பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதி தொழில்நுட்ப திருவிழா 2026 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 8:14PM by PIB Chennai

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, உலகளாவிய நிதி தொழில்நுட்ப  திருவிழாவின் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், நிதி தொழில்நுட்ப  உலகைச் சேர்ந்த அனைத்து கண்டுபிடிப்பாளர்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், மற்றும் தாய்மார்களே, பெருமக்களே.

உலகளாவிய நிதி தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளை நான் வரவேற்கிறேன். இன்று மற்றொரு ஹாட்ரிக் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு ஹாட்ரிக் என்பது 2024 இல் மூன்றாவது முறையாக மத்திய அரசு அமைக்கப்பட்டதாகும், மற்றொரு ஹாட்ரிக் என்பது உங்கள் மத்தியில் நான் இருப்பது ஆகும். உலகளாவிய நிதி தொழில்நுட்ப  திருவிழாவில் நான் பங்கேற்கும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டு இதுவாகும். இந்த ஹாட்ரிக் சாதனை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு நீங்களும் உங்களது பணியும் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது.

நண்பர்களே,

நான் இங்கு வரும்போதெல்லாம் அதிக இளைஞர்களைக் காண்கிறேன், அதிக ஆற்றலை உணர்கிறேன். சாத்தியக்கூறுகளின் எல்லைகள் விரிவடைவதை நான் காண்கிறேன். ஆபத்துக்களை எதிர்கொள்ளும் திறன் அதிகரித்து வருவதும், கனவுகள் மிகவும் துணிச்சலானதாக மாறுவதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவின் எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கை மேலும் வலுப்பெற்று வருகிறது.

நண்பர்களே,

நிதி தொழில்நுட்ப துறையின் இந்த எழுச்சிமிகு சூழலுக்கு மத்தியில், மும்பை நகரும் இந்த நாட்களில் தனது உச்சக்கட்ட பண்பாட்டு உற்சாகத்தை அனுபவித்து வருகிறது. இன்னும் சில நாட்களில், மகாராஷ்டிராவிலும் நாடு முழுவதிலும் கணபதி உற்சவ திருவிழா தொடங்கவுள்ளது. நமது பாரம்பரியத்தில், எந்தவொரு சுப காரியத்திற்கு முன்பாகவும் விநாயகப் பெருமான் நினைவுகூரப்படுகிறார். கணபதி பாபாவை வணங்கி, 'உலக நிதி தொழில்நுட்ப திருவிழா 2026' நிகழ்விற்காக உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உலகளாவிய சூழ்நிலை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உலகம் மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற ஒரு காலக்கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலிகள் அழுத்தத்தில் உள்ளன, வர்த்தகத்தில் பதற்றங்கள் நிலவுகின்றன. இந்த நிலைமை பல மாதங்களாக நீடித்து வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு மிகவும் சவாலானதாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையிலும், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியடையும் போது, உலகம் புதிய நம்பிக்கையைப் பெறுகிறது. இந்த நம்பிக்கையை இங்குள்ள உங்கள் முகங்களில் என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நண்பர்களே,

இந்தியாவின் மீது அதிகரித்து வரும் இந்த நம்பிக்கைக்கு மற்றொரு உதாரணம் நமது இறையாண்மை கடன் மதிப்பீடு ஆகும். சமீபத்தில், ஜப்பானிய கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை 'ஏ'  பிரிவுக்கு உயர்த்தியது. மதிப்பீடு உயர்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம், ஆனால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த நல்வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது மிகச் சிலருக்கே தெரியும். இந்தியாவின் வளர்ச்சி வேகம், நமது பேரியல் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து உலகம் எவ்வளவு உறுதியுடன் உள்ளது என்பதை இது காட்டுகிறது. நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ் இன்னும் அதிவேகத்தில் முன்னோக்கிச் செல்லும்.

நண்பர்களே,

இந்தியாவின் ஃபின்டெக் வளர்ச்சிப் பயணம் மிகவும் அசாதாரணமானது. இதன் மிகப்பெரிய தூண்களில் ஒன்றாகத் திகழ்வது நமது யுபிஐ  ஆகும். கடந்த ஆண்டும் நான் இதைப் பற்றிப் பேசினேன். ஆனால் இந்த மாற்றம் எவ்வளவு பெரியது என்றால், நிதி தொழில்நுட்பம் பற்றி எப்போது விவாதிக்கப்பட்டாலும், யுபிஐ இல்லாமல் அது எப்போதும் முழுமையடையாது.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 25 அன்று, யுபிஐ 10 ஆண்டுகளை நிறைவு செய்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, "உங்கள் வங்கி உங்கள் விரல் நுனியில் இருக்கும்" என்று நான் கூறியபோது, சிலர் அது சாத்தியமற்றது என்று நினைத்தார்கள்.  நன்கு விவரம் அறிந்த மனிதர்களைப் பற்றித்தான் நான் சொல்கிறேன், அவர்களின் முகங்களை நினைவில் வையுங்கள். அப்போதுதான் புதிதாக வங்கிக் கணக்குத் தொடங்கிய பல கோடி இந்தியர்களைப் பற்றி நான் பேசவில்லை. அவர்களின் தலைமுறையினர் வங்கியின் கதவைக் கூட பார்த்ததில்லை. ஆனால் இன்று, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாருங்கள்.  தலைமுறை தலைமுறையாக வங்கி முறைக்கு வெளியே இருந்த அதே பல கோடி மக்கள், இந்தியாவில் நிதி தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய இயக்க சக்தியாக மாறியுள்ளனர்.

நண்பர்களே,

இன்று, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 2,400 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, நாம் இங்கே அமர்ந்திருக்கும் இந்த 10 நிமிடங்களில் மட்டும், நாடு முழுவதும் சராசரியாக 50 லட்சத்திற்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் தாக்கம் காரணமாகவே பிரான்ஸ் அதிபர் மேக்ரான், "யுபிஐ என்பது வெறும் தொழில்நுட்பக் கதை மட்டுமல்ல, அது ஒரு நாகரிகத்தின் கதை" என்று குறிப்பிட்டார்.

மேலும் நண்பர்களே,

யுபிஐ என்பது இனி இந்தியாவுக்கு மட்டும் வரம்புக்குட்பட்டது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக வெளிநாட்டில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று யாராவது கூறியிருந்தால், அதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது நிஜமாகியுள்ளது. இந்தியாவின் யுபிஐ இப்போது 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. நாம் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறோம் என்பதை இத்தகைய அசாதாரணமான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால் — இந்த பயணத்தில் நாம் திருப்தியடைந்துவிட வேண்டுமா? இந்தியாவில் நிதி தொழில்நுட்ப வெற்றியை இறுதியானது என்று கருத வேண்டுமா?

நண்பர்களே,

கொள்கை மற்றும் நிர்வாகத் துறையில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். இந்த ஆண்டுகளில் என்னைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். மோடி என்பவர் ஒரு மைல்கல்லை அடைந்து, அதைக் கொண்டாடி, அதிலேயே திருப்தியடைந்து நின்றுவிடுபவர் அல்ல. ஒரு இலக்கு எட்டப்பட்டவுடன், அதைவிட பெரிய இலக்கிற்கு நான் உடனடியாகத் தயாராகத் தொடங்கிவிடுவேன்.

நண்பர்களே,

இன்று நமது யுபிஐ பல நாடுகளைச் சென்றடைந்துள்ளது. ஆனால் இது முதல் படி மட்டுமே. அந்த நாடுகளின் பணப்பரிவர்த்தனை அமைப்புகளுடன் இணைப்பதே நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும். சிங்கப்பூருடன் இதை நாம் ஏற்கனவே செய்துவிட்டோம். இதன் காரணமாக, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் ஒரே நகரத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையே நடப்பது போலவே நிகழ்கின்றன. இதேபோன்ற இணைப்பை நாம் மற்ற நாடுகளுடனும், மற்ற சந்தைகளுடனும் உருவாக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தியர்கள் எங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்களோ, இந்தியா எங்கு பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறதோ, எந்த நாடு நம்முடன் இணைந்து பயணிக்கத் தயாராக இருக்கிறதோ,  அவை அனைத்தையும் இணைக்க நாம் பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே,

வெளிநாடுகளில் பெருமளவிலான இந்தியர்கள் பணியாற்றி வருவதால் இது மிகவும் அவசியமாகும். மேலும், தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதில் உலகிலேயே இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். ஆனால் இன்று, அந்தப் பணத்தின் ஒரு பகுதி பரிவர்த்தனைக் கட்டணங்களில் இழக்கப்படுகிறது. யுபிஐ இதிலிருந்தும் இந்தியர்களைக் காப்பாற்ற முடியும், இதன் மூலம் இந்தியக் குடும்பங்களுக்குப் பணம் இன்னும் விரைவாகச் சென்றடையும்.

நண்பர்களே,

இன்று, இந்தியாவில் அட்டை மூலம் நீங்கள் எவ்வாறு பணப்பரிவர்த்தனை செய்கிறீர்கள்? இந்த முறை வேறு எங்கோ வடிவமைக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் இயங்குகிறது. மற்றவர்கள் உருவாக்கிய அந்தத் தரநிலைகளையும் விதிகளையுமே நாம் ஏற்றுக்கொண்டோம். அக்காலத்தில் நம்மிடம் சொந்தமாக எந்த விருப்பத்தேர்வும் இருக்கவில்லை. ஆனால் இப்போது நம்மிடம் சொந்த விருப்பத் தேர்வு உள்ளது. இப்போது நாமே நமது சொந்த விதிகளையும் தர நிலைகளையும் உருவாக்கி, அவற்றை உலகத்துடன் இணைக்க முடியும். உங்களால் இதைச் செய்ய முடியும் என்பதில் உங்கள் அனைவர் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நண்பர்களே,

தொழில்நுட்பம் என்பது அனைவரையும் உள்ளடக்குவதற்கான மிகவும் பயனுள்ள கருவியாகும். இதை யுபிஐ நிரூபித்துக் காட்டியுள்ளது. நிதி தொழில்நுட்பம் என்று வரும்போது, பாரம்பரிய முறைகளால் செல்ல முடியாத இடங்களைச் சென்றடைவதே இதன் தனித்துவமான அம்சமாக இருக்க வேண்டும். பாரம்பரிய வங்கிகளால் எட்ட முடியாத இடங்களுக்கும், வங்கிக் கிளைகளால் சென்றடைய முடியாத இடங்களுக்கும், அந்த இடத்திற்கே, அந்த நபருக்கே வங்கி முறையை யுபிஐ கொண்டு சேர்த்துள்ளது.

நண்பர்களே,

இன்று, நிதி தொழில்நுட்ப சந்தையின் பெரும்பகுதி பணப்பரிவர்த்தனைகளாக மட்டுமே உள்ளது. ஆனால் இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும், அதுவும் விரைவாக நகர வேண்டும். நிதி தொழில்நுட்ப சந்தையில், பணப் பரிவர்த்தனைகளுடன் சேர்த்து, கடன் சேவைகளின் பங்கு அதிகரிக்க வேண்டும், காப்பீட்டின் பங்கு அதிகரிக்க வேண்டும், சேமிப்பு, முதலீடுகள் மற்றும் ஓய்வூதியத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

நண்பர்களே,

பாரம்பரிய நிதி முறைகளின் எல்லைக்கு வெளியே உள்ள அல்லது சரியாகக் கவனிக்கப்படாத நாட்டின் ஆற்றலை நிதி தொழில்நுட்பம் வெளிக்கொணர முடியும் என்று நான் நம்புகிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு, இந்த ஆற்றலை வெளிக்கொணர்வது மிகவும் அவசியமாகும்.

நண்பர்களே,

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் வெற்றியில் இதற்கான தாக்கத்தை நாம் ஏற்கனவே காண முடிகிறது. நமது சாலையோர வியாபாரிகள் நகரங்களின் முதுகெலும்பாக உள்ளனர். ஆனால் அவர்கள் நாட்டின் வங்கி முறைக்கும், முறைசார் கடன் அமைப்புக்கும் வெளியே இருந்தனர். பிரதமரின் ஸ்வநிதி திட்டம் லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகளை முறைசார் அமைப்பில் இணைத்தது. இப்போது இந்த நண்பர்களிடம் ஸ்வநிதி கிரெடிட் கார்டும் உள்ளது.  அதாவது முறைசார் கடன் வசதியைப் பெறுவதற்கான கருவி அவர்களிடம் உள்ளது. மேலும், இந்த பயனாளிகளின் சராசரி ஆண்டு வருமானம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களின் இருப்பிடம், ஊட்டச்சத்து, சுகாதார வசதிகள் மற்றும் குழந்தைகளின் கல்வியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்தத் திட்டத்தை 2030 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நண்பர்களே,

யுபிஐ இல்லை என்றால் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு யுபிஐ மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க நிதி தொழில்நுட்பத்தின் ஆற்றலை நாம் பயன்படுத்த வேண்டும். மூலதனம் மற்றும் கடன் உலகத்திலிருந்து ஒரு உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

சிறிய கடை நடத்தி வரும் ஒரு சகோதரி இருக்கிறார். அவர் தினமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பெறுகிறார். இப்போது அவரது வருமானம் மற்றும் செலவுகள் ஒரு தெளிவான போக்கைக் காட்டுகின்றன. அவரது தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறிய மூலதனமே போதுமானது என்ற நிலையைத் தாண்டி அவர் வந்துவிட்டார். இப்போது தனது தொழிலை விரிவாக்க அவருக்குப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகின்றன; இதற்காக அவருக்கு இன்னும் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. இது மிகப்பெரிய கடன் தொகை அல்ல. ஆனால், பாரம்பரிய கடன் முறைகளால் அவருக்குத் திறம்பட சேவை வழங்க முடியாத அளவுக்கு அவரது தொழில் இன்னும் சிறிய அளவிலேயே உள்ளது. இத்தகைய தொழில்களின் தேவைகளைக் கணித்து, பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வளிக்க நிதி தொழில்நுட்பத்  துறையால் முடியும். இத்தகைய தொழில்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

நண்பர்களே,

இத்தகைய தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், அவற்றுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மாதிரிகளை உருவாக்கவும் தொழில்நுட்பம் நமக்கு உதவும். நிதி தொழில்நுட்பத் துறையின் அடுத்த அத்தியாயம் இங்குதான் எழுதப்படும் என்று நான் நம்புகிறேன். பணப்பரிவர்த்தனைகளில் நமது வேகத்தையும் அளவையும் நாம் நிரூபித்துள்ளோம். இப்போது, பணப்பரிவர்த்தனை அல்லாத பிற நிதிச் சேவைகளின் பங்களிப்பை அதிகரிக்க நாம் உதவ வேண்டும். உதாரணமாக, ஒரு பொருட்களை விநியோகம் செய்யும் ஊழியர் அல்லது சிறிய வேலை செய்யும் ஒருவர், அவர் மாதந்தோறும் சம்பாதிக்கிறார், ஆனால் அவருக்குச் சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற சேவைகள் தேவைப்படுகின்றன. ஃபின்டெக் துறையால் இத்தகைய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அதேபோல, காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற நிதிச் சேவைகளைப் பெறுவதையும் ஃபின்டெக் எளிதாக்க முடியும். இன்று கியூஆர் குறியீடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது எவ்வளவு எளிமையாகவும், சுலபமாகவும், எளிதில் பெறக்கூடியதாகவும் இருக்கிறதோ, அதேபோல இவை அனைத்தையும் மாற்ற முடியும்.

நண்பர்களே,

21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு முடிவடைந்துள்ளது. இப்போது நாம் 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இரண்டாவது காலாண்டு நமக்கு மேலும் புதிய சாத்தியக்கூறுகளைக் கொண்டு வந்துள்ளது. ஏஜென்டிக் ஏஐ, டோக்கனைசேஷன், குவாண்டம் போன்ற தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் சாத்தியக்கூறுகளின் புதிய கதவுகளைத் திறந்து வருகின்றன. இப்போது இந்த சாத்தியக்கூறுகளை உண்மையான தாக்கமாக எவ்வாறு மாற்றுவது என்பதே நமக்கு முன்னால் உள்ள சவாலாகும். இதற்காக நமது நிதி தொழில்நுட்ப  நிறுவனங்கள் தங்களுக்குச் சில பணிகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் உங்கள் முன் சில ஆலோசனைகளையும் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக,  இந்தியாவில் இணையப் பாதுகாப்பை  மிகச் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இரண்டாவதாக, நமது துறை தனக்கென சொந்த அறநெறி சார்ந்த தரவு பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக,  நிதி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொழில் துறைக்கு இடையே வலுவான புதுமைப் படைப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். நான்காவதாக நிதி தொழில்நுட்ப நுகர்வோர் பாதுகாப்பு குறியீடு  இருக்க வேண்டும்; இதன் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனமும் வெளிப்படையான மதிப்பீட்டைப் பெற முடியும். இந்த அளவுகோல்களில் நம்மை நாம் சோதித்துப் பார்த்தால், இந்தியாவின் நிதி தொழில்நுட்பத் துறை எண்ணற்ற சாத்தியக்கூறுகளின் நுழைவாயிலாக மாற முடியும். நம்மிடம் அனுபவம் உள்ளது, அதை தரைமட்டத்தில் செயல்படுத்துவதற்கான வழியும் உள்ளது. எனவே, நாம் விரைவாகப் பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே,

 டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிப் பயணம் இப்போது ஒரு புதிய அத்தியாயத்திற்குத் தயாராக உள்ளது. இதுவரை நமது நிதி தொழில்நுட்ப துறையின் பயணத்தின் வெற்றிக்கு அதன் பிரம்மாண்ட அளவு, பரந்த எல்லை, பாதுகாப்பான அமைப்புகள், தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் மக்களின் நம்பிக்கையே காரணமாகும். இந்த அடிப்படை மதிப்புகளை மனதில் கொண்டு, நிதி தொழில்நுட்பத்  துறை அடுத்த தலைமுறைக்கான புதுமைப் படைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. 

***

(Release ID: 2308018)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327148) வருகையாளர் எண்ணிக்கை : 3