பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வதோதராவில் நடைபெற்ற ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான நமோ’ நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 4:23PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாய் படேல் அவர்களே, இணையவழியாக நம்முடன் இணைந்துள்ள பல்வேறு மாநிலங்களின் தலைவர்களான மகாராஷ்டிர ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களே, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் சுனேத்ரா பவார் அவர்களே, மற்ற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, அங்கு திரண்டுள்ள லட்சக்கணக்கான பொதுமக்களே,

இங்கு மேடையில் என்னுடன் இருக்கும் மத்திய அமைச்சரவை சகாவான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, இங்கு பங்கேற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளே, எனது அன்பான குஜராத் சகோதர, சகோதரிகளே,

குறிப்பாக, வதோதராவில் உள்ள இந்த மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழக மைதானம் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து வரவேற்கிறது. இதன் மூலம் வளர்ச்சியின் இந்தப் பெருவிழா இங்கு ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.

நண்பர்களே,

இன்று வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்திற்கு மேலும் வேகம் அளிப்பதற்காக உங்களிடையே வந்துள்ளேன். சற்று நேரத்திற்கு முன்பு, நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் இங்கு தொடங்கி வைக்கப்பட்டன. பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக நாட்டு மக்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வளர்ச்சித் திருவிழாவையொட்டி, சேவை உணர்வுடன் வதோதரா மாநகரம் முழுவதும் நீங்கள் மேற்கொண்ட தூய்மை மற்றும் வரவேற்புப் பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. வதோதரா நகரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். நீங்கள் வெளிப்படுத்திய அந்த உணர்வும், ஆர்வமும் என்னை மிகவும் பெருமைப்பட வைத்தது. நேற்று நான் ஒரு காணொலியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்தபோது எனது நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது. “ஆஹா! இதுதான் எனது வதோதராவா?” என்று வியக்கும் அளவுக்கு இருந்தது. இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்குப் பிறகு நவராத்திரி விழாவும் வரவுள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி விழாக்களின் போது குஜராத்தின் முழு கவனமும் வதோதரா மீதுதான் இருக்கும். கடந்த ஒரு வாரமாகவே ஒவ்வொரு குடும்பமும் தூய்மையான சூழலை உருவாக்கியிருப்பதை இன்று நான் பார்த்தேன். விநாயகப் பெருமான் இந்த முறை வதோதராவுக்கு வருகை தரும்போது, அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களும் வதோதரா மீது பொழியும் என்று நான் உணர்கிறேன்.

நண்பர்களே, 

இந்த ஆண்டு செங்கோட்டையில் இருந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாடுகளின் ஏழு வழிமுறைகளை கொண்ட செயல்திட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்தேன். அவற்றில் ஒரு திட்டம் ‘விரைவு சக்தி’ ஆகும். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, காலத்தின் தேவைக்கேற்ப தடையற்ற மற்றும் விரைவான இணைப்புப் போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது. வதோதரா நகரில்தான் விரைவு சக்தி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இன்று, அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தின் கடைசி இணைப்புகளும் இங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளன. இன்று, 2,800 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத் திட்டம் நிறைவடைந்துள்ளது. 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.

நண்பர்களே,

இந்த அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் செயல்பாட்டு நடைமுறை எவ்வாறு மாறியுள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும். இந்த வழித்தடத்திற்கான யோசனை 2004ம் ஆண்டிலேயே உருவானது. அதாவது, இங்கு இருக்கும் இளைஞர்கள் அனைவரையும் நான் பார்க்கிறேன். இந்த யோசனை உருவானபோது, உங்களில் பலர் பிறந்துகூட இருக்கமாட்டீர்கள். 2006ம் ஆண்டு, இந்தப் பணியை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2014ம் ஆண்டு வரை கோப்புகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று கொண்டே இருந்தன. கோப்புகள் மேசைகளுக்கு இடையே பயணம் செய்தன. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் கோப்புகளுக்குக்கூட ஒரு தனி வழித்தடம் கிடைக்கவில்லை. கோப்புகள் தேங்கிக் கிடந்தன, நிலுவையில் இருந்தன, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. 2014ம் ஆண்டு, வதோதரா மக்களும், குஜராத் மக்களும், நாட்டு மக்களும் என்னை குஜராத்திலிருந்து தில்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். முந்தைய அரசாங்கம் 2014ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. நீங்கள் என்னை அனுப்பி வைத்தீர்கள்; அவர்கள் ஆட்சியிலிருந்து வெளியேறினர். உண்மை என்னவென்றால், ஏழு, எட்டு ஆண்டுகளில் ஒரு கிலோமீட்டர் நீளம்கூட சரக்கு வழித்தடப் பணி நிறைவடையவில்லை. எனது இளம் நண்பர்களே, கவனமாகக் கேட்டு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாடு அவர்களின் வேகத்திலேயே தொடர்ந்து சென்றிருந்தால், இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் கடந்தாலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காது. இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கட்டமைப்பையே மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் நிலைமையை அவர்கள் இப்படித்தான் விட்டுச் சென்றிருந்தார்கள்.

நண்பர்களே,

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, நீங்கள் எனக்கு இங்கு அளித்த கல்வியும் கற்றுக்கொடுத்த பாடங்களும், இந்த மண் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களும், அவற்றை என்னுடன் தில்லிக்கு எடுத்துச் சென்றேன். அங்கு சென்றவுடன், இந்தத் திட்டத்திற்கு வேகம் அளிக்கத் தொடங்கினோம். இன்று, 2,800 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடப் பணி நிறைவடைந்துள்ளது. இன்று, கிழக்கு மற்றும் மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள் நாட்டின் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான முக்கிய அடித்தளமாக மாறி வருகின்றன.

நண்பர்களே,

அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உயிர்நாடியாக உள்ளது. இது இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு, பயணிகள் ரயில்களும் சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில்தான் இயக்கப்பட்டன. இதனால் பயணமும் சரக்குப் போக்குவரத்தும் மெதுவாகவே இருந்தன. ஆனால், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் இந்த நிலைமையை மாற்றியுள்ளது. இன்று, கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்களில் தினமும் 430-க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு, ஒரு சரக்கு ரயில் 100 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஆறரை மணி நேரம் எடுத்துக் கொண்டது. இப்போது அதே சரக்கு ரயில் 100 கிலோமீட்டர் தூரத்தை அதில் பாதிக்கும் குறைவான நேரத்தில் கடந்து விடுகிறது. சரக்குகளை லாரி மூலம் அனுப்புவதற்கு வழக்கமாக 30 மணி நேரம் ஆகும் நிலையில், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தில் அதே தூரத்தை 10 முதல் 12 மணி நேரத்தில் கடந்து விட முடிகிறது. இதன் பொருள், இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால், லாரிகளுடன் ஒப்பிடும்போது எரிபொருள் சேமிக்கப்படுகிறது, சரக்குப் போக்குவரத்துச் செலவு குறைகிறது, நேரம் மிச்சமாகிறது, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. அதாவது, ஒரு வழித்தடத்தில் முதலீடு செய்யப்பட்டது; ஆனால் அதன் பலன்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.

நண்பர்களே,

இந்த சரக்கு வழித்தடத்தின் மூலம், கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகளின் விளைபொருட்கள் தற்போது பெரிய சந்தைகளை விரைவாகச் சென்றடைகின்றன. பல்வேறு வகையான பூக்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பருவ காலத்தைப் பொறுத்து விரைவில் அழுகக்கூடிய பொருட்கள் தற்போது சரியான நேரத்தில் சந்தைகளையும் நுகர்வோரையும் சென்றடைய வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

நண்பர்களே,

இந்த சரக்கு வழித்தடம் மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்புக்குரியதாக உள்ளது. சமீபத்தில், மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து வதோதராவுக்கு இரட்டை அடுக்கு கொள்கலன் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அதாவது, ஒரு கொள்கலனின் மேல் மற்றொரு கொள்கலன் வைக்கப்பட்டு, ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலின் மூலம் ஒரே பயணத்தில் மும்பையிலிருந்து வதோதராவுக்கு 250க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லக்கூடிய அளவிலான சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன. 250 லாரிகள்! இப்போது, ‘கோபக்கார மாமா’ வகையைச் சேர்ந்தவர்கள், “லாரி உரிமையாளர்களின் நிலை என்ன ஆகும்? லாரிகள் எங்கே செல்லும்? லாரிகளை வாங்கியவர்களின் நிலை என்ன ஆகும்?” என்று கூச்சலிடுவார்கள். அவர்களுக்காகவும் புதிய பணிகள் உருவாகியுள்ளன. ஆனால் உண்மையில், இப்போது நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு அதிக அளவிலான சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்ல முடிகிறது.

நண்பர்களே,

சரக்கு வழித்தடத்துடன் சேர்த்து, பல தசாப்தங்களாக ரயில் போக்குவரத்து சென்றடையாத இடங்களுக்கும் தற்போது ரயில்வே சென்றடைந்து வருகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றன. முந்தைய அரசாங்கங்களின் காலத்தில், நிதிநிலை அறிக்கையில் ஒன்று அல்லது இரண்டு ரயில்கள் அறிவிக்கப்படும். அதைப் பற்றி ஒரு ஆண்டு முழுவதும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று ஆண்டு முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்றைய நிகழ்ச்சியிலும் பல புதிய ரயில்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய ரயில் வதோதரா, சோட்டா உதய்பூர் மற்றும் அலிராஜ்பூர் மக்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும்.

நண்பர்களே,

சாலைகள், ரயில்வே, மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், எரிவாயுக் குழாய்கள், ஏழைகளுக்கான வீடுகள் ஆகியவை நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்காக உருவாக்கப்படும்போது, மக்களின் வாழ்க்கை எளிதாகிறது. அதே நேரத்தில், சிறியது முதல் பெரியது வரை பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. ரயில்வேயை மட்டும் எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டுக்கான ரயில்வே நிதிநிலை ஒதுக்கீடு ரூ.2.75 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகமாகும். அதாவது, ரயில்வே நவீனமயமாக்கலுக்காக செய்யப்படும் செலவினம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த வேலைவாய்ப்புகள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்திலேயே உருவாகின்றன. சாலைகள், ரயில்வே, குழாய்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டவுடன், அவற்றைச் சுற்றி புதிய தொழில்கள் உருவாகத் தொடங்குகின்றன. புதிய வணிக நிறுவனங்கள் வருகின்றன. இவை அனைத்தும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாடுகளின் ஏழு நீரோடைகளைக் கொண்ட ‘சப்ததாரா’ தொலைநோக்குப் பார்வையை நாட்டின் முன் வைத்துள்ளேன். அவற்றில் ஒரு நீரோடை உற்பத்தித் துறையாகும். இந்த வலிமையை வதோதரா நகரம் நன்கு அறிந்தும், புரிந்தும் வைத்துள்ளது. கல்வி, திறன் மற்றும் தொழில்துறை ஆகியவை எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை வதோதரா கடந்த சுமார் 150 ஆண்டுகளாக எடுத்துக்காட்டி வருகிறது. பல தசாப்தங்களுக்கு முன்பு இங்கு துணிநூல் மற்றும் ஓடுகள் உற்பத்தியுடன் தொடங்கிய பயணம், பின்னர் எண்ணெய் மற்றும் பெட்ரோவேதிப் பொருட்கள் உற்பத்தித் துறையில் முன்னேறியது. கடந்த இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகளில், வதோதரா குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த தொடக்க காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது வதோதரா நகரம் எப்போதும் என்னிடம் ஒரு தனிப்பட்ட கோரிக்கையை முன்வைத்து வந்தது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு குழுவினர் வந்து, “வதோதராவில் உற்பத்தித் துறைக்காக ஏதாவது செய்யுங்கள்” என்று கூறுவார்கள். ஏனென்றால், அப்போது இங்கு வந்தால் ஜோதி, எல்.எம்.பி., ஜி.எஸ்.எஃப்.சி. ஆகியவற்றைத்தான் பார்க்க முடியும்; வேறு எதுவும் பெரிதாகக் கண்ணுக்குத் தெரியாது. இன்று எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது! இப்போது நாட்டின் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவப் போக்குவரத்து விமானம் உருவாக்கப்படும் நகரமாகவும் வதோதரா அறியப்படுகிறது. சி-295 விமானத்தின் முதல் பயணத்தை ஏற்கெனவே இங்குள்ள வானில் பார்த்திருக்கிறோம். இந்தப் பெருமையைப் பெற்றுள்ள வதோதரா மக்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாட்டின் உற்பத்தித் துறையைப் பற்றிப் பேசும்போது, மேலும் ஒரு புள்ளிவிவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த பத்தாண்டுகளில், ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் என்ஜின்கள் தயாரிப்பில் இந்தியா ஒரு முக்கிய உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா சுமார் 50,000 நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தைக் கவனியுங்கள்.  2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. முந்தைய அரசாங்கத்தால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை. ஆனால், நாம் 50,000 நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளோம். மேலும், இந்திய ரயில்வேயில் சரக்கு ரயில்களுக்காக சுமார் 2.5 லட்சம் சரக்கு பெட்டிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இப்போது இந்தியா, சிப் முதல் கப்பல் வரை உற்பத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. அதாவது, உதிரிபாகங்கள் நம்முடையவையாகவும், தயாரிப்புகள் நம்முடையவையாகவும் இருக்கும் வகையில், தற்சார்பு என்ற முழுமையான சங்கிலி இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கப்படும். சூரிய மின்சக்தித் துறையில் இதை நாம் காண்கிறோம். உதாரணமாக, கடனா அணையில் அமைக்கப்பட்டு வரும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் சூரிய மின்சக்தித் திட்டங்களை அமைப்பது மிகவும் செலவு மிக்கதாக இருந்தது. ஏனெனில், ஒளிமின்னழுத்தத் தொகுதிகள் மற்றும் அனைத்து வகையான உபகரணங்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில், ஒளிமின்னழுத்தத் தொகுதிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளோம். இன்று, 200 ஜிகாவாட்டுக்கும் அதிகமான உற்பத்தித் திறனை நாம் உருவாக்கியுள்ளோம். இதுபோன்ற தற்சார்பு காரணமாக, பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் விரிவடைந்து வருகிறது. இதுவரை, நாட்டில் 55 லட்சம் குடும்பங்கள் தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவியுள்ளன. இதில் 11 லட்சம் குடும்பங்கள் குஜராத்தைச் சேர்ந்தவை. இங்குள்ள இத்தனை குடும்பங்கள் மின்சார உற்பத்தியாளர்களாக மாறியுள்ளன. இதன் காரணமாக, உற்பத்தி முதல் நிறுவுதல் மற்றும் பராமரிப்புச் சேவை வரை எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பல புதிய உதிரிபாகங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களும் உருவாகியுள்ளன.

நண்பர்களே,

மூலை முடுக்கெல்லாம் பொய் முழக்கங்களைப் பரப்புகிறவர்களைப் பார்க்க முடியும். ஆனால், இந்தியாவின் இளைஞர்கள் உண்மையின் பெருமுழக்கத்தோடு நடக்கிறார்கள், உண்மையின் பெருமுழக்கத்தோடு நகர்கிறார்கள், உண்மையின் பெருமுழக்கத்திற்காவே வாழ்கிறார்கள். சூரிய சக்தி, காற்று மின்சாரம், நீர்மின்சாரம், அணுசக்தி என ஒவ்வொரு துறையிலும் இன்றைக்கு மத்திய அரசு எவ்வாறு தீவிரமாகக் கவனம் செலுத்திச் செயல்பட்டு வருகிறது என்பதை நமது இளம் தோழர்கள் பார்த்து வருகின்றனர்.

நண்பர்களே,

வரவிருக்கும் காலத்தில், ஒவ்வொரு நவீன துறையும் மின்சாரத்தையே நம்பி இயங்கும்; மின்சார சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும். உதாரணமாக, சிப் (சில்லு) தொழில், தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்கள் அனைத்திற்கும் மின்சாரமே உயிர்நாடியாகும். ஆகவே, உலக நாடுகளுக்கு முன்பாக நாம் செயற்கை நுண்ணறிவில் ஒரு வல்லரசாக மாற வேண்டுமென்றால், நாடு தனது சுற்றுச்சூழல் அமைப்பை இப்போதே தயார்படுத்தி கட்டமைக்க வேண்டும்.

இதைத்தான் இந்தியா களத்தில் தீவிரமாகச் செய்து வருகிறது. அதனால்தான் சில நாடுகளுடன் யுரேனியத்திற்காகவும், மற்ற நாடுகளுடன் அவசியமான கனிமங்கள் மற்றும் அரிதான கனிமங்களுக்காகவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க  உங்களது எதிர்காலத்திற்காக இந்த முயற்சிகள் அனைத்தும் இரவும் பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

உலகம் வேகமாக மாறி வருகிறது. எனவே, உலகின் தேவைகளும் மாறி வருகின்றன. அதேபோல், நமது படிப்பு மற்றும் கற்றல் முறைகளும் மாறி வருகின்றன. முன்பு பட்டப் படிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது பட்டப் படிப்புகளுடன் திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திறன்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும், அந்தத் திறன்களை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் மிகப்பெரிய தேவையாக மாறியுள்ளது. அதனால்தான், நமது கல்விக் கொள்கையையும், கற்பித்தல் மற்றும் பயிற்சி நிறுவனங்களையும் புதிய வடிவில் மாற்றி அமைத்து வருகிறோம். இந்த உணர்வுடன், இளைஞர் சக்திக்காக செங்கோட்டையில் இருந்து இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன். முதல் அறிவிப்பு, நாட்டின் பாரம்பரியத் தேவையுடன் தொடர்புடையது. நமது நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு ஆண்டும், நமது நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வருமானத்தில் பெரும் பகுதி இந்தக் குழந்தைகளுக்கான பயிற்சிக்காகச் செலவிடப்படுகிறது. இதுபோன்ற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பணத்தைச் சேமிப்பதே நமது முயற்சியாகும். அதனால்தான், மாணவர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தற்போது முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் சிறந்த ஆசிரியர்களால் இந்தப் பயிற்சி வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நமது இளைஞர்களுக்கான பயிற்சிப் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ளும்.

நண்பர்களே,

இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவில் திறமை பெற்றிருப்பதும் அதே அளவுக்கு முக்கியமானது. நமது இளைய தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். செயற்கை நுண்ணறிவைக் கற்றவர்களுக்கான தேவை தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே உள்ளது என்று கருத முடியாது. ஒருவர் இந்தத் திறனைப் பெற்றிருந்தால், வேளாண்மைக்காக புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்க முடியும். சுகாதாரத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும். உற்பத்தித் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும். ரோபோட்டிக்ஸ் துறையில் தனது சொந்த புதிய நிறுவனத்தையும் தொடங்க முடியும். எனவே, செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொண்டு, நாட்டுக்கும் உலகத்துக்கும் தேவையான தொழில்துறைகளில் அதை திறம்படப் பயன்படுத்தும் இளைஞர்கள் நம்மிடம் இருப்பது அவசியம். இதற்காக அரசு ஒரு மிகப்பெரிய இயக்கத்தைத் தொடங்கவுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் தற்போதைய காலக்கட்டம் முன்னெப்போதும் இல்லாத சிறப்புமிக்க காலமாகும். இது இந்தியாவின் இளைஞர் சக்தி எழுச்சி பெறும் காலம். இந்தியாவின் வரலாற்றில் இதுபோன்ற காலம் மீண்டும் வரப்போவதில்லை. எனவே, 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நமது உயர்ந்த இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க வேண்டும். இந்த அழைப்புடன், வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது வதோதரா மக்களுக்காக என்னிடம் ஒரு பணியுள்ளது. அதைச் செய்வீர்களா? நிச்சயமாகச் செய்வீர்களா? நீங்கள் வதோதராவை மிகவும் தூய்மையாக வைத்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் மிகுந்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நமது இளைஞர்கள் இரவு பகலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டதை நான் பார்த்தேன். ஆனால், நாம் ஒருமுறை உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். இனிமேல் வதோதரா மீண்டும் அசுத்தமாக மாற நாம் அனுமதிக்க மாட்டோம். நம் ஒவ்வொருவரும், “நானே குப்பையை உருவாக்க மாட்டேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டால், வதோதரா அசுத்தமாகுமா? வதோதரா அசுத்தமாகுமா? அப்படியானால், தீபாவளி மிகவும் பிரகாசமாகக் கொண்டாடப்படும். நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மகத்தான சிறப்புடன் நடைபெறும். எனவே, இந்த அளவிலான பணியை நாம் நிச்சயமாகச் செய்வோம்.

 

நன்றி.

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

***

(Release ID: 2307844)

AD/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326127) வருகையாளர் எண்ணிக்கை : 9