன்னுரிமை என தெளிவாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இந்தியாவின் அணுகுமுறை, “வசுதைவ குடும்பகம்”, அதாவது “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற சிந்தனையில் வேரூன்றியுள்ளது. இந்த உணர்வு இனி பூமியைத் தாண்டியும் பயணிக்க வேண்டும். சர்வதேச சட்டம், பேச்சுவார்த்தை மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, பாதுகாப்பான, உறுதியான, அமைதியான மற்றும் நிலையான விண்வெளித் துறையை நாங்கள் ஆதரிக்கிறோம். அறிவியல் தரவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பொதுநலனுக்குப் பயன்பட வேண்டும்.

இந்தியாவின் விண்வெளிப் பயணம் இந்தக் கொள்கையைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பயணத்தின் மையமாக விளங்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தனது சிறப்பான செயல்திறன் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் விண்வெளித் திட்டங்களுக்காக உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. அதன் திறன்கள் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குப் பயன்படுவதுடன், வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட துறைகளுக்கும் சேவை செய்து வருகின்றன. 34 நாடுகளைச் சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இஸ்ரோவின் தொழில்நுட்பங்களும் கூட்டு செயல்பாடுகளும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயனளித்து வருகின்றன.

இந்த உலகளாவிய நம்பிக்கைக்குப் பின்னால் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் உள்ளன. இரவு பகலாக உழைத்து, ஒவ்வொரு திட்டத்தின் வெற்றி, ஒவ்வொரு சாதனை என இஸ்ரோவின் உலகளாவிய நற்பெயரை அவர்கள் உருவாக்கியுள்ளனர். விண்வெளித் துறையில் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்குப் பெருமைக்குரிய இடத்தையும் அவர்கள் பெற்றுத் தந்துள்ளனர்.

சந்திரயான்-3 திட்டத்தின் மூலம், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆதித்யா-எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய பல ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது. கடந்தாண்டு, ஓர் இந்தியர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கும்போது, 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கென்று ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதையும், 2040ம் ஆண்டுக்குள் ஓர் இந்தியரை நிலவுக்கு அனுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த அனைத்து முயற்சிகளிலும் நமது வழிகாட்டும் கொள்கை தெளிவாக உள்ளது: இவற்றின் பயன்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் சென்றடைய வேண்டும்.

இஸ்ரோவுடன் இணைந்து, இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையும் மிகப்பெரிய அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தொழில்முனைவோரின் ஆற்றல், இஸ்ரோவின் சிறப்பான செயல்திறனுடன் இணைந்து வருகிறது. 1960-களில் தும்பாவில் இந்திய விண்வெளித் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே பிரான்ஸ் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. இன்று, புவி கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. இது அறிவியல் சிறப்பையும் மனிதநேய நோக்கத்தையும் ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் அடுத்தகட்ட விண்வெளிப் பயணத்தில் பிரான்ஸும் உலக நாடுகளும் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.

நண்பர்களே,

பாரிஸில் நடைபெறும் இந்த விண்வெளி உச்சி மாநாடு ஒரு தெளிவான செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லட்டும்: ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகவும், வருங்கால தலைமுறைகளுக்காகவும் நாம் ஒன்றாக ஆராய்வோம், ஒன்றாகப் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம், ஒன்றாக விண்வெளியைப் பாதுகாப்போம். இங்கு பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

***

(Release ID: 2308678)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327151) வருகையாளர் எண்ணிக்கை : 8