பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு செயலாளர்களுடனான 3-வது உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2026 9:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு செயலாளர்களுடனான 3-வது உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்கள், துறைகளின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சனைகள், புள்ளிவிவரங்களைக் கையாள்வதுடன் நின்றுவிடாமல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்து நீண்ட கால தொலைநோக்குப் பார்வையுடன் செயலாளர்கள் சிந்திக்க வேண்டும் என்றார். தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்து செயல்படும் மனப்பான்மையைக் களைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இது வெறும் நிர்வாகக் குறைபாடு மட்டுமல்லாமல், அதிகாரிகளின் சிந்தனை சார்ந்த பிரச்சனையாகவும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் அனைவரும் தங்களது பொறுப்புகளை முழுமையாக உணர்ந்து, கூட்டுப் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19, மேற்கு ஆசிய நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இத்தகைய துறைசார் ஒருங்கிணைப்பு நிர்வாகத்தின் இயல்பான பணி கலாச்சாரமாக மாற வேண்டும் என்றார். மனிதத் திறனையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் உறுதிசெய்து கொண்டு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு ஆற்றலை மனித நிபுணத்துவத்துடன் இணைப்பதற்கான புதிய வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொள்கை வகுப்பதில் புதுமையான சிந்தனைகளைக் கொண்டுவர அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், இளைஞர்களிடையே ஒருங்கிணைந்த ஈடுபாடு அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி, புத்தாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் கடல்சார் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை விவரித்த பிரதமர், துறைமுகங்களை மேம்படுத்துவது என்ற நிலையிலிருந்து மாறி, துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்றார். உற்பத்திப் பிரிவுகளுக்கும் ஏற்றுமதி மையங்களுக்கும் இடையே சிறந்த போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் கடல்சார் கட்டமைப்பின் முழுப் பலனையும் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிக்கலான சவால்களை எதிர்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க முழுமையான அரசு அணுகுமுறை, சிறந்த ஒருங்கிணைப்பு, புதுமையான சிந்தனை, கூட்டுப் பொறுப்பு ஆகியவை அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார். உயர் அதிகாரிகள் தங்களது இளநிலை அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையிலும், நட்புடனும் கலந்துரையாடி குழு உணர்வை வளர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவைச் செயலாளர், முக்கிய அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்கள், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301764&reg=3&lang=1  

---

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325865) வருகையாளர் எண்ணிக்கை : 9